தவறான முடிவுகளும் தடுமாறும் தமிழரசும்…!
Share
”தமிழரசுக் கட்சியின் புதிய தலைமை அண்மைய நாட்களில் எடுத்த பல நகர்வுகள் சறுக்கல்களையும் தடுமாற்றங்களையுமே கொடுத்து வந்த நிலையில் அநுரகுமார அரசாங்கத்தின் வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழரசின் பாராளுமன்றக் குழுவின் ”கன்னி”த் தலைவர் எடுத்த அவசரக் குடுக்கை முடிவும் பின்னர் அதிலிருந்து அடித்த”பல்டி”யும் கட்சிக்கு,அதன் தலைமைக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தி விட்டுள்ளது”- தமிழரசின் புதைய தலைமையின் இறுக்கமான நடவடிக்கைகளினால் கட்சி கட்டுக்கோப்புடன் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாக சிலர் பிதற்றினாலும் கட்சித்தலைவரை கைப்பொம்மையாக வைத்துக்கொண்டு செயலாளரும் அவரது பரிவாரங்களும் ஆடி வரும் சதிராட்டத்தினால் தமிழரசுக்கட்சி எந்த வழியில் பயணிப்பது எனத் தெரியாது தடுமாறி வருகின்றது என்பதே உண்மை.
–கே.பாலா
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமையான பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் , பதில் பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், அதன் பாராளுமன்றக் குழுவின் புதிய தலைவரான இரா .சாணக்கியன் ஆகியோரின் அண்மைய நகர்வுகள், முன்னெடுப்புக்கள்,திட்டங்கள் .இராஜ தந்திரங்கள் ”சாண் ஏற முழம் சறுக்கிய” கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றமை ஒரு சில நடவடிக்கைகள் மூலம் வெளிப்பட்டுவருகின்றன.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளராக பதவியேற்றுக் கொண்ட எம்.ஏ.சுமந்திரன் தனக்கு கட்டுப்படாதோருக்கும், தனது போட்டியாளர்களுக்கும் எதிராக கட்சிக்குள் எடுத்த தான்தோன்றித்தனமான , சர்வாதிகாரத்தனமான , நடவடிக்கைகள்,காய் நகர்த்தல்கள்,பழிவாங்கல்களினால் தமிழரசுக்கட்சி உருக்குலைந்து,பலவீனமாகி மக்களினால் மறக்கப்படும் கட்சியாக மாறி வருகின்றமை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமையின் பலவீனமாக .சறுக்கலாகவே கருதப்படுகின்றது.
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டில் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து அரசியலில் ஈடுபட விரும்பிய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு-தமிழரசுக்கட்சியின் அப்போதைய தலைவர் இரா.சம்பந்தன் ”இராணுவ புலனாய்வாளர்களின் கையாட்கள் ”எனக்கூறி நிராகரித்திருந்த நிலையில் தமிழரசின் தற்போதைய பதில் செயலாளர் சுமந்திரன் தமிழரசுக்கட்சியை பலப்படுத்துகின்றோம் என்ற பெயரில் தமிழரசில் இணையுமாறு முன்னாள் போராளிகளுக்கு விடுத்துள்ள அழைப்பும் புதிய தலைமைக்கு சறுக்கலாகவே அமைந்து விட்டது.
தமிழரசின் பதில் பொது செயலாளர் சுமந்திரனின் இந்த பகிரங்க அழைப்பு உண்மையில் வரவேற்கத்தக்கதொன்றாகவே உள்ள போதும் சுமந்திரனின் புலிகள் மீதான வெறுப்புணர்வும் சுமந்திரன் மீதான விடுதலைப் புலிப் போராளிகளின் நம்பிக்கையீனமும் வெறுப்புணர்வுமே தமிழரசில் இணையுமாறு முன்னாள் போராளிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்த கட்டத்துக்கு நகரவிடாமல் தடுத்து விட்டது.
இது மட்டுமல்ல தமிழரசின் புதிய தலைமையின் பழிவாங்கலுக்கு , தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவாகி. சூழ்ச்சியின் மூலம் பதவியை ஏற்காது தடுக்கப்பட்டதுடன் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை இலங்கையின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசுடன் இணைந்து ஆதரவாக வாக்களித்து விட்டார் என்ற ஒரு சதத்திற்கேனும் பெறுமதியற்ற குற்றச்சாட்டை சுமத்தி தமிழரசின் பாராளுமன்றக்குழுத்தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்ட சிவஞானம் சிறீதரனே முதலில் களப்பலியானவர்.
சிவஞானம் சிறீதரனின் பாராளுமன்றக்குழுத் தலைவர் பதவி, தமிழரசினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் மூத்த எம்.பி.க்கள் இருக்கத்தக்கதாக தமிழரசின் பதில் பொது செயலாளரான சுமந்திரனின் வலதுகரமான இரா. சாணக்கியனுக்கு கட்சியின் தலைமையினால் வழங்கப்பட்டது. மும்மொழி ஆற்றல் கொண்ட இரா. சாணக்கியன் சிறப்பாக செயற்படுவார். பாராளுமன்றத்தில் தமிழரசு வீரியத்துடன் , விவேகத்துடன் செயற்படும் என்றெல்லாம் கட்சியின் தலைமையினால் படம் காட்டப்பட்டது. பாராளுமன்றக் குழுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட இரா. சாணக்கியன் பாராளுமன்றத்தில் ”முனங்கினால்” கூட அதை ”முழக்கமாக”கதையளக்கவும் சில ஊடகங்கள் தீவிரமாக செயற்படுகின்றன.
