LOADING

Type to search

இலங்கை அரசியல்

விஜய் தன்னை ஒரு தலைவராக நிரூபிப்பாரா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

Share

அன்னையர் தினத்திலன்று நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றபோது அவருடைய இரண்டு வளர்ந்த பிள்ளைகளும் அந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை. தகப்பனுக்கும் தாய்க்கும் இடையிலான பிணக்கில் அவர்கள் தாயோடு நின்றார்கள். அன்னையர் தினத்தன்று விஜயின் இரண்டு வளர்ந்த பிள்ளைகளும் தமது தாய்க்குக் கொடுத்த மதிப்பு அது.

அதேசமயம் அந்த வைபவத்தில் கலந்து கொண்ட விஜயின் தாய் ஒரு குழந்தைப் பிள்ளை போல குதூகலமாகக் காணப்பட்டார். விஜயின் தந்தை ஒருவித பரவச மனோ நிலையில் காணப்பட்டார். மகன் முதல்வராகப் பதவி ஏற்பதைக் கண் நிறையப் பார்த்து ரசிப்பது எந்த ஒரு தந்தைக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு என்ற பொருள்பட ஊடகங்களுக்குப் பதில் சொன்னார். மகன் முதலமைச்சராகப் பதவி ஏற்பதை ஒரு தாய் பார்த்துக் குதூகலிக்கிறார். இன்னொரு தாய் தன் கணவன் முதலமைச்சராகப் பதவி ஏற்பதைக் கொண்டாட விரும்பவில்லை. பிள்ளைகளும் அவரோடு சேர்ந்து நின்றார்கள். தமிழகத்தின் அரசியல் நிலப்பரப்பில் அன்னையர் தினம் இவ்வாறு அனுஷ்டிக்கப்பட்டது.

பதவியேற்ற அன்று விஜய் ஆற்றிய உரை அவர் மீதான மதிப்பை உயர்த்துவதாக இருக்கவில்லை. அவர் அட்டகாசமாகப் பேசினார். கண்கள், உடல் மொழி எல்லாவற்றிலும் திரை நாயகத்தனம் தெரிந்தது. பெருந்தலைவர்கள் பேசும் போது எவ்வளவுதான் ஆக்ரோஷமான கருத்துக்களை சொன்னாலும் எவ்வளவுதான் உணர்ச்சிக் கொந்தளிப்பான கருத்துக்களைத் தெரிவித்தாலும் அவர்களுடைய குரலின் அடியில் ஒரு பேரமைதி இருக்கும்.

பெருந் தலைவர்கள் பேசும் போது சிங்கம் போல கர்ஜித்தார் ; காட்டுப் புலியைப் போல உறுமினார்என்றெல்லாம் கலைத்துவமாகச் சொல்வார்கள். சிங்கம் கர்ஜிக்கும்போது அந்தக் குரல் மற்றவர்களை அச்சுறுத்தும் பேரமைதியின் ஆழத்தில் இருந்து வரும். அந்தக் குரல் உணர்ச்சிவசப்பட்டுக் கிளியாது. அதிரும்.

பதவியேற்பு வைபவத்தில் விஜய் பேசியபோது அவருடைய குரல் அவ்வாறான பேரமதியின் ஆழத்தில் இருந்து வரவில்லை. உடல் மொழிகளும் அப்படித்தான். தன்னைத்  திரை நாயகனாகத்தான் அவர் காட்டிக் கொண்டார்.

விஜய் மட்டுமல்ல சீமான் பேசும்போதும் அந்தக் குரலில் பேரமைதி இருப்பதில்லை. ஆக்ரோஷமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் அதில் இருக்கும். அதனால் குரல் பல சமயங்களில் கிழிந்து விடும். அல்லது அதன் அடர்த்தியை இழந்து விடும். குரல் கேரும்.

எம்ஜிஆர்,அவர் மீதான கொலை முயற்சியின்பின் குரலின் அடர்த்தியை இழந்துவிட்டார். சாகும்வரை அது அவருக்கு ஒரு பற்றாக்குறையாகவே இருந்தது. அதேசமயம் அதை அவருடைய தனித்துவம் மிக்க பாணி என்று கருதிய ரசிகர்களும் உண்டு. ஜெயலலிதாவின் குரலில் அடர்த்தி இருக்கும் அழுத்தம் இருக்கும்.

