ஜெனீவா இராஜதந்திர போரில் ஜெயிக்கப் போவது யார்,,,?
Share
”நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் அளித்த பேராதரவே ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் தரப்புக்கள் அமைக்கும் வியூகங்களை எல்லாம் உடைத்தெறியப் போகின்றது”
—கே.பாலா
60 ஆவது ஜெனீவா கூட்டத் தொடர்,எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகி ஒரு மாதம் வரையில் நடைபெறவுள்ளது.ஜெனீவா அமர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை எதிர்கொள்வதற்காக இலங்கையில் சிங்களவர்,தமிழர் தரப்புக்கள் ஏட்டிக்கு போட்டியாக தங்களை தயார்படுத்தி வருகின்றன. ஜெனீவாவில் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தகர்த்தெறியும் வகையில் இலங்கை அரசு நகர்வுகளை முன்னெடுத்துள்ள அதேவேளை ஜெனீவா பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கான காய் நகர்த்தல்களை தமிழர் தரப்புகள் முன்னெடுத்துள்ளன . இவ்வாறாக இரு தரப்புக்களும் ஜெனீவா இராஜதந்திர போருக்கு தமது தரப்பை வலுப்படுத்துவதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு ஆதரவு திரட்டல்களிலும் அணி சேர்ப்பிலும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில் செம்மணி உள்ளிட்ட வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப் புதைகுழிகள், வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டோர்,இராணுவத்திடம் கையளிக்கப்படட நிலையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் இராணுவ,பௌத்த நில ஆக்கிரமிப்புக்கள், அரசியல் கைதிகள் ,மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தமிழர் தரப்புக்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகியுள்ளன .இதற்காகவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அவரை செம்மணிக்கும் வருகை தரக்கோரி நடத்தப்பட்ட தொடர் போராட்டமும் அதன் விளைவாக அவர் செம்மணி சென்று மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்டதும் தமிழர் தரப்புக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.அதுமட்டுமன்றி ஐ.நா. வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர் போராட்டங்களையும் கையெழுத்து வேட்டை போராட்டங்களையும் தமிழர் தரப்பு முன்னெடுத்துள்ளதுடன் ஐ.நா. சபை உறுப்பு நாடுகளின் ஆதரவையும் கோரியுள்ளன.
அதேவேளை இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத்துக்கான தேர்தலில் தமது கட்சிக்கு தமிழ் மக்கள் கொடுத்த பேராதரவையும் இலங்கையில் நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்டுவதில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற வகையில் முன்னாள் ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்த விடயத்தையும் அதன் தொடர்ச்சியாக ஊழல்,மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்ச்சியாக கைதாவதையும் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர, அரசுக்கு எதிரான போராட்டங்களைக்கூட சுதந்திரமாக முன்னெடுக்க தமிழ் மக்களுக்கு தமது அரசு அனுமதியளித்துள்ளதையும் செம்மணி மனிதப்புதைகுழி உள்ளிட்ட அகழ்வுகள், விசாரணைகளுக்கு தமது அரசு அளித்துவரும் நிதியுதவிகள், சுதந்திரத்தையும் பயங்கரவாத தடைச் சட்ட நீக்கத்தையும் முதன்மைப்படுத்த இலங்கை அரசு தயாராகியுள்ளது.
அத்துடன் ஜெனீவா சமரை இலக்கு வைத்தே தேசியமக்கள் சக்தி அரசு வடக்கு அபிவிருத்தியில் தீவிர கவனம் செலுத்துவதாக காண்பிக்கத் தொடங்கியுள்ளது ,இதற்காகவே கடந்த 1 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் 3ஆவது கட்டத்தின் பணிகள் , குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்திறப்பு ,யாழ்ப்பாணம், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் ,உலக தென்னை தினத்தை முன்னிட்டு புதுகுடியிருப்பில் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த வடக்கு விஜயத்தின்போது செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இடத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோதும் அங்கு செல்வதை தவிர்த்த அவர் யாழ்ப்பாணத்தில் நின்றவாறு ”செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை. செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது” என ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு உறுதியளித்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய கச்சதீவுக்கு அதிரடி விஜயம் செய்து வடக்கு மீனவர்களுடன் நாம் இருக்கின்றோம் என்ற செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது மட்டுமன்றி இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் சமர்ப்பிக்கவுள்ள வாய்மொழிமூல அறிக்கையில் வெளியிடப்படவுள்ள இலங்கை குறித்த விடயங்களின்,குற்றச் சாட்டுக்களின் ,அழுத்தங்களின்,காலக்கெடுக்களின் சூட்டை தணிக்கக் கூடிய, சமாளிக்கக்கூடிய ,அதிலிருந்து தப்பிக்கக்கூடிய திட்டமிடல்களை இலங்கை அரசு ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் பெரும்பாலும் இடம்பெறுமென கருதும் விடயங்களை தெரிவு செய்து அவற்றுக்கான பதில்களையும் தயார்படுத்தியுள்ளதுடன் இன்னும் சிலவற்றில் கால அவகாசத்தை கோரியும் சில தளர்வுகளை செய்தும் நிவாரணங்களை, உறுதிமொழிகளை வழங்கியும் அந்தக் குற்றச் சாட்டுக்களை நீர்த்துப்போக வைக்கும் முயற்சியில் இலங்கையின் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதன் முதல் நகர்வாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்துள்ளார். . இதன்போது இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அமைந்த பின்னர் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்களை அவர்களுக்கு விளக்கியதுடன் பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதையும் ஆட்சியை பொறுப்பேற்று சிறிது காலத்தினுள்ளேயே பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களையும் தெளிவுபடுத்தி அதனை மேலும் தொடர சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கால அவகாசமும் தமக்கு தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார். .
