LOADING

Type to search

சினிமா

பாரதிராஜா மறைவு கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பென உதயநிதி ஸ்டாலின் கூறினார்

Share

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம். சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், எப்படியும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது மரணச் செய்தி காலை பேரிடியாக வந்தது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்திற்குரிய இயக்குநர். நம் கழகத் தலைவர் அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். எளிய மக்களின் வாழ்க்கையை – உணர்வைப் பிரதிபலித்து, தமிழ்ச் சினிமாவில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்திய பாரதிராஜா சாரின் மறைவு, கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அரங்கிற்குள் இருந்த சினிமாவை வயல்வெளிக்கும் – கடற்கரைக்கும் – கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற திரையுலக வித்தகர். எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் படைப்புகளைத் தந்து, திறமையான கலைஞர்கள் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். பாரதிராஜா சாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் – அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற மண் வாசனை மிகுந்த அவரது குரல் நம் செவிகளில் என்றுமே ஒலித்துக் கொண்டு இருக்கும். பாராதிராஜா சார், அவர் படைப்புகளின் வழியே என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார் என்று கூறியுள்ளார்.