விஜய் பதவியேற்றபோது அவருடைய ரசிகர்களும் அவருக்கு வாக்களித்த மக்களும் எதிர்பார்த்ததைப்போல தன்னுடைய கிறிஸ்தவப் பெயரைச் சொல்லி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதற்கென்றே காத்திருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். அவருடைய ஆடைகளிலும் அவர் மேற்கத்திய பண்பாட்டு உடுப்புகளைத்தான் அணிந்திருந்தார். அவர், தன்னுடைய நேர்காணல் ஒன்றில், பல ஆண்டுகளுக்கு முன் சொன்னது போல, அவருடைய திரை நாயக பிம்பத்தைக் கட்டி எழுப்பிய,அதே அவருக்கு விருப்பமான உடுப்பு. மேல் கோட்டை அணிந்து அதன் பொத்தான்களை மூடாமல் விடுவது.

தன்னுடைய முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வில் தன்னுடைய ஆடைத் தெரிவின்மூலம் அவர் தன்னை வித்தியாசப்படுத்தி கொள்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? தமிழ்நாட்டில் இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு மூன்றாவது தரப்பின் எழுச்சியை அது காட்டுகிறதா? அல்லது இதற்கு முன்பிருந்த முதல்வர்களின் ஆடைப் பாரம்பரியத்தில் இருந்து  விலகி, மேற்கத்தியப் பண்பாட்டு உடுப்புக்களோடு தோன்றுவதன்மூலம் அங்கே ஒரு பண்பாட்டு மாற்றத்தை கருத்தியல் மாற்றத்தை விஜய்  காட்ட முற்படுகிறாரா? அல்லது அதுவும் அவருடைய திரை நாயக பிம்பத்தின் தொடர்ச்சியா?

அவருடைய திரைப்படங்களில் அவர் அப்படிப்பட்ட ஆடைகளோடு தோன்றுவதைத்தான் விரும்புகிறார். மேல் கோட்டை அணிந்து,அதை மூடாமல் திறந்து விடுவது. தமிழகம் அதை ரசித்தது.அப்பொழுது அந்த ஆடை அவருடைய அடையாளமாகக் கருதப்பட்டது. ஒரு திரை நாயக பிம்பத்தைக் கட்டி எழுப்புவதற்கான அம்சங்களில் ஒன்றாகவும் கருதப்பட்டது. அங்கே பண்பாட்டு அடிப்படையிலான விவாதங்கள் நடக்கவில்லை. ஆனால் இப்பொழுது அவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்.இந்தியாவிலுள்ள இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தின் முதலமைச்சர்.

டெல்லி மையக் கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு தனக்கென்று தன்னாட்சி வேட்கையை, பெரு விருப்பை, திட சங்கற்பத்தை, பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்திய ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். எனவே அவர் இனி அவர் உடுத்திக் கொள்ளும் ஆடைகளுக்காகவும் பார்க்கப்படுவார்; விமர்சிக்கப்படுவார்.

அதேசமயம் பதவியேற்று அடுத்த நாள் அவர் தன்னுடைய அரசியல் எதிரிகளையும் மூத்த தலைவர்களையும் தேடிச் சென்று சந்தித்தார்.அது அவருக்கு அபிமானத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. அந்தச் சந்திப்புக்களில் நடிப்பு இருக்கலாம். அரசியல் பாசாங்கு இருக்கலாம். ஆனால் பதவியேற்ற பின் ஒரு முதலமைச்சர் தனது அரசியல் எதிரிகளைத் தேடிச் சென்று அரவணைத்துக் கொள்வதன்மூலம் தமிழக மக்களுக்கும் தனது அரசியல் எதிரிகளுக்கும் எதையோ உணர்த்த முற்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

எதுஎப்படியும் இருக்கட்டும். இப்பொழுது அவர்தான் தமிழ்நாட்டின் தெரிவு. ஓர் அரசியல் சமூகமாக ஈழத் தமிழர்கள் அவருடன் எவ்வாறு இடையூடாடுவது?

ஒரு திரை நாயகராக அவர் ஈழத் தமிழர்கள் தொடர்பாக தெரிவித்திருக்கக்கூடிய கருத்துக்களையும், ஒரு முதலமைச்சராக அவர் தெரிவிக்கப் போகும் கருத்துக்களையும் ஒன்றோடு ஒன்று போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.

