LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழுக்கும் மீசையுண்டு….

Share

வீணைமைந்தன்- கனடா

கடந்த 04-07-2025 அன்று தனது 91வது அகவையில் தமிழ்நாட்டில் அமரத்துவம் எய்திய ‘பெருங்கவிக்கோ’ என்னும் புகழுக்குரிய வா. மு. சேதுராமன் அவர்களது நினைவாக

கடந்த 19-10-2025 அன்று ரொறன்ரோ மாநகரிலிருந்து மொன்றியால் நகரில் நடைபெற்ற ஒரு கர்நாடக இசையரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் எனக்காக கொணர்நத ‘தமிழ்ப் பணி’ யூலை மாத இதழ் பிரதியொன்றின் முன் அட்டையில் காணப்பட்ட புகைப்படம் மற்றும் செய்தியின் வாயிலாக எம்மைவிட்டு நீங்கிச் சென்ற வா.மு. சேதுராமன் அவர்களின் பிரிவுத்துயரின் வலியை அனுபவித்தேன்.

‘‘தமிழ்ப்பணி’ சஞ்சிகையானது அமர் வா.மு. சேதுரரமன் அவர்களால் நிறுவப்பெற்று தொடர்ச்சியாக பலவருடங்களாக மாதாந்தம் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதை தற்பொழுது அவரது புதல்வரும் கவிஞருமான வா. மு. சே. திருவள்ளுவர் அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார் என்பது தமிழ் இலக்கிய தளத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் தகவலாகும்.

‘மீசைக் கவிஞர்’ என்று உலகத் தமிழர்களால் ஆசையுடன் அழைக்கப்பெற்ற அமர் வா.மு. சேதுரரமன் அவர்களுடனான எனது தமிழுறவும் நட்பும் 1996ம் ஆண்டு ஆரம்பித்தது. அந்த வருடம் ரொறன்ரோ மற்றும் மொன்றியால் நகரங்களில் நடந்தேறிய ‘உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டு’ நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த அறிஞர் பெருமக்களில் வா.மு. சே ஐயா அவர்களும் ஒருவராக விளங்கினார். மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பெற்றிருந்த சிறப்புக் கவியரங்கத்தில் அவரது தலைமையில் நானும் எனது கவிதையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

அன்றிலிருந்து வா. மு. சேதுராமன் ஐயாவுடனான தமிழ் உறவும் இதயபூர்வமான நட்பும் வேரூன்றி கிளைகளைப் பரப்பி நெடுங்காலம் நீடித்துச் சென்றது.
.
அதனைத் தொடர்ந்து இரு தடவைகள் ரொறன்ரோ மற்றும் மொன்றியால் அன்பர்களின் அழைப்பில் கனடா வந்திருந்த போதும் அவரோடும் நெருங்கி உறவாட வாய்ப்பு கிட்டியது. மொன்றியாலில் அப்போது காப்புறுதி முகவராகவும் கவிஞராகவும் அறியப்பெற்றவரான அமரர் எஸ். பி. கனக்ஸ் ( கல்கிதாசன் ) அவர்களது இல்லத்தில் எமது வா. மு. சே ஐயா அவர்கள் சில நாட்கள் விருந்தினராக தஙியிருந்தார். இதனால் தினமும் அவரைச் சந்திப்பதும் உரையாடுவதும் எமக்குக் கிட்டிய பெரும் வாய்ப்பாக அமைந்தது.

‘தனது மீசையுடன் தமிழ் வளர்த்தும். தமிழ் வீச்சால் அனைவரையும் நிமிர வைத்தும் தமிழ்நாட்டில் எழுச்சிக் கவி பாரதி, மா.பொ.சி. பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் வரிசையில் வா. மு. சே ஐயாவின் ராஜராஜசோழப் பெருவேந்தனின் வாள் போன்ற தனது மீசையை அடிக்கடி தடவிய வண்ணம் தமிழ்க் கவிதைகளை எழுதிக் குவிப்பார். எம்மை தலை நமிரவைப்பார். நம் இனிய தமிழ் மொழியின் பால் பற்றுக் கொண்டவர்களுடன் கொண்டாடி மகிழ்வார்.

‘இசை தரும் வீணை இன்பம்
இடர் தவிர் ஆற்றல் இன்பம்
நசை தரு செயல்கள் இன்பம்
விசை தரு வீணைமைந்தன்
வெல்க சண்முகராக பாக்கள்
மிசை எழு இன்பம் எல்லாம்
வீணை இன்பம் எழுச்சி நல்கும்

கவிதைக்கோ நாயகராம்
கந்தவனம் மணிவிழாவில்
செவியின்பக் கவிதை தந்தார்
திகழ்கவி கண்ணதாசன்
புவிகமழ் நயத்தைச் சொன்னார்
புலம் பெயர்ந்தே வாழ் மைந்தன்
தவமனக் கவிதையெல்லாம்

தமிழ் மணம் கமழும் ஆக்கம்’
என என் கவித்தமிழைப் பாராட்டிய நினைவுகளை மீண்டும் நெஞ்சமதில் கொண்டு வந்து வசிஷ்டர் வாய்ப் பாராட்டுதலாக நினைந்து புளாங்கிதமும் பூரிப்பும் அடைகின்றேன்.
அமரர் வா.மு. சே அவர்கள் பன்னாட்டுத் தமிழுறவை செவ்வனே வளர்த்து தமது வாழ்நாட்கள் முழுவதும் ஓயாத தமிழ்ப் பணியை உலகின் பல நாடுகளில் விதைத்துச் சென்றார். அவரது இழப்பு உலகார்ந்த தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாதாத ஒன்றாகும்.

மேலும். கடந்த 02-10-2025 அன்று அமெரிக்காவில் மறைந்த வா.மு. சேதுராமன் அவர்களைக் கொண்டாடும் முகமாக உலகத் தமிழ் அறக்கட்டளை,பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்,மற்றும் வாஷிங்டன் தமிழ்அமைப்புகள் இணைந்து நடத்திய ‘புகழொளி’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அமெரிக்காவில் வாழும் ஐயாவின் இரு புதல்வர்கள் உட்பட தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த வா.மு. சே. திருவள்ளுவர் அவர்களும் இணைந்து இந்த நினைவு நிகழ்வை நடத்தினார்கள் . மேற்படி புகழஞ்சலி நிகழ்வானது ஒரு மண்டபத்தில் சபையோர் நிறைந்திருக்கவும் இணையவழி ஊடாகவும் நடைபெற்றது.. மேற்படி நிகழ்வுகளுக்கு கனடாவிலிருந்து சில அன்பர்கள் அழைக்கப்பெற்றிருந்தாலும் அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை. என்பதும் கவலைக்குரியதே!

மேற்படி நிகழ்வில் எடுக்கப்பெற்ற புகைப்படங்கள் இரண்டும் மொன்றியால் நகரில் பல வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கவிநாயகர் கந்தவனம் அவர்களின் மணிவிழாவில் எடுக்கப்பெற்ற படம் ஒன்றும் இங்கு காணப்பெறுகின்றன.