LOADING

Type to search

இலங்கை அரசியல்

நீர்கொழும்பு சிறை வன்முறையின் எதிரொலியாக யாழ்ப்பாணம் சிறைக்கு 60 கைதிகள் மாற்றம்!

Share

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் பலத்த பாதுகாப்புடன் 7ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில், சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளமையுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் துரதிர்ஷ்டவசமான கோரச் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதும் இன்னும் பதற்றம தணியாத சூழல் நிலவி வருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில், அங்கு எஞ்சியிருக்கும் கைதிகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும், சிறைச்சாலையின் நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கிலும், நீர்கொழும்பு சிறையிலுள்ள கைதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த அவசர இடமாற்ற நடவடிக்கையின் அடிப்படையிலேயே, ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்டமாக 60 கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஏனைய கைதிகளையும் வெவ்வேறு தூர பிரதேச சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.