அரசியலில் தீவிரமாக இறங்கிய பின் அவர் ஈழத்தமிழர்களுக்குச் சார்பான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அவ்வாறு தெரிவிக்க வேண்டிய ஒரு தமிழகச் சூழல் உண்டு. ஏற்கனவே தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புக்களும் அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருக்கின்றன.

ஈழத் தமிழ்க் கட்சிகளின் வாழ்த்துச் செய்திகள் இந்திய ஊடகங்களில் போதிய முக்கியத்துவத்தைப் பெறவில்லை என்று அங்குள்ள ஈழத் தமிழர்கள் கூறுகிறார்கள். நடந்து முடிந்த தேர்தலில் ஈழத் தமிழர்கள் வழமையை விட அதிகம் ஆர்வமாக காணப்பட்டார்கள் என்பது இந்திய ஊடகங்களுக்கும் தமிழ் நாட்டின் சமூக வலைத்தளப்  பிரமுகர்களுக்கும் தெரியும். தாங்கள் வாக்களிக்க முடியாத ஒரு தேர்தல் களத்தில் சீமானுக்கு ஆதரவாக ஈழத் தமிழர்கள்  கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்தார்கள் என்பதும் தமிழ் நாட்டுக்குத் தெரியும்.

ஆனால் கடந்த 17 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுடைய துயரம் போதிய அளவுக்கு தமிழகத்தில் குவிமையப்படுத்தப்படவில்லை என்ற ஒரு விமர்சனம் உண்டு. யுத்தகாலங்களில் தமிழ்மக்கள் கொல்லப்படுகையில் அவர்களுடைய கிராமங்கள் குண்டு வீசி அழிக்கப்படுகையில் அவர்கள் இடம்பெயர  நிர்ப்பந்திக்கப்படுகையில், தமிழகத்தில் ரத்தம் துடிக்கும்; கொந்தளிப்பு ஏற்படும். ஆனால் 2009க்குப் பின்னர் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக அவ்வாறு தமிழகப் பொது மக்கள் கொந்தளிக்கவில்லை. ஈழப் போராட்டத்தின் உத்தியோகபூர்வ வாரிசாக தன்னைக் காட்டிக் கொண்ட சீமானாலும் தமிழகத்தை நொதிக்க வைக்க முடியவில்லை.

2009க்குப் பின்னரும் இலங்கையில் இனப் பிரச்சினையை தீர்க்கப்படவில்லை என்பதும், போரின் விளைவுகளும் போருக்குப் பின்னரான விளைவுகளும் தொடர்ந்து ஈழத் தமிழர்களைப் பாதிக்கின்றன என்பதும், தமிழகத்தில் போதிய அளவுக்கு குவிமையப்படுத்தப்படவில்லை.தமிழகத்தைக் கையாள வேண்டும், புதுடில்லியைக் கையாள வேண்டும் என்று ஈழத்தமிழ் விமர்சகர்கள் எழுதி வருகிறார்கள். ஆனால் தமிழகத்திலும் டெல்லியிலும் ஈழத்தமிழ் அரசியல் சமூகத்திற்கு என்று தொடர்பு அலுவலகங்களோ அல்லது அதைப் போன்ற பொருத்தமான கட்டமைப்புகளோ  இன்றுவரை உருவாக்கப்படவில்லை. அதாவது தமிழ் நாட்டையும் புதுடில்லியையும் ஈழத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து கையாள்வது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகளிடம் பொருத்தமான தரிசனங்களோ நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகளோ இல்லை.

இந்த லட்சணத்தில், விஜய் வந்தால் என்ன? சீமான் வந்தால் என்ன? அறிக்கைகளுக்கு அப்பால் அரசியலை நடைமுறைச் சாத்தியமான வழியில் முன்னகர்த்துவதற்குப் பொருத்தமான வெளியுறவுத் தரிசனங்கள் தேவை. இல்லையென்றால் அது தனக்காகத் தானே போராடாமல்,வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியல்தான். வெளியாருக்காகக் காத்திருப்பது என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் இயலாமைதான். தன்னைத்  தானே நம்பும் சமூகங்கள்  அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கின்றன.தன்னைத்தானே நம்பாத சமூகங்கள் வெளியாரை நம்பிக் காத்திருக்கின்றன.