இவ்வாறான நிலையில் தான் அநுரகுமார அரசாங்கத்தின் வலு சக்தி அமைச்சரான குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழரசின் பாராளுமன்றக்குழுத்தலைவரான இரா. சாணக்கியன் ”சின்னப் பிள்ளைத்தனமாக” முடிவெடுத்து அதனை அவசரக் குடுக்கையாக ஊடகங்களுக்கும் அறிவித்து விட்டு பின்னர் அந்த அறிவிப்புக்கு முரணாக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் நடந்துகொண்டமை தமிழரசின் பாராளுமன்றக்குழுத்தலைவர் பதவிக்கும் தமிழரசுக்கும் மீண்டும் ஒரு பாரிய சறுக்கலை,தடுமாற்றத்தினை ஏற்படுத்தி விட்டுள்ளது.
தமிழரசின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கும் தமிழரசுக்கும் இறுதியாக பாரிய சறுக்கலை ஏற்படுத்தி விட்டுள்ள அநுரகுமார அரசாங்கத்தின் வலு சக்தி அமைச்சரான குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நடந்தது என்னவென்பதை சற்று விலா வாரியாகப் பார்ப்போம்.
”நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு போதுமான மற்றும் தரமான நிலக்கரி கொள்வனவை உறுதிப்படுத்துவதில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தமது அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளார் .அதுமட்டுமன்றி தற்போதைய வலுச்சக்தி அமைச்சர் இலங்கை உரக் கம்பனியின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய போது ஊழல் செயல்பாடு ஒன்றை மேற்கொண்டதற்காக அவருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் முறையான குற்றப்பகர்வுப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளது. அரச நிதி இழப்பு, தேசிய வலு சக்தி பாதுகாப்பை அபாயத்தில் ஆழ்த்துதல், ஊழல் முறையில் கொள்வனவு செயல்முறையை கையாளுதல், ஊழல் தவறு என்பவற்றை வலுசக்தி அமைச்சர் செய்துள்ளார்.எனவே அவர் வலு சக்தி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் ‘
என்ற இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தே பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,அநுரகுமார அரசாங்கத்தின் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தது. பாராளுமன்றத்தில் 156 எம்.பி.க்கள் என்ற அசுரபலத்துடன் இருக்கும் அநுரகுமார அரசாங்கம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஊதித் தள்ளிவிடும் என்று தெரிந்தாலும் ஒரு ஊழலுக்கு,மோசடிக்கு, தவறுக்கு ,தவறானவருக்கு தமது எதிர்ப்பை கொஞ்சமாவது வெளிக்காட்ட வேண்டும் என்றுதான் பிரதான எதிர்கட்சியினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களின் கையெழுத்தும் ஆதரவும் கோரப்பட்டது.இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய ஜனநாயக முன்னணி ,பொதுஜன பெரமுன ,சுயேட்சைக்குழு 17,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,மலையக கட்சிகள் ஆதரவாக கையெழுத்திட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் ஆதரவையோ ,எதிர்ப்பையோ வெளிப்படுத்தவில்லை.
இதன்போதுதான் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரான இரா. சாணக்கியன் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அறிவிப்பை விடுத்தார்.” வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திடுவதில்லையென தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது. தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதன்போதே வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயப்பட்டுள்ளமை, அமைச்சர் மீதான நிலக்கரி மோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பில் போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படாமை,நாட்டில் தற்போது பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாடு ஏற்படுவதுடன் பாதிப்பும் ஏற்படும் என்ற 3 காரணிகளின் அடிப்படையில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திடுவதில்லையென தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது”என்பதே இரா.சாணக்கியனின் அந்த அறிவிப்பு.
தமிழரசின் பாராளுமன்றக் குழுத் தலைவரின் இந்த அறிவிப்புக்கு அதன் எம்.பி.க்கள் பலரும் உடன்படாதபோதும் ”நமக்கு ஏன் வீண் வம்பு”எனக்கருதி அமைதிதியாக இருந்து விட்டனர். எனினும் தமிழரசின் இந்த முடிவு மக்களினாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் ”நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளது”என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியது.இது தமிழரசை தடுமாறவைத்ததுடன் தர்மசங்கடத்துக்கும் உள்ளாக்கியது.
