பதினேழாவது மே- 18: மறதிக்கு எதிராக நினைவுகள் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!
Share
கடந்த 17 ஆண்டுகளாக மாணவர்களும் உட்பட,போராடும் தரப்புகளையும் போராட வேண்டிய தரப்புகளையும் கட்சிகள் ஒருங்கிணைத்ததை விடவும் சிவில் சமூகங்களும் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களும்தான் அதிகமாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள்.”எழுக தமிழில்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான” ஆர்ப்பாட்டங்கள் போன்ற எல்லாவற்றிலும் அப்படித்தான்.கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்த அரசியல் செயற்பாடுகள்தான்.கடந்த 17 ஆண்டுகளிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு தமிழ் அரசியலைக் கொந்தளிக்க,நொதிக்கச் செய்திருக்கின்றன.பொது வேட்பாளர் உட்பட…..
முள்ளிவாய்க்கால் என்பது ஓர் இடத்தின் பெயரல்ல.அதனால் அது ஒரு புவியியல் பதம் மட்டும் அல்ல. அது ஓர் அரசியல் பதம். உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தோடு,இன அழிப்போடு, தொடர்புபட்டு மேலெழுந்த வார்த்தைகளில், இடப் பெயர்களில் அதுவும் ஒன்று.
ஏற்கனவே நான்கு ஈழப் போர்களின் போதும் பல்வேறு கிராமங்களின் பெயர்கள் வரலாற்றில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டு விட்டன. வல்வெட்டித்துறை,கொக்கட்டிச்சோலை,ஒதிய மலை,செம்மணி,நவாலி..என்று ஒரு நீண்ட கொலைக் களங்களின் பட்டியல் உண்டு.
முழுத் தமிழினத்தினதும் நவீன வரலாற்றில் மிகக்குறுகிய காலத்துக்குள் மிகக் குறுகிய நிலப்பரப்பு ஒன்றிற்குள் அதிக தொகை மக்கள் கொல்லப்பட்ட ஒரு யுத்த களத்தின் பெயர் முள்ளிவாய்க்கால்.தமிழ் மக்களின் மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கிராமத்தின் பெயர் அது. எனவே இப்பொழுது முள்ளிவாய்க்கால் என்பது ஈழத் தமிழ் இன அழிப்போடு தொடர்புடைய ஒரு குறியீட்டு வார்த்தை.ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றில் என்றென்றும் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 ஆவது மே பதினெட்டிலன்று ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்தார்கள்.பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் அதாவது “ஜென்சி”கள் கிட்டத்தட்ட ஏழு பேருந்துகளில் வந்தார்கள்.
இதற்கு முன்னரும் நினைவு நாட்களில்,நினைவு கூரும் களங்களில், குறிப்பாக முள்ளிவாய்க்காலில்,மாவீரர் துயிலும் இல்லங்களில்,ஜென்சிகளைக் காணமுடிகிறது.கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஹெபர்ட் மார்க்யூஸ் “மாணவர்களே போராட்டத்தின் கூர்முனை ” என்று சொன்னார்.
தமிழ்த் தேசிய அரசியலில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில், பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் ஆர்வத்தோடு துடிப்பாகப் போராடினார்கள். அரசியல் கைதிகளுக்காக,நினைவு கூரும் உரிமைகளுக்காக, நில மீட்புக்காக,சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக….போன்ற பல காரணங்களுக்காகத் தீவிரமாகப் போராடினார்கள். கைது செய்யப்பட்டார்கள்.
எனினும் அவர்கள் போராட்டத்தின் கூர் முனைகளாக இல்லை. அவர்களை அவ்வாறு போராட்டத்தின் கூர்முனைகளாக அல்லது மாற்றத்தின் முகவர்களாக அல்லது மாற்றத்தின் நொதியங்களாக மாற்றுவதற்கு தேவையான அரசியல் வழிவரைபடம் கட்சிகளிடம் இல்லை.இப்போது அரங்கிலுள்ள கட்சிகள் அதனைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடவும்,புதிய தலைமைகள் புதிய மக்கள் அமைப்புக்கள் அதைச் செய்வது பொருத்தமாக இருக்காதா? என்று ஒரு மூத்த அரசியல்வாதி கேட்டார்.
