LOADING

Type to search

இலங்கை அரசியல்

தென்னிலங்கை மலையகத் தமிழ் தொழிலாளர்கள் ‘இன்னும் காலனித்துவ காலத்திலேயே இருப்பதாக’ வெளிப்படுத்தும் சர்வதேச அறிக்கை

Share

தென் மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், மலையகத் தமிழ் தொழிலாளர்கள் மீதான கொத்தடிமைத்தனம், கடன் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் தொழிலாளர் சுரண்டல் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காமை உள்ளிட்ட கொடுமைகளை ஒரு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு காலனித்துவ காலத்தில் இலங்கையில் பெருந்தோட்டத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்த துன்பங்கள் இன்றும் தொடர்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள், சர்வதேச மன்னிப்புச்சபை நடத்திய இரண்டு வருட ஆய்வைத் தொடர்ந்து கொழும்பில் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

“அரசாலும் கைவிடப்பட்ட, தனியார் தோட்டங்களில் சிக்குண்டவர்கள் – இலங்கையின் மலையகத் தமிழ் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள்.” என்ற தலைப்பில் மூன்று மொழிகளில் வெளியிடப்பட்ட 65 பக்க அறிக்கை, காலி மற்றும் மாத்தறையில் உள்ள தனியார் மற்றும் சிறு அளவிலான தேயிலைத் தோட்டங்களில் மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.

ஆய்வாளர்கள், ஜனவரி 2024 முதல் ஜனவரி 2026 வரை தென் மாகாணத்தில் உள்ள 45 தோட்டங்களில் 154 தொழிலாளர்களிடமும், இந்தத் தோட்டங்களில் முன்னர் பணியாற்றி தற்போது வெளியில் வசிக்கும் 5 தொழிலாளர்களிடமும் நேர்காணல்களை நடத்தினர். மேலும், 65 தொழிலாளர்களுடன் 15 குழு கலந்துரையாடல்களையும் நடத்தினர். இந்த நேர்காணல்களில் நான்கு சிறுவர்களும் (18 வயதுக்குட்பட்டவர்கள்) மற்றும் தங்களை சிங்களவர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட மூவரைத் தவிர, நேர்காணல் செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் மலையகத் தமிழர்களாவர் மன்னிப்புச்சபை தனது அறிக்கையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளது.

கட்டாய வேலை வாங்கல், கடன்பணி அடிமைத்தனம் வாழ்க்கை மற்றும் பணிச் சூழ்நிலைகள் குறித்து ஆய்வுக் கேள்விகள் கவனம் செலுத்தியிருந்தன. கள விஜயங்களின் போது, தோட்டங்களில் காணப்படும் வாழ்க்கை மற்றும் பணிச் சூழ்நிலைகள் தொடர்பான தமது அவதானங்களையும் ஆய்வாளர்கள் பதிவு செய்ததாக அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது.

“தொடர்ச்சியாக இடம்பெறும் முறைமைப்படுத்தப்பட்ட புறக்கணிப்பினால் இச்சமூகம் பாதிப்படைகின்றது. குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு போன்ற அரச சேவைகளை அணுகுவதில் இந்நிலை தொடர்கிறது. இதன் விளைவுகளில் ஒன்றாக இந்தச் சமூகம் தனிமைப்படுத்தப்பட்டுக் காணப்படுவதுடன், தமது தொழில் தருநர்களில் அதிகமாக தங்கியிருக்கும் நிலைக்கு அச்சமூகத்தைத் தள்ளியுள்ளது. வாழ்வாதாரம் மற்றும் வதிவிடம் என்பவற்றில் மாத்திரமன்றி நலன்புரி அம்சங்களிலும் இந்த நிலை காணப்படுகின்றது.”

