தொகுதி மறுவரையறைக்கு எதிராகக் கருப்புக்கொடிப் போராட்டம்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு
Share
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாட்டையும், தென்னிந்திய மாநிலங்களையும் பாதிக்கும் வகையில், அம்மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில், மத்திய பாஜக அரசு ,அவசர கோலத்தில், தொகுதி மறுவரையறையை கொண்டுவருவதற்காக நாடாளுமன்றத்தில் நாளை (16.04.2026) அவசர சட்டத் திருத்தத்தை செய்ய உள்ளது. அதற்கு எதிராக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், கருப்புக்கொடிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போராட்டத்தை ஆதரித்து வரவேற்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தக் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்கும். அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஜனநாயக ரீதியிலான ,முறையான விவாதங்களை நடத்தி, எந்த மாநிலமும் பாதிக்காத வகையில், கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, நாடாளுமன்ற தொகுதி மறுவரைக்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்குப் பதிலாக, மத்திய பாஜக அரசு தென்னிந்திய மாநிலங்களை வஞ்சிக்கும் ஜனநாயக விரோதப் போக்கை கடைபிடிக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. நாளை கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்தால், வட மாநிலங்களுக்கும் – தென் மாநிலங்களுக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். பெயரளவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகளை அதிகரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, வட மாநிலங்களுக்கு, மிக மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரிப்பது அநீதியானதாகும்.















