வங்காளதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகினர்
Share
வங்காளதேசத்தில் கனமழை தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் சிட்டகாங்க் மாகாணத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழையால் அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கனமழை தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர் என வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, மொத்தம் 64 மாவட்டங்களில் உள்ள 7 மாவட்டங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டு உள்ளன. 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்து உள்ளது. இவற்றில் அதிக அளவாக காக்ஸ் பஜார் மாவட்டத்தில் 28 பேர் பலியாகி உள்ளனர். சட்டோகிராம் பகுதியில் 13 பேர், பந்தர்பன் பகுதியில் 6 பேரும் பலியாகி உள்ளனர். இவர்களில் பலர் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ரோகிங்கியா முஸ்லிம்கள் ஆவர்.