கடந்த 17 ஆண்டுகளாக மாணவர்களும் உட்பட,போராடும் தரப்புகளையும் போராட வேண்டிய தரப்புகளையும் கட்சிகள் ஒருங்கிணைத்ததை விடவும் சிவில் சமூகங்களும் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களும்தான் அதிகமாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள்.”எழுக தமிழில்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான” ஆர்ப்பாட்டங்கள் போன்ற எல்லாவற்றிலும் அப்படித்தான்.கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்த அரசியல் செயற்பாடுகள்தான்.கடந்த 17 ஆண்டுகளிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு தமிழ் அரசியலைக் கொந்தளிக்க,நொதிக்கச் செய்திருக்கின்றன.பொது வேட்பாளர் உட்பட.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்காலில் திரண்ட மக்கள் கூட்டம் இன அழிப்புக்கு எதிரானது. இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கேட்பது. ஆனால் அங்கே சிந்தப்பட்ட கண்ணீரும் துக்கமும் அந்த நாளோடு வடிந்துபோய் விடக்கூடாது. அது அரசியல் ஆக்க சக்தியாக மாற்றப்பட வேண்டும். அதற்குரிய வழி வரைபடம் என்ன?
முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் காய்ச்சிக் கொடுப்பதுகூட பெருமளவுக்கு ஒரு பொது நிகழ்வாகத்தான் பயிலப்பட்டு வருகிறது.பல்கலைக்கழக மாணவர்கள்,பொது அமைப்புகள்,கட்சிகள்,சிவில் சமூகங்கள்… என்று பரவலாக மக்கள் கஞ்சி காய்ச்சினார்கள். மக்களிடமே அரிசி சேமிக்கப்பட்டு கஞ்சி காய்ச்சப்பட்டது.ஆனால் இவை யாவும் பொது இடங்களில் கஞ்சி பகிரப்பட்ட உதாரணங்கள்.மாறாக எத்தனை பேர் தங்களுடைய வீடுகளில் கஞ்சியைக் காய்ச்சினார்கள்?
பெரு நாட்களில்,விரத காலங்களில்,விசேஷ உணவைச் சமைத்து அருந்துவது போல எத்தனை பேர் அந்த நாளை தங்கள் வீடுகளில் விரத நாளாக அனுஷ்டிக்கிறார்கள்? சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியில் இறந்தவர்களுக்காகக் காய்ச்சப்படும் சித்திரைக் கஞ்சி ஆலயங்களில்தான் காய்ச்சப்படும். ஆனால் ஆடிக் கூழ் வீடுகள் தோறும் காய்ச்சப்படும். அது ஒரு பண்பாட்டுப் பெருவிழா. தமிழ் மக்கள் மகிழ்ச்சியைப் பகிரும் ஒரு மாதப் பிறப்பு.
ஆனால் முள்ளிவாய்க்கால் கஞ்சி அப்படியல்ல.அது ஒரு வகை விரத உணவு. துயர உணவு. இன அழிப்பின் நினைவு உணவு. அதை வீடுகளில் சமைத்து,அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கும்போது ஏன் அந்தக் கஞ்சி காய்ச்சப்படுகிறது?அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? போன்றவைகளை மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்கு எடுத்துக்கூற வேண்டும்.
யூதர்கள் தமது “பாஸ் ஓவர்” பெருநாளை அப்படித்தான் அனுஷ்டிக்கிறார்கள். புளிக்க வைக்கப்படாத மாவில் தட்டிய ரொட்டியைத் தயாரித்து,அதைப் பகிரும் போது,மூத்தவர்கள் இளைய தலைமுறைக்குத் தமது இனம் கடந்து வந்த கொடுமையான அனுபவங்களைப் பகிர்கிறார்கள்.
அவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகள்தோறும் பகிர்ந்து மூத்த தலைமுறை அடுத்த தலைமுறைக்கு கஞ்சியின் கதைகளை பரிமாறும் ஒரு நடைமுறை பரந்த அளவில் இல்லை என்று தெரிகிறது. முள்ளிவாய்க்கால் கஞ்சி பொது இடங்களில் காய்ச்சப்படுகின்ற ஒரு குறியீட்டு உணவாகத்தான் காணப்படுகிறது. அது வீடுகளில் சமைக்கப்படும் ஒரு விரத உணவாக இல்லை. அரசியல் உணவாக. இல்லை..ஒரு வழமையாக இல்லை.அதாவது முள்ளிவாய்க்கால் கஞ்சி முழுமையாக வீடுகளில் குசினிகளுக்குள் இன்னமும் வரவில்லை.அதன் பொருள் முள்ளிவாய்க்கால் கதைகளும் இன அழிப்பின் கதைகளும் வீடுகளில் முழுமையாகப் பகிரப்படுவதில்லை என்பதுதான்.
