LOADING

Type to search

இந்திய அரசியல்

மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் செல்கிறார்

Share

தமிழக சட்டமன்றத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே. அவர் 2011, 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி வாகை சூடியிருந்தார். எனவே, கொளத்தூர் தொகுதியில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து வந்தார். த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுகளிலும் முன்னிலை பெற்று வந்தார். மு.க.ஸ்டாலினை விடவும் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தையே அலங்கரித்து வந்தார். மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்தார். அவர் 72 ஆயிரத்து 988 வாக்குகளும், த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு 82 ஆயிரத்து 109 வாக்குகளும் பெற்றனர். மு.க.ஸ்டாலின் 9 ஆயிரத்து 121 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். கருணாநிதி மறைவுக்கு பின்னர் தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்று வந்தார். அதற்கு விஜய் தலைமையிலான த.வெ.க. முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தநிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் விதமாக கொளத்தூர் தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் இன்று மாலை செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அன்பு கொளத்தூர் தொகுதி மக்களே..உங்களுக்காக பணியாற்ற எனக்கு 3 முறை வாய்ப்பை வழங்கினீர்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களுக்கான பணிகளை மனநிறைவுடன் செய்து கொடுத்தேன். இந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன். வாக்களித்தவருக்கும், வாக்களிக்காதவருக்கும் என்றும் உங்களில் ஒருவனாக இருப்பேன் என அதில் கூறியுள்ளார்.