மருந்து வணிகர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் – மு.வீரபாண்டியன்
Share
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெருவித்திருப்பதாவது: ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யக்கோரி நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்துகின்றனர். ஆன்லைன் மருந்து விற்பனை நாடு முழுவதும் இயங்கிவரும் சிறிய மருந்துக் கடைகளின் விற்பனையை பாதித்து வருகிறது. பல ஆயிரம் கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் சிறிய மருந்து விற்பனைக் கடைகள், நாடு முழுவதும் மூடப்பட்டால், லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அது மட்டுமின்றி கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக அவசர காலத்தில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காத நிலை ஏற்படும். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யும் ஏகபோக நிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்கு மருந்து விநியோகம் மற்றும் விற்பனை சென்றுவிடும். அந்நிறுவனங்கள் மருந்துப் பதுக்கலில் ஈடுபட்டு, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி மருந்துகளின் விலைகளை ஏற்றும் அபாயம் ஏற்படும். புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும், பெருந்தொற்று ஏற்படும் காலங்களிலும் மக்களுக்கு உடனடியாக அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, இப்பிரச்சனைக்குத் தீர்வு காண மருந்து வணிகர் சங்கத்தின் தலைவர்களை அழைத்துப்பேசி உரிய தீர்வை காண வேண்டுமென ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