இதனையடுத்து அநுரகுமார அரசாங்கத்தின் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பதில் இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை. .கட்சித் தலைமை கூடியே இறுதி முடிவை எடுக்கும் என தமிழரசினால் கதைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதேபோன்றே கட்சித்தலைமையும் எம்.பி.க்களும் இணைய வழியில் கூடி ஆராய்ந்தனர். வலு சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முழுமையாக ஆதரித்து பாராளுமன்றத்தில் உரையாற்றுவது என்றும், அந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியனின் அறிவிப்புக்கு முரணான அறிவிப்பு விடப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒவ்வொரு கட்சிகளினதும் பாராளுமன்றக் குழுத்தலைவரும் முக்கியமாக உரையாற்றுவார்கள். ஆனால் தமிழரசின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா. சாணக்கியன் தான் உரையாற்றுவதிலிருந்து மெல்ல நழுவிய நிலையில் ஒரு வடக்கு பிரதிநிதியும் ஒரு கிழக்கு பிரதிநிதியும் உரையாற்றுவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து கட்சியின் சார்பில் வடக்கிலிருந்து ப.சத்தியலிங்கம் எம்.பி.யும் கிழக்கிலிருந்து ச.குகதாசன் எம்.பி.யும் உரையாற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டு இவர்கள் இருவரின் தலையிலும் அந்தப்பொறுப்பை கட்சித்தலைமை கட்டி விட்டது .பாராளுமன்றக்குழுத் தலைவர் பதவிக்கு சிரேஷ்டத்துவதைப் பார்க்காத கட்சியின் தலைமை இரா.சாணக்கியன் எம்.பி. எடுத்த தவறான முடிவை சரி செய்ய சிரேஷ்டத்துவம் என்ற அந்தஸ்தை பயன்படுத்தி சத்தியலிங்கத்தையும் குகதாசனையும் பலிக்கடாவாக்கியது.
எனினும் சத்தியலிங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் ”இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் நாங்கள் கையெழுத்திடவில்லை. அமைச்சருக்கு எதிரான இந்த விடயம் ஏற்கனவே கோப் குழுவில் விசாரிக்கப்பட்டு வந்ததுடன், மேல் நீதிமன்றத்தில் அமைச்சர் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு அவர் பிணையில் இருப்பதையும் அறிந்துகொண்டோம். அந்த வகையில் இது விசாரணை நடக்கும் விடயமாக இருப்பதால் நாங்கள் அவசரப்பட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பங்குதாரர்களாக இருப்பதா என்ற காரணத்தினாலேயே எமது கட்சியை சேர்ந்தவர்கள் கையெழுத்திடவில்லை.ஆனால் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட சில விடயங்களை பார்க்கும் போது நாங்கள் இந்த விடயத்தில் இருந்து இலகுவாக கடந்துசெல்ல முடியாது என்பதனை உணர்ந்துள்ளோம். இதனால் இந்த விடயத்தில் இந்த பிரேரணையை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்”எனக்கூறி ஒரு மென்போக்கான உரையை நிகழ்த்தினார் .ஆனால் குகதாசன் எம்.பி.யின் பெயர் குறிப்பிடப்பட்டபோதும் அவர் உரையாற்றவில்லை.
இவ்வாறான நிலையில்தான் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 104 மேலதிக வாக்குகளினால் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டது.இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்படட நிலையிலேயே 104 மேலதிக வாக்குகளினால் இது தோற்கடிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 22எம்,பி க்கள் பங்கேற்கவில்லை.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அதன் பங்காளிக்கட்சிகள் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி,புதிய ஜனநாயக முன்னணி ,பொதுஜன பெரமுன ,சுயேட்சைக்குழு 17,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்களித்தன தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டில் நிற்பதனால் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை . அதேபோல் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட எம்.பி. யான செல்வம் அடைக்கலநாதன் அன்றையதினம் சபைக்கு வருகை தராது வாக்களிப்பிலிருந்து நழுவி விட்டார். மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன்,ஜீவன் தொண்டமான் மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 22 எம்.பி.க்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இவ்வாறான தொடர் சொதப்பல்களினால்தான் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமையான பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் , பதில் பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அதன் பாராளுமன்றக் குழுவின் புதிய தலைவரான இரா .சாணக்கியன் ஆகியோரின் அண்மைய நகர்வுகள், முன்னெடுப்புக்கள்,திட்டங்கள் .இராஜ தந்திரங்கள் சறுக்கி வருவதுடன் இலங்கைத் தமிழரசுக்கட்சி எந்தவொரு தீர்மானத்தையும் சரியாக எடுக்க முடியாது அல்லது எடுக்கத்தெரியாது தடுமாறிவருவது வெளிப்பட்டு வருகின்றது.
தமிழரசின் புதைய தலைமையின் இறுக்கமான நடவடிக்கைகளினால் கட்சி கட்டுக்கோப்புடன் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாக சிலர் பிதற்றினாலும் கட்சித்தலைவரை கைப்பொம்மையாக வைத்துக்கொண்டு செயலாளரும் அவரது பரிவாரங்களும் ஆடி வரும் சதிராட்டத்தினால் தமிழரசுக்கட்சி எந்த வழியில் பயணிப்பது எனத் தெரியாது தடுமாறி வருகின்றது என்பதே உண்மை.















