‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
Share
1.28 லட்சம் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தமிழக வெற்றி கழக அறிவித்தது. இந்த திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்தார். இதற்காக முதல் அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனிவிமானத்தில் மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் முதல் அமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரை வழிநெடுக மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தபடி முதல் அமைச்சர் விஜய் வந்தார். பின்னர் ரோடு ஷோ’வாக பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு முதல் அமைச்சர் விஜய் வந்தார். அங்கு குவிந்திருந்த மக்கள், வாலிபர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற விழாவில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அப்போது மதுரை மாவட்டத்தில் பிற அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தன் கைகளால், தங்க மோதிரங்களை அணிவித்தார். மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்று, அந்த மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார்.