அதுமட்டுமன்றி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கையின் சிறப்பு இராஜதந்திர குழு 6 ஆம் திகதி சனிக்கிழமை ஜெனிவாவுக்கு விஜயம் செய்யவுள்ளது தொடர்ந்தும் மூன்று நாட்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ள இக் குழு, உள்ளக விசாரணைகளுக்கான சர்வதேசத்தின் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை கோருவதற்கு திட்டமிட்டுள்ளதுடன், பொறுப்புக்கூறலை முழுமையடைய செய்ய கால அவகாசத்தை கோரவும் தீர்மானித்துள்ளது.அதேபோன்று கடந்த ஒரு வருடகால முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் வகையில் முழுமையான அறிக்கையையும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளது.
அத்துடன் ஜெனீவா அமர்வில் இலங்கைக்கு சிக்கல் கொடுக்கவுள்ள செம்மணி உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் இலங்கை அரசு பதில்களைத் தயாரித்து விட்டது. இலங்கையில் செம்மணி மட்டுமன்றி, கொக்குத்தொடுவாய், மண்டைதீவு, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனிதப் புதைகுழிகள் உள்ளநிலையில் இந்த புதைகுழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்சக்களே தவிர நாம் அல்ல.இந்த மனிதப்புதைகுழிகள் தொடர்பிலான ,விசாரணைகள் போன்றவற்றுக்கு நாம் போதியளவு நிதியை ஒதுக்கி வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். இதனுடன் தொடர்புபட்ட சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த கால அவகாசம் தேவையென்றே இலங்கை அரசு கோரவுள்ளது.
இந்த புதைகுழிகள் ,காணலாலாக்கப்பட்டோருடன் தொடர்புடைய சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவாகியுள்ளனர்.காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மீள நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. எனவே அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்க விரும்புகிறது. எனவே சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு நாட்டில் காணப்படும் போது, சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. உள்ளக விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கு அனுமதியளிக்கத் தயாராகவே உள்ளோம். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தேவை என்றவாறாகவே இலங்கை அரசு பதிலளிக்கப் போகின்றது .
இவ்வாறாக நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில் தமிழர் தரப்புகளுக்கான ”பிளஸ் பொயிண்ட்”களாக பாரிய செம்மணி மனிதப்புதைகுழி ,அது தொடர்பாக கைதாகி மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் செம்மணி படுகொலைகள்,,மனிதப் புதைகுழிகளுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பில் ஐ.நா.வில் சாட்சியமைக்கத் தயார் என்ற அறிவிப்பு மற்றும் ஏனைய மனிதப்புதைகுழிகள், அரசியல் கைதிகள், வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டோர் விடயங்கள் உள்ள நிலையில் இலங்கை அரசுக்கான ”பிளஸ் பொயிண்ட்”களாக நடந்து முடிந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கான தமிழ் மக்களின் பேராதரவு, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம் .புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அடுத்த வருடம் வடக்கு,கிழக்கில் மாகாண சபை தேர்தல் .முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது மூலம் நீதித்துறையின் சுதந்திரமான செயற்பாடு உறுதிப்படுத்தல்,தமிழ் மக்களின் உயிர் நீத்தோருக்கான நினைவுகூரல்களுக்கான அனுமதிகள் என்ற விடயங்கள் அமையவுள்ளன.
ஜெனீவா சமருக்கு தமிழர் தரப்பும் இலங்கை அரசும் இவ்வாறாக தயாராகியுள்ள நிலையில், சர்வதேச காணாமலே போனோர் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான ஐ. நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரே ஃபிராஞ்ச் வெளியிட்ட அறிக்கையில்,இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவையையும் வலியுறுத்துகின்றது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இந்த மீறலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவோ, மன்னிக்கவோ அல்லது மறக்கவோ கூடாது . பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், மிரட்டல் மற்றும் பழிவாங்கல்கள் குறித்தும் ஐ. நா. சபை கவலை கொண்டுள்ளது.
அதேவேளை வலுக்கட்டாயமாக காணாமல் போவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டை அங்கீகரிப்பது மற்றும் காணாமல் போனவர்கள் மீதான அலுவலகம் (OMP) மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றை நிறுவுவது உட்பட இந்த வேதனையான மரபை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது .பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாததற்கான உத்தரவாதங்களுக்கான உரிமைகளை உணர முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த நம்பகமான, சுயாதீனமான விசாரணைகளை ஆதரிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து உறுதியாக இருக்கின்றது எனக் கூறியுள்ளார்.
எனவே நடைபெறவுள்ள தமிழர் தரப்பு-இலங்கை அரசுக்கிடையிலான ஜெனீவா இராஜதந்திரப் போரில் இலங்கை அரசுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கவே அதிக வாய்ப்புண்டு. இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தி அரசு மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் பேராதரவு வழங்கியுள்ளனர்.தற்போதைய அரசு பதவியேற்று ஒருவருடம் கூட நிறைவடையவில்லை.எனவே புதிய அரசுக்கு குறிப்பிட்ட காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும்,இலங்கையில் நீதித்துறை சுதந்திரமாக செயற்படுகின்றமைக்கான சான்றுகள் உள்ளன.பயங்கரவாத சட்டம் நீக்கப்படுகின்றமை நம்பிக்கையைத் தருகின்றது.ஆகவே மனிதப் புதைகுழிகள்,காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றோம், தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் அரசின் பொறுப்புக்கூறல், நல்லிணக்க செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றவாறாக அரசுக்கு சாதகமான வகையிலும் தமிழ் மக்களுக்கும் தமிழ் தரப்புகளுக்கும் சில ஆறுதல்களையும் உறுதிமொழிகளையும் மட்டும் வழங்கும் வகையிலுமே ஐ.நா. தீர்மானம் அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது




















