LOADING

Type to search

இலங்கை அரசியல்

செம்மணி திறந்து விட்டிருக்கும் புதிய கதவுகள் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளைத்  திறந்துவிடும்.அது மனிதப் படுகொலை,யுத்தக் குற்றம் இடம்பெற்ற இடம். இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன …..” இவ்வாறு தெரிவித்திருப்பவர் மூத்த சட்டத்தரணியும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தில் பணிப்பாளரும் ஆகிய ரட்ணவேல். செம்மணி அகழ்வில் தமிழ் மக்களின் சட்ட சாட்சியமாக அவருடைய அணி நிற்கின்றது.

ஏற்கனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும் உட்பட போரில் சம்பந்தப்பட்ட  தமிழர்களுடைய வழக்குகளை அவருடைய நிறுவனம் கையாண்டு வருகிறது. தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்ற சட்டச் செயற்பாட்டு அமைப்பு அது. முஸ்லிம்கள் மத்தியில் அது போல பல அமைப்புகள் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் தொகையாக இல்லை.

மனித உரிமை சட்டத்தரணி ஆகிய சேவியர் உருவாக்கிய மனித உரிமைகளுக்கான இல்லம் இனப்பிரச்சினையின் தொடக்க காலகட்டத்தில் பெரிய பங்காற்றியது. குமார் பொன்னம்பலம் ஒரு தனி மனிதனாக இலவசமாக சட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அவரோடு இணைந்து அப்பாத்துரை விநாயகமூர்த்தியும் ஒரு சட்டச் செயற்பாட்டாளராக செயல்பட்டிருக்கிறார். அவர்களைப் போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய சட்டத்தரணிகள் இப்பொழுதும் இலவசமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்காடி வருகிறார்கள்.

தமிழ் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற சட்டத்தரணிகள் உண்டு. சட்டத்தரணிகளாக இருந்து அரசியல்வாதிகளாக வந்து தலைவர்களாக உயர்ந்த பலர் உண்டு. ஆனால் சட்டச் செயற்பாட்டாளர்கள் என்று பார்த்தால் குறைவு.

இத்தனைக்கும் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு காலமாக இன அழிப்பை எதிர்கொள்ளும் மக்கள். அதிலும் குறிப்பாக 2009 க்கு பின்னிருந்து கடந்த 16 ஆண்டுகளாக இன அழிப்புக்கு அனைத்துலக நீதியைக் கேட்கும் மக்கள்இன அழிப்புக்கு எதிராக நீதியைக் கேட்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில்தான் போதிய அளவுக்குச் சட்டச் செயற்பாட்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஆனால் மிகச் சிலதான் உண்டு. அதிலும் வசதியற்றவர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளை வழங்குவதற்கு மிக மிகச் சில  சட்ட உதவி மையங்கள்தான் உண்டு.

இது எதைக் காட்டுகிறது? நீதிக்கான தமிழ் மக்களின்  போராட்டத்தில் தேவையான பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்காத அல்லது உருவாக்க முடியாத ஒரு மக்கள் கூட்டமாக தமிழ் மக்கள் காணப்படுகிறார்கள் என்பதையா ?

நீதிக்காக போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் அதற்கு வேண்டிய சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு உரிய பொருத்தமான சட்டச் செயற்பாட்டு அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் அவ்வாறான சட்டச் செயற்பாட்டு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டால்தான் நீதியை நோக்கி தமிழ் மக்கள் பயன் பொருத்தமான விதங்களில் முன்னேறலாம். இல்லையென்றால் நீதிக்காக போராடுகிறோம் போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஐநாவிற்கு கடிதம் எழுதுவது, மனித உரிமை அமைப்புக்களுக்கு அறிக்கை எழுதுவது போன்றவற்றுக்கும் அப்பால் போராட்டம் பயன்பொருத்தமான விதங்களில் முன்நகராது.

ரட்ணவேல் கூறுவதுபோல செம்மணி புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. அதைத் தமிழ் மக்கள் கையாள வேண்டும்.கடந்த செவ்வாய்க்கிழமை  பாதிக்கப்பட்ட மக்கள் செம்மணிக்கு வந்து அங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காணுமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது. பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் அங்கு வந்தார்கள்.

இந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின்மீதான நம்பிக்கையை பலப்படுத்தும் நோக்கத்தோடு உழைத்து வருகின்றது. ஆனால் உள்நாட்டு நீதியின் போதம்மைகளை, பக்கச்சாய்வைச் சுட்டிக்காட்டி பன்நாட்டு விசாரணைப் பொறிமுறை வேண்டும் என்று கேட்கும் தமிழ் மக்கள் அதற்குத்  தேவையான பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

உள்நாட்டில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்று ஒரு தகவல் திரட்டும் தளத்தை வைத்திருக்க வேண்டும்.சட்ட ரீதியாக சான்றுகளையும் சாட்சிகளையும் ஒழுங்குபடுத்தத் தேவையான கட்டமைப்புகளை வைத்திருக்க வேண்டும். பிரான்சிஸ் ஹரிசன் கூறுவதுபோல தமிழ் மக்கள் இப்பொழுதும் இறந்தவர்களை எண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மையத்தில் இருந்து திரட்டப்பட்ட உத்தியோகபூர்வமான, ஒப்பீட்டளவில் விஞ்ஞானபூர்வமான புள்ளி விபரங்கள் யாரிடம் உண்டு?

தமிழ் மக்கள் மத்தியில் போரில் கொல்லப்பட்டவர்களின் மொத்தத் தொகை எவ்வளவு? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மொத்தத் தொகை எவ்வளவு? தமிழ் மக்களுக்குள் ஏற்பட்ட அக முரண்பாடுகளால் கொல்லப்பட்டவர்களின் தொகை எவ்வளவு? போரில் கொல்லப்பட்ட பெண்களின் தொகை எவ்வளவு? போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் தொகை எவ்வளவு? போரில்  குடும்பமாக கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை எவ்வளவு?

இதுபோல நிறைய வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் தேவை. அரசற்ற தமிழ் மக்களிடம் அவை விஞ்ஞானபூர்வமாக,ஒரு மையத்தில் தொகுக்கப்படவில்லை. ஐநாவினால் தொகுக்கப்படும் சான்றுகளையும் சாட்சிகளையும் அவற்றின் அடுத்த கட்டத்திற்கு சடட ரீதியாகப் பயன்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து டில்கோ சந்திப்பின்போது கஜேந்திரக்குமார் கேள்வி எழுப்பினார்.அதில் அவர் தன்னுடைய சொந்த அனுபவத்தையும் சுட்டிக்காட்டினார்.

அரசு இல்லாத தரப்பாகிய தமிழ் மக்கள் தங்களுக்கென்று ஒரு மையத்தில் திரட்டப்பட்ட விஞ்ஞானபூர்வமான தரவுகளையும் தகவல்களையும் கொண்டிருக்க வேண்டும்.அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். எனவே தமிழ் மக்கள் முதலில் நீதிக்கான போராட்டத்தில் தங்களுக்குத் தேவையான,பொருத்தமான,துறைசார் அமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, அனைத்துலக நீதி என்பது அனைத்துலக அரசியல்தான். அரசுகள் மத்தியில் லொபி செய்வதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியிலே தூய நீதி என்று எதுவும் கிடையாது. அது நிலை மாறு கால நீதியாக இருந்தாலும் சரி, பரிகார நீதியாக இருந்தாலும் சரி எல்லாமே அரசுகளின் நீதிதான். அரசுகள்தான் இறுதியிலும் இறுதியாக நீதியின் இறுதி வடிவத்தை தீர்மானிக்கின்றன. உலகில் உள்ள எல்லா அனைத்துலக நீதிமன்றங்களும் அரசுகளின் செல்வாக்கை மீறி நீதியை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினாலும் அதை நடைமுறைப்படுத்த முடியாது.

இந்தக் குரூரமான உலக யதார்த்தத்தை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே அரசுகளை எப்படித் தம்மை நோக்கி வளைத்து எடுப்பது என்று சிந்திக்க வேண்டும். அரசுகளின் மத்தியில் தமக்கு நண்பர்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு திரட்டிக் கொண்டால்தான் தமிழ் மக்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் மேலும் வேகமாக முன்னேறலாம்.

அரசுகள் எப்பொழுதும் தமது ராணுவப் பொருளாதார ராஜதந்திர நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும். உதாரணமாக  25க்கும் குறையாத நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராகத் தடைகள் உண்டு. அதேசமயம் அண்மை ஆண்டுகளில் சில மேற்கத்திய நாடுகளில் அரச பிரதானிகள் சிலருக்கு எதிராகவும் அரச படைத்துறை பிரதானிகள் சிலருக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு தடைகளும் ஒன்றல்ல. தமிழ்த் தரப்பில் அவர்கள் ஓர் அமைப்பைத் தடை செய்து வைத்திருக்கிறார்கள்.அந்த அமைப்போடு தொடர்புடையவர்கள் அல்லது அந்த அமைப்போடு அடையாளம் காணப்பட்டவர்களுக்கு அவர்கள் விசா வழங்குவதில்லை.அதேசமயம் அரச தரப்பில் அவர்கள் அரச கட்டமைப்பைத் தடை செய்யவில்லை.மாறாக சில பிரதானிகளைத்தான் தடைசெய்து வைத்திருக்கிறார்கள். இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்பானது கட்டமைப்பு சார்ந்த குற்றம்,அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் குற்றம் என்ற முடிவை அவர்கள் இன்னமும் எடுக்கவில்லை. இந்த விடயத்தில் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளை பெரும்பாலான எல்லா நாடுகளுமே பேணி வருகின்றன.

இனஅழிப்புத் தீர்மானத்தை, இனஅழிப்பு அறிவூட்டல் வாரத்தை நிறைவேற்றிய, இன அழிப்பு நினைவுச் சின்னத்தைத்  தமிழர்கள் நிறுவ அனுமதித்த   கனடாவிலும் இதே நிலைமைதான். எனவே இந்த விடயத்தில் உள்ள சமனற்ற தன்மையை தமிழ் மக்கள் நன்கு விளங்கி வைத்திருக்க வேண்டும். அரசுகளின் உலகம் குரூரமானது. அந்த அரசுகளின் அரங்காக இருக்கும் ஐநா ஒரு வகையில் கையாலாகாதது. அதனால் முள்ளிவாய்க்கால்களைத் தடுக்க முடியாதது என்பதைத்தான் காசா நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

எனவே அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் எப்படி அரசுகளை தம்வசப்படுத்தலாம் எப்படி அரசுகளை நண்பர்களாக்கலாம், எப்படித் தமக்கு ஆதரவான அரசுகளின் அணி ஒன்றை உருவாக்கலாம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். அதாவது ஓர் அரசைபோல சிந்தித்து செயல்பட வேண்டும்.நீதிக்காகப் போராட வேண்டுமே  தவிர காத்திருக்கக்கூடாது.