LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக வெற்றிக்கழகத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை – சபாநாயகர் அப்பாவு

Share

சபாநாயகர் அப்பாவு  நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடிகர் விஜய் தமிழக அரசை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அமித்ஷா, குஷ்பு மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோரிடம் இது தொடர்பாக பேசியதாக பல செய்திகள் வந்துள்ளன. முதலமைச்சரை மிரட்டும் தொனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பா.ஜ.க.தான் இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

பிரதமருக்கு இருக்கும் புரோட்டோகால் வேறு, விஜய்க்கான புரோட்டோ கால் வேறு. பிரதமர் மற்றும் முதலமைச்சர் பற்றிப் பேசும்போது கண்ணியத்துடனும், வார்த்தைகளை பயன்படுத்தும்போது கவனத்துடனும் விஜய் இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு ஆளுங்கட்சி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயப்படுபவர்களுக்குத் தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப் போல ‘தலைவா’ பட பிரச்சனைக்காக 3 நாட்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல. மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகக் கூடாது. ஆளுனர் எதனையும் தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேசுகிறார், அய்யோ பாவம். குட்டம் முதல் ராதாபுரம் வரையிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பா.ம.க. கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குறித்து சட்டமன்றம் கூடும்போது பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.