LOADING

Type to search

உலக அரசியல்

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை ஈரான் சிறை பிடித்தது

Share

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை  ஈரான் சிறை பிடித்தது. ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது. சிக்கலான உளவுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, ஈரானின் 5 எண்ணெய் டேங்கர்களை தாக்கி அழித்ததாக அமெரிக்கா அறிவித்தது. தங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி, ஈரானின் 5 எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்தது. இதையடுத்து ,அமெரிக்க ராணுவத்தின் மிக நவீன மற்றும் நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனங்களில் ஒன்று தங்களிடம் சிக்கியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. மேலும், அதனை கைப்பற்றிய காட்சிகளையும் ஈரான் வெளியிட்டுள்ளது. ஆனால், இதனை மறுக்காத அமெரிக்கா, வேறுவிதமாக விளக்கம் அளித்துள்ளது. ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் நீர்மூழ்கி கப்பல் ஒரு நாளுக்கு முன்பே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் பிராந்திய கடற்பகுதியில் வழக்கமான ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், அது பழைய மாதிரியைச் சேர்ந்தது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், அதில் ரகசிய தகவல்களை சேகரிக்கும் கருவிகளோ, ரகசிய சோனார் அல்லது ரேடார் சாதனங்களோ இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நீர்மூழ்கி வாகனம் அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளை கண்டறிதல், கடலடிப் பகுதியை வரைபடமாக்குதல், உளவுத் தகவல் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இதைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தசம்பவம் காரணமாக மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.