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் தேயிலை ஏற்றுமதி இரண்டாவது இடத்தில் உள்ள போதும், தேயிலை உற்பத்தியின் முதுகெலும்பாகக் காணப்படும் மலையக தமிழ்த் தொழிலாளர்களை இந்த ஏற்றுமதி வருமான நன்மைகள் சென்றடைவதில்லை எனத் தெரிவிக்கும் அறிக்கை, தொழிலாளர் சட்ட மீறல்கள் மற்றும் குற்றச் செயல்களை நிவர்த்தி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பு மற்றும் குற்ற நீதி முறைமை என்பன கோட்பாட்டு ரீதியாகக் காணப்படுகின்ற போதிலும், “கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மை மற்றும் சுரண்டல் தன்மை தொழிலாளர் முறைமைகள் என்பவற்றின் சூழமைவில் இந்த நீதி முறைமையை பெருந்தோட்ட தொழிலாளர்கள் அணுகுவது மிகவும் சவால் மிக்கதாக அமைந்துள்ளது,” என சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கையின் கடமைகளை மீறும் கட்டாய உழைப்பு உட்பட, பல மனித உரிமை மீறல்களால் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை சர்வதேச மன்னிப்புச் தனது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மரபுகள், ஒரு தொழிலாளி தன்னார்வமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதபோது, “எந்தவொரு கட்டாய வேலை வாங்கலை ஏதாவது தண்டனை அச்சுறுத்தலின் கீழ் பெற்றுக்கொள்ளப்படுவது” ஷஎன வரையறுக்கின்றன. பாதிப்புறும் நிலையை துஷ்பிரயோகம் செய்தல், மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், உடலியல் மற்றும் பாலியல் வன்முறை, கடன்பணி அடிமைத்துவம், நகர்வுகளைக் கட்டுப்படுத்தல், அத்துடன் துஷ்பிரயோகம் மிக்க பணி மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகள் என்பன, கட்டாய வேலை வாங்கலுக்கான தனித்துவம் மிக்க குறிகாட்டிகள் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு அடையாளம் கண்டுள்ளது

பலவீனத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பது கட்டாய உழைப்பின் ஒரு முக்கியக் குறிகாட்டியாகும். மலையகத் தமிழ் சமூகம், பரம்பரை, இனப் பூர்வீகம், சாதி மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வரலாற்று, அமைப்பு ரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியான இனப் பாகுபாட்டை நீண்ட காலமாக அனுபவித்து வருகிறது, இது அவர்களைக் கட்டாய உழைப்புக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளியுள்ளது. “சாதி அடிப்படையில் அமைந்த பாரபட்சம் உள்ளடங்கலாக மலையகத் தமிழர் அடையாளத்துடன் இணைந்துள்ள பாதிப்புறும் தன்மைகளைப் பயன்படுத்தி இந்த தொழிலாளர்களை கட்டாய வேலை வாங்கலுக்கு உட்படுத்த. தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் சிறு தேயிலைத் தோட்டங்களின் தொழில் தருநர்கள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பதை சர்வதேச மன்னிப்புச் சபையின் விசாரணைகள் காண்பிக்கின்றன.”

” காணியற்றவர்கள் என்பது அவர்களால் சொந்தமாக நிலத்தை அல்லது நில உரித்து ஆவணத்தைக் கொண்டிருக்க முடியாத நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. தொழிலாளர்களின் வீட்டு வசதி தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில் அவர்கள் செய்யும் வேலையுடன் இணைக்கப்பட்டிருப்பதை இந்த ஆய்வு வெளிக்கொணர்கிறது. இவ்வாறு வேலை மட்டுமன்றி வதிவிடத்துக்காகவும் முகாமைத்துவத்தில் தங்கியிருக்கும் நிலை, துஷ்பிரயோகம் மற்றும் கட்டாய வேலை என்பவற்றால் அவர்கள் பாதிப்புறும் தன்மையை மேலும் அதிகரிக்கின்றது.”

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 45 தோட்டங்களிலும், தொழிலாளர்கள் வீட்டு வசதிக்காகத் தங்கள் முதலாளியைச் சார்ந்திருப்பதாகத் தெரிவித்தனர். வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சமும், சிக்கிக்கொண்டோமோ என்ற உணர்வும் தொழிலாளர்களைப் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், மோசமான வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை எதிர்த்துப் போராட முடியாதவர்களாகவும் ஆக்கியுள்ளன.

கட்டாய உழைப்பின் மற்றொரு முக்கிய அறிகுறி உடல் மற்றும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகும். 15 தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தால் தாங்கள் வாய்மொழி மற்றும்/அல்லது உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அல்லது நேரில் கண்டதாகவும் மனிப்புச் சபையிடம் தெரிவித்தனர்.

“தோட்டத்தைக் குறைகூறுதல், வேலைக்கு சமூகமளிக்காதிருத்தல் நேரம் பிந்துதல் மற்றும் வழங்கப்படாத சம்பளம் தொடர்பில் கேள்விகளை எழுப்புதல் என்பனவும் உள்ளடங்குகின்றன.”

மலையகத் தமிழ் தொழிலாளர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது கட்டாய உழைப்பு உள்ளிட்ட பொருளாதார அபாயங்களுக்கும், வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தனியார் தோட்டங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கும் வழிவகுக்கிறது.

