போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அளித்த 14 அம்ச திட்டம் – டிரம்ப் தகவல்
Share
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போரில் தற்போது தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நீடிப்பதால் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதற்கிடையே நிரந்தர போர் நிறுத்தத்துக்கு ஈரான் புதிய சமரச திட்டத்தை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவிடம் வழங்கியது. ஆனால் இந்த சமரச திட்டத்தில் தனக்கு திருப்தி இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரான் அளித்த சமரச திட்டம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஈரான் 14 முன்மொழிவுகளை தெரிவித்து இருக்கிறது. லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும். அமெரிக்க படைகளை திரும்ப பெற வேண்டும். ஹார்முஸ் ஜலசந்திக்கு ஒரு புதிய நிர்வாக அமைப்பை நிறுவ வேண்டும். ஈரான் மீதான தடைகளை நீக்க வேண்டும். முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும். ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க 30 நாள் காலக்கெடுவை ஈரான் வலியுறுத்தி உள்ளது. ஈரான் அளித்த சமரச திட்டத்தில் திருப்தி இல்லை என்று டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஈரான் தற்போது எங்களுக்கு அனுப்பியுள்ள சமரச திட்டத்தை நான் விரைவில் ஆய்வு செய்ய உள்ளேன். ஆனால், கடந்த 47 ஆண்டுகளில் மனிதகுலத்திற்கும் உலகிற்கும் எதிராக அவர்கள் செய்த செயல்களுக்கு இன்னும் போதுமான அளவு பெரிய விலையை அவர்கள் செலுத்தாத நிலையில், அத்திட்டம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கும் என்று என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார். பின்னர் புளோரிடாவில் டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, ஈரான் முறையற்ற வகையில் நடந்து கொண்டால் அல்லது ஏதேனும் தவறான செயலைச் செய்தால் அந்நாடு மீது புதிய தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஈரான் விஷயத்தில் நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். தங்கள் தலைவர் யார் என்பதைக் கண்டறிவதில் அவர்கள் சிரமப்படுகிறார்கள். ஈரான் அளித்த ஒப்பந்தத்தின் கருத்தைப் பற்றி என்னிடம் கூறினார்கள். தற்போது என்னிடம் துல்லியமான வாசகங்களை வழங்கப்போகிறார்கள். அதை நான் பரிசீலித்துவிட்டு பின்னர் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்றார்.