தமது வீடுகளில் அந்தக் கதைகளைக் கூறுவதற்குப் பெற்றோர் பயப்படுகிறார்கள்.அந்த நினைவுகளை மீட்பதால் வரக்கூடிய சட்டரீதியான ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக ஒரு பகுதி பெற்றோர் அந்தக் கதைகளை தங்கள் பிள்ளைகளுக்குக் கூறுவதில்லை. இன்னொரு பகுதி அவ்வாறு அந்தக் கதைகளைக் கூறினால் அதனால் தங்கள் பிள்ளைகள் மீண்டும் ரத்தம் சிந்தும் அரசியலைத் தெரிந்தெடுத்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு அந்த கதைகளை வீடுகளில் சொல்வதில்லை.இவற்றைவிட,இளைய தலைமுறையின் உள்ளங் கைகளுக்குள் காணப்படும் சமூக வலைத்தளங்களிலும் அந்தக் கதைகளை முழுமையாகப் பகிர்வதற்குச் சட்டத் தடைகள் உண்டு. சமூக வலைத்தளச் சூழலில் அதுபோன்ற கதைகளில் ஒரு பகுதியை முழுமையாகவும் பகிரங்கமாகவும் பகிர்வதற்குத் தடை உண்டு.
இப்படிப்பட்டதோர் அரசியல்,சமூக,தொழில்நுட்பச்சூழலுக்குள்,மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான புதிய அரசியல் பண்பாட்டுச் சமூகப் பொறி முறைகளை ஈழத் தமிழர்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. “அதிகாரத்திற்கெதிரான மனிதனின் போராட்டம் என்பது
மறதிக்கெதிரான நினைவின் போராட்டமாகும்.” என்று, மிலன் குந்தேரா கூறியுள்ளார்.
மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் என்பது பழைய காயங்களைக் கிண்டி ரத்தம் வரவைக்கும் ஒரு செய்முறையா?அல்லது காயங்களை ஆறவிடாமல் அப்படியே பேணும் ஒரு பொறிமுறையா?அதாவது அது காயங்களைச் சுகப்படுத்தும் செய்முறைக்கு எதிரானதா?
அண்மையில் அவ்வாறு கடந்த காலத்தை இரை மீட்கும் சில படங்களை முகநூலில் பகிர்த்தபொழுது முகநூலில் ஒருவர் கேட்டார்,திரும்பத்திரும்ப காயங்களைக் கிளறிக் கொண்டிருப்பது சரியா? கொடுமையான ஒரு காலத்தை மறக்கவிடாமல் திரும்பத் திரும்ப இவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டுமா? என்று.
இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் காயங்கள் ஆறவில்லை என்பதுதான்.”சுகப்படுத்தவியலாத ஒரு காயமாக உனது நினைவை” இதயத்தில் வைத்திருப்போம் என்று ஒரு பலஸ்தீனக் கவிஞர் என் பாடவேண்டி வந்தது? அங்கே இன ஒடுக்குமுறை தொடர்ந்துமிருப்பதால்தான். தமிழ் மக்களுடைய கூட்டுக் காயங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதனால், கூட்டுக் காயங்கள் ஆறாது.இனப்பிரச்சினை எப்பொழுது தீர்க்கப்படுமோ அப்பொழுதுதான் கூட்டுக் காயங்கள் ஆறும். தீர்க்கப்படாத இனப்பிரச்சினை என்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஆறாத கூட்டுக் காயந்தான்.
இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை ஈழத் தமிழர்களின் எல்லா கூட்டுக் காயங்களும் எல்லா மனவடுக்களும் ஆறாதவைதான். இன அழிப்புக்கு எதிரான நீதி கிடைக்காதவரை ஈழத் தமிழர்களின் எல்லாக் கூட்டுக் காயங்களும் ஆறாதவைதான்.அவற்றை ஆற்றுவதற்காகத்தான் மறதிக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கிறது. மறதிக்கு எதிரான நினைவுகளின் போராடம் என்பதே ஒரு கூட்டுக் குணமாக்கல்தான்.இன அழிப்புக்கு எதிரான நீதிதான் இனப்பிரச்சினைகான பொருத்தமான தீர்வாக அமைய முடியும்.
காயங்களைப் பாடுவது;காயங்களை வரைவது;காயங்களை எழுதுவது; காயங்களை வாசிப்பது;காயங்களை நடித்துக் காட்டுவது;காயங்களை நிகழ்த்திக் காட்டுவது; காயங்களை திரைப் படமாக்குவது. அவ்வாறு காயங்களை எழுதி எழுதி;காயங்களை வாசித்து;காயங்களைப் பாடி; காயங்களைக் கடந்து செல்வது. அது ஒரு கூட்டுக் குணமாக்கல்.
இன அழிப்பின் விளைவாக ஏற்பட்ட ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களையும் கூட்டு மனவடுக்களையும் கூட்டு அவமானத்தையும்,வலியையும் கூட்டுத் துக்கத்தையும் கூட்டு ஆக்கசக்தியாக மாற்றுவது,நீதிக்கு எதிரான போராட்டத்தின் உந்து விசையாக மாற்றுவது.
















