இரணைமடு குளமும் அதை சார்ந்த அரசியலும்! அந்த நீர்ப்பாசனக் குளத்தின் நீர் யாழ் மண்ணுக்குத் தேவையா?
Share
‘ஒரு விரிவான ஓர் பார்வை’

இரணைமடு குளமும் அது சம்பந்தமான அரசியலும் அதன் பின்னணியும் என்ன?அதனுடைய வாத பிரதிவாதங்கள் என்பன அடிக்கடி பேசு பொருளாக மாறுகின்றன. இரணைமடு குளம் நீரினை யாழ்ப்பாண மக்கள் பயன்பாட்டிற்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இக்குள நீர் வீணாக கடலிற்குள் சென்றடைகிறது. என்று அதனை சூழ்ந்துள்ள அரசியல் தடுத்து நிறுத்துகின்ற நடவடிக்கைகள் மற்றும் நீரினை வழங்க வேண்டும் என்ற துறை சார் வல்லுனர்களுடைய வாதங்கள்,புத்திஜீவிகளுடைய கருத்துக்கள் என்று அனுதினமும் இரணைமடுக்குளம் வான்கதவு திறந்த உடனேயே ஆரம்பிக்கின்றன. இதனை சார்ந்து இதனை சுற்றி இருக்கின்ற அரசியல் மற்றும் நீரினை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டுமா?இல்லையா? என்பது பற்றி இதனூடாக ஒரு விரிவான விளக்கத்தை பார்க்கலாம்.
இரணைமடு குளம் என்பது வட மாகாணத்தில்,கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முக்கியமான நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். 1921 ம் ஆண்டு இக் குளம் நிர்மாணிக்கப்பட்டது. இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்வள தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்தக் குளம் பெரும்பாலும் விவசாய தேவைகளுக்காக,குறிப்பாக நெல் சாகுபடிக்கான பாசன நீரை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் வட பகுதியின் விவசாய பொருளாதாரம் நிலைநிறுத்தப்படுகிறது.
இரணைமடு குளம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளின் விவசாயம், குடிநீர் வழங்கல் மற்றும் சுற்றுச் சூழல் சமநிலைக்கு மிகுந்த உதவியாக உள்ளது. மழைக்காலங்களில் சேகரிக்கப்படும் நீர்,வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கும்,மக்களுக்கும் பெறும் ஆதரவாக பயன்படுகிறது. இரணைமடு குளம் அளவுகளில் நீளம் சுமார் 10கி.மீ(6மைல்),அகலம் 1.6கி.மீ(1மைல்), ஆழம் சுமார் 34அடி(10மீ), சுற்றளவு சுமார் 26 கி.மீ பரப்பளவு சுமார் 19 சதுர கி.மீ களாக காணப்படுகிறது.
ஆகவே இரணைமடு நீரினை கடலோடு கலக்க விடாமல் யாழ்ப்பாண மக்களுக்கு வழங்க வேண்டுமா? என ஆராய்வதற்கு முதல் தற்போது 2025 டிசம்பர் பெய்த மழையால் நீரின் உயர அளவு 36 அடிகளாக உயர்த்தப்பட்டிருந்தது. 2025 இறுதியாக பெய்த மழையிலும் சரி ஒவ்வொருவருடமும் பெய்கின்ற மழையிலும் சரி நீர் வீணாக வான் கதவினை திறப்பதன் மூலம் கடலுக்குள் சென்று கலக்கிறது. இதனை கண்ட சமூகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொறியியலாளர்கள்,புத்திஜீவிகள், நீரினை வீணடிக்காமல் யாழ்ப்பாணத்திற்கு வழங்கலாம் என வாதங்களை முன்வைக்கிறார்கள். அதாவது யாழ்ப்பாணத்தில் நீர் மேலாண்மையில் என்னென்ன விடயங்களை, திட்டங்களை செய்திருக்கிறார்கள். தவறவிட்டிருக்கிறார்கள்.என்பதை ஆராய்ந்து பார்த்த பிறகு நீரினை வழங்கலாமா இல்லையா என்று முடிவுக்கு வருவோம்.
கடந்த காலங்களை பார்ப்போமேயானால் யாழ்ப்பாணம் ஒரு குடா நாடு, நிலத்திற்கு அடியில் நீரினை சேமிக்க கூடிய ஒரு தேசம்,அதனை விட பல கிணறுகள், மற்றும் ஆறுகள், குளங்கள், மழைகால நீர்,குட்டைகள், சதுப்பு நிலங்கள் என்றெல்லாம் நீர்வளங்கள் காணப்பட்டது. நன்றாகவே நிலத்தடி நீர் அளவாக இருந்தது. தற்போதும் காணப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் மக்கள் பொது கேணிகளை புனரமைப்பு செய்தார்களா? குளங்களை பாராமரித்து பேணினார்களா? வருடந்தோறும் விழுகின்ற மழைநீரினை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்களா? பல குளங்கள் காணாமலே போய்விட்டன. பல கட்டடங்கள் அதற்கு மேல் எழுப்பப்பட்டிருக்கின்றன. புதிய குளங்களை அமைப்பதற்கான எந்தவித நீண்ட கால திட்டங்கள் இல்லை, நீர் மேலாண்மை மற்றும் நிலத்தடி நீர் சார்ந்த திட்டங்கள் சரியாக செயற்படவில்லை. நீர் மேலாண்மைத்துவத்தை பற்றி யாருமே சிந்திக்காமல் உள்ளனர். இதனால் குளங்கள் நிரம்பாமல் நீர் ஆறுகள் வழியாக கடலில் கலந்துவிடுகிறது. இது ஒரு பெரிய இயற்கை வள வீணாக்கம் ஆகும். அவற்றை முறையாக சேமிக்காமலும் சரியாக பயன்படுத்தாமலும் இருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். இதன் விளைவாக மக்கள் இன்று இரணைமடு குளத்தின் நீரை கோரி குரல் எழுப்பு கின்றனர்
தற்பொழுது யாழ்ப்பாணத்தில் மக்கள் சொந்தமாக வீட்டு கிணற்றில் உள்ள தண்ணீரினை அருந்துவதில்லை. இது ஒரு புதிய கலாச்சாரமாக மாறியிருக்கிறது. ஏன் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது. யாழ்ப்பாணப் பகுதியில் கிணறுகளில் நீர் இருந்தாலும் அது சில பிரதேசங்களில் உவர்நீராகவும் மாசடைந்ததாகவும் உள்ளது. மழைநீர் நிலத்தடியில் சென்று கிணறு நீரை புதுப்பிக்காததால் கடல் நீர் நிலத்தடியில் உப்பு, நைட்ரேட் கலந்து கிணறு நீர் குடிக்க ஏற்றதல்லாததாக மாறியுள்ளது. இதனால் மக்கள் கட்டாயமாக போத்தல் நீரை வாங்கி குடிக்கின்றனர்.
அத்துடன் சில இடங்களில் விவசாய இரசாயனங்கள் மற்றும் கழிவுநீரும் கிணறு நீரை பாதிக்கின்றன. இந்த காரணங்களால் கிணற்றில் நீர் இருந்தாலும் அதை குடிப்பது பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.
யாழ்ப்பாணப் பகுதியில் நிலத்தடி நீர் உவர்நீராக மாறும் அபாயம் அதிகமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் மழைநீர் சேