LOADING

Type to search

இந்திய அரசியல்

புதுச்சேரியில் தமிழ் மனித உரிமை நீதி பன்னாட்டு மாநாடு

Share

– நவீனன்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பள்ளி, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC), அமெரிக்கத் தமிழ் செயல் குழு (USTAG), ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் மனித உரிமை நீதி என்ற தலைப்பில் பன்னாட்டு மாநாடு 2025 செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது அமர்வு ஜெனீவாவில் நடைபெற உள்ளது. இந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது அமர்வில் உலகத் தமிழர் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இலங்கையில் தொடரும் இராணுவமயமாக்கல், தமிழர் சமூகத்தின் துயரமான நிலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த சூழலில், வரவிருக்கும் இலங்கை தீர்மானத்தில் பன்னாட்டு நீதித்துறை நடவடிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பின் முடிவு மற்றும் தன்னாட்சிக்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் புகழ்பெற்ற அறிஞர்கள், கொள்கை அமைப்பாளர்கள், பண்பாட்டு தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பன்னாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்று, தமிழ் மரபு, இன்றைய நீதி சார்ந்த சவால்கள் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பு குறித்து ஆழமான விவாதங்களில் ஈடுபடவுள்ளனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதான உரைகள். ஆய்வுக் கட்டுரைகள், மாணவர் போட்டிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் உலகத் தமிழர் அமைப்புகளுடன் கலந்துரையாடும் அமர்வுகள் இடம்பெறும்.

தொடக்க நாளான வெள்ளி, 5 செப்டம்பர் 2025இல் பரதநாட்டியம் மற்றும் தமிழ் வாழ்த்துத் தொடக்கத்துடன் ஆரம்பமாகும். பின்னர் வரவேற்பு உரையை சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பள்ளித் தலைவர் பேராசிரியர் மு. கருணாநிதி வழங்குவார். . கல்வி மற்றும் பண்பாட்டு துறைகளின் முக்கிய ஆளுமைகள் வாழ்த்துரை வழங்குவர். பேராசிரியர் கிளமெண்ட் சகாயராஜா லூர்து சிறப்புரை வழங்குவார்.

இந்நிகர்வின் முக்கிய விருந்தினர்களாக டாக்டர் ஆர்முகம் பார்சுராமன், முன்னாள் கல்வி, பண்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், மொரிசியஸ், திரு. டி.எம். பொனம்பலம், வழக்கறிஞர் மற்றும் தலைவர், முருகன் அறக்கட்டளை, மொரிசியஸ், திரு. ஆர். செல்வம், மதிப்பிற்குரிய சட்டமன்றத் தலைவர். புதுச்சேரி, பேராசிரியர் ராஜன் நரசிங்கன், துணை அமைச்சர், மொரிசியஸ், அவர்களும் இணைந்து கொள்வர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு தலைமை உரையை வழங்குவார். இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முன்னணி அறிஞர்கள் சிறப்புரை உரைகள் நிகழ்த்துவார்கள். முதல் நாள் ஆறு சிறப்பு அமர்வுகள் நடைபெறும். அவை தமிழ் மொழி, இலக்கியம். மனித உரிமைகள் மற்றும் நீதி சார்ந்த பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கும்.

இரண்டாம் நாள் சனி, 6 செப்டம்பர் 2025 அன்று பண்பாட்டு தொடக்க நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகும். சிறப்புரை மற்றும் இணை சிறப்பு அமர்வுகள் நடைபெறும். இதில் இந்திய மற்றும் பன்னாட்டு ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை வழங்குவார்கள்.

பேராசிரியர் எஸ். ரவி, டீன், மனிதவியல் பள்ளி, மத்திய தமிழ் பல்கலைக்கழகம்,
திரு. கிருஷ்ணப்பிள்ளை இளங்கோ, தலைவர், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC) ஆகியோர் இணைந்து கொள்வார்கள்.

பேராசிரியர் க. தரணிக்கராசு மாநாட்டில்்நிறைவுரை ஆற்றுவார்.

பேராசிரியர் எஸ். சுடலைமுத்து, புல முதல்வர், சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பள்ளி, திரு. கதிரவன், MAK India Ltd, நாமக்கல், பேராசிரியர் ராஜநீஷ் புட்டானி, பதிவாளர் (i/c), புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர்.

இந்த பன்னாட்டு மாநாடு ஒரு முக்கியமான கல்வி மற்றும் பண்பாட்டு முயற்சியாகும். இதன் முக்கிய நோக்கங்களாக, தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்துதல்,மனித உரிமைகள் மற்றும் நீதி சார்ந்த இன்றைய சவால்களை முன்வைத்தல்,
உலகத் தமிழ் கல்வி மற்றும் பண்பாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு தங்கள் கருத்துகள் மற்றும் ஆய்வுகளை பகிரும் மேடையை வழங்குதல் என செயற்படுகிறது.

இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, மொரிசியஸ், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்கள் பங்கேற்க இருப்பதால், இது உலகளாவிய தமிழ் அடையாளம் மற்றும் நீதி ஆதரவை கொண்டாடும் முக்கிய நிகழ்வாகும்.