“கடன்பணி அடிமைத்துவம் கட்டாய வேலை வாங்கலின் ஒரு வடிவமாகவும் அதன் குறிகாட்டியாகவும் அமைந்துள்ளது. தொழிலாளர்கள் ஒரு தொழில் தருநரிடம் வரையறையற்ற காலத்துக்கு கட்டுண்டு இருக்கும் நிலையை கடன்பணி அடிமைத்துவம் ஏற்படுத்த முடியும், இந்தக் காலப்பகுதி தலைமுறைகளாகக் கூடத் தொடர முடியும் யதார்த்தமற்ற கொழுந்து அறுவடை இலக்குகள் மற்றும் ஊதியத்தில் மேற்கொள்ளப்படும் கழிப்புகள் பற்றிய வெளிப்படைத்தன்மை இன்மை உள்ளடங்கலாக பல உத்திகளைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் தமது ஆகக் குறைந்த தினக் கூலியைப் பெற்றுக் கொள்வதை தோட்ட முகாமைத்துவங்கள் தடுக்கின்றன.”

“உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட நாளாந்த அடிப்படைச் செலவுகளை சமாளிக்க தொழிலாளர்கள் சம்பள முன்பணம் மற்றும் கடன்களில் தங்கியிருக்கும் நிலையை தோட்ட முகாமைத்துவங்கள் ஏற்படுத்துவதை இந்த ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது. ஆகக் குறைந்த நாள் சம்பளத்தைப் பிடித்து வைத்தல், சட்டவிரோதமான சம்பளக் கழிப்புகள், வரையறுக்கப்படாத கடன் மீளச் செலுத்தல் நியதிகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட சில்லறைப் பொருட்களுக்கான விலை என்பன காரணமாக தொழிலாளர்கள் தொழில் தருனர்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை முடிவற்ற விதத்தில் அதிகரித்துச் செல்வதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.”

குறைந்தது 22 தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தால் தங்கள் நடமாடும் சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மன்னிப்புச் சபையிடம் அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.

“ஒரு தோட்டத்தில் இருந்து இன்னொரு தோட்டத்துக்கு செல்வதற்கான தடை, ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் தோட்டத்தில் இருந்து வெளியே செல்ல இயலாத நிலை, தனிப்பட்ட வேலைகளைச் செய்ய முடியாது இருத்தல், அனுமதி இல்லாமல் பயணம் செய்ய முடியாது இருத்தல் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடனும் இணைந்து பயணம் செய்ய முடியாது இருத்தல், பயண நேரம் தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் தாம் செல்லும் இடத்தை முகாமைத்துவத்துக்கு அறிவிக்க வேண்டிய நிலை என பல வடிவங்களில் இந்த நடமாட்டம் மீதான தடைகள் முன்னெடுக்கப்படுகின்றன.”

மேலும், தோட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு குடும்ப உறுப்பினராவது அங்கேயே தங்கியிருக்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் தப்பி ஓடிவிடுவார்கள் என்ற அச்சத்தில் இது நடந்ததாகவும் தொழிலாளர்கள் விபரித்துள்ளனர். தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனவும் பெற்றோர்கள் அமைப்பிடம் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகம் மிக்க வேலை மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை இது, கட்டாய வேலை வாங்கலுக்கான இன்னொரு குறிகாட்டியாக அமைவதாக குறிப்பிடுகின்றது.

நேர்காணல் செய்யப்பட்டவர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் பணிபுரியும் போது தங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விவரித்தனர். தோட்டத் தொழிலாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் குறிவைக்கும் தேசியக் கொள்கையோ அல்லது சட்டமோ தற்போது இல்லை. மேலும், மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள், போதுமான வீட்டு வசதிக்கான உரிமையின் முக்கிய அம்சங்களைப் பூர்த்தி செய்யத் தவறுகின்றன. பணிப் பாதுகாப்பு இல்லாததுடன், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகளில் போதுமான இடவசதி, வானிலையைத் தாங்கும் உள்கட்டமைப்பு மற்றும் போதுமான சுகாதார வசதிகள் இல்லை.

மலையகத் தமிழ் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருப்பதையும் மன்னிப்புச் சபையின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. பிரசவ கால நன்மைகள், ஓய்வூதியம் அல்லது சுகயின விடுமுறைக்கான அணுகல் தமக்கு இல்லை என தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் சிறு தோட்ட உரிமையாளர்கள் வேண்டுமென்றே மலையகத் தமிழ்த் தொழிலாளர்களை அமயத் தொழிலாளர்கள்’ (Casual Workers) என வகைப்படுத்துகின்றனர். இது தொழிலாளர் தொடர்பான அனைத்து சட்ட ரீதியான உரித்துகள் மற்றும் அடிப்படை நன்மைகளை மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள் அடைந்து கொள்வதைத் தடுக்கின்றது என, மன்னிப்புச் சபை தெரிவிக்கின்றது.

இலங்கையில் தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்களுக்கு நன்மையளிக்கும் இலங்கையின் சமூகப் பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக, ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) என்பவற்றுக்கு தொழில் வழங்குனர்கள் பங்களிப்பு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ள விடயத்தைம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நன்மைகளுக்கான அணுகல் மறுக்கப்படுவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
“EPF மற்றும் ETF என்பவற்றுக்கு தமது தொழிலாளர்களை தொழில் வழங்குநர்கள் பதிவு செய்ய வேண்டும் இவ்வாறான நன்மைகளை அடைய தாம் பதிவு செய்யப்படவில்லை அல்லது தாம் பதிவு செய்யப்பட்டுள்ளோமா என நிச்சயமாகத் தெரியாது என தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.”

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்களில் சேர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன, பல நேரங்களில் அவை இருப்பதில்லை அல்லது அவர்களின் முதலாளிகளால் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு மேலும் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, இந்த ஆய்வுக்காக கள விஜயங்கள் மேற்கொள்ளப்பட்ட தோட்டங்கள் தொழிற்சங்கம் பற்றிய எண்ணக்கரு தொடர்பில் விரோதமான மனப்பாங்கைக் கொண்டனவாகக் காணப்பட்டதுடன் அவற்றில் தொழிற் சங்கங்கள் செயற்படாத நிலையே காணப்பட்டது எனவும் தெரிவிக்கின்றது.

மாத்தறை மற்றும் காலி மாவட்ட தேயிலைத் தோட்டங்களில், தொழிலாளர் சோதனைகள் மற்றும் தொழில் நியமங்களின் அமுல்படுத்தல் என்பவற்றில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் காணப்படுவதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. வழமையான சோதனைகள் நடத்தப்படுவதாக தொழில் திணைக்களம் ஆய்வாளர்களிடம் தெரிவித்ததிருந்தாலும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் ஆவணங்கள் காணப்படாமை மற்றும் மொழித்தடை என்பன தனித்துவம் மிக்க சவால்களாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வலுவான சட்டக் கட்டமைப்பு இருந்தபோதிலும், மலையகத் தமிழ் தொழிலாளர்கள் நீதியைப் பெறுவதிலும், துஷ்பிரயோகம் அல்லது மோசமான வேலை நிலைமைகளுக்கு நிவாரணம் தேடுவதிலும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

“மொழி, புவியியல் அமைவிடத் தூரம், சம்பளம் வெட்டப்படல் காரணமாக முறைப்பாடுகளைப் பின் தொடர்வதற்கு வேலையின் போது நேரம் எடுத்துக்கொள்ள முடியாத நிலை, பொலிசார் உள்ளடங்கலாக அரச அதிகாரிகளால் பாரபட்சமாக மற்றும் முற்கற்பித மனநிலையில் நடத்தப்படல், அத்துடன் வேலை தொடர்பான ஆவணங்கள் உள்ளடங்கலாக ஆவணங்களுக்கு அணுகல் இல்லாமல் இருத்தல் என்பன இச்சவால்களில் உள்ளடங்குகின்றன.”

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில் மலையகத் தமிழ்ச் சமூகத்தின் உரிமைகள் எந்த அளவுக்கு நசுக்கப்படுகின்றன என்பதை சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

“குறிப்பாக, கட்டாய உழைப்பின் பல அறிகுறிகள் இருப்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. நீதிக்கான அணுகலை வழங்குதல் மற்றும் போதிய அளவான தொழிலாளர் சோதனைகள் அத்துடன் கண்காணிப்பை உறுதி செய்தல் போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் தோல்விகளையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.”

மலையகத் தமிழர் என்ற அடையாளத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சாதி அடிப்படையிலான மற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படும் பாரபட்சங்களை இந்த அறிக்கை ஆராய்கின்றது. இந்த பாரபட்சங்கள் வருமான நிலை. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட விட்டு வசதி. மட்டுப்படுத்தப்பட்ட கல்வியறிவு, மற்றும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் கடன் என்பவற்றை ஏற்படுத்துகின்றன. இந்த பாரபட்சம் அம்மக்களின் பாதிப்புறும் நிலையை உயர்த்தியுள்ளது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நியமங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாடுகளுக்கு ஏற்புடையதாகக் காணப்படும் பரிந்துரைகளையும் சர்வதேச மன்னிப்புச் சபை தமது அறிக்கை ஊடாக இலங்கை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, தொழிலாளர் அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை தனித்தனியோ தமது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.