Middlefield Seniors Wellness Club அமைப்பினர் நடத்திய வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் தந்தையர் தினக் கொண்டாட்டமும்
Share
கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் முது தமிழர்களுக்குரிய சங்கமான Middlefield Seniors Wellness Club அமைப்பினர் நடத்திய வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் தந்தையர் தினக் கொண்டாட்டமும் கடந்த 25ம் திகதி புதன்கிழமையன்று காலை 10.00 தொடக்கம் ஸ்காபுறோ- மார்க்கம் நகரங்களுக்கிடையில் உள்ள மிலிக்கன் பூங்காவில் இலக்கம்-1 என்னும் கூடாரத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.
அமைப்பின் தற்போதைய தலைவர் திரு டேவிற் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடல் மற்றும் தந்தையர் தின விழாவில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் மூத்தோர்கள் அன்னையர்கள் தந்தையர்கள் என பல தரப்பினரும் இணைந்து அன்றைய பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்க தயாராகிக் கொண்டிருந்தனர்.
மேற்படி நிகழ்விற்கு கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்தார்.
வளர்ந்தோருக்குரிய விளையாட்டுக்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் பலவும் மற்றும் காலை மற்றும் மதிய உணவும் பரிமாறப்பெற்றன.
அங்கு ‘தந்தையர் தின’ உரையாற்றிய உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் தனது உரையில் தந்தையர்களின் சிறப்புக்களை எடுத்துரை குறிப்பாக எமது தாய் மண்ணில் தந்தையர்கள் தங்கள் குடும்பத்திற்காகசுவும் தமது பிள்ளைகளுக்கு உணவையும் கல்வியையும் ஊட்டி வளர்க்க கடுமையாக வேலை செய்து தங்கள் உடலை வருத்தி பாடுபட்ட அவர்களின் சிறப்புக்களை உயர்வாக எடுத்துச் சொன்னார்.
அத்துடன் அவர் தனது உரையில் தொடர்ந்து எமது யாழ்ப்பாண மண்ணில் அண்மைக்காலமாக இளம் தந்தையர்கள் பலர் குறிப்பாக 35 வயதுக்கு குறைந்தவர்கள் தங்கள் குடும்பப் பிரச்சனைகள் காரணமாகவும் வறுமைகாரணமாகவும் தற்கொலை செய்வதும் மற்றும் விபத்துக்களில் மரணத்தை தழுவுவது தொடர்பான விபரங்களை எடுத்துரைத்து அங்கு அண்மையில் விபத்துக்களாலும் குடும்ப சச்சரவுகளினாலும் மரணத்தைத் தழுவிய இளம் தந்தையர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஒரு நிமிட அஞ்சலி செலுத்தும் வண்ணம் அங்கிருந்தவர்களை வேண்டிக்கொண்டார்.
மேலும் Middlefield Seniors Wellness Club அமைப்பின் அங்கத்தவர்களான பல தந்தையர்களும் அன்னையர்களுமாக தங்கள் கலை திறமைகளை சபையோருக்கு சமர்ப்பணம் செய்தார்கள்.
அத்துடன் அங்கு உரையாற்றவென அழைக்கப்பெற்றிருந்த சமூகத் தொண்டரும் பொறியியலாளரும் வீடு விற்பனை முகவருமான கிள்ளிவளவன் செல்லையா அவர்கள் விரைவில் நடைபெறவுள்ள மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்திற்கான தேர்தலில் போட்டியிடுவதாக முன்வந்துள்ள தனது விருப்பத்தை அங்கு பகிரங்கமாக அறிவித்து தனது வெற்றிக்காக தனது பக்கம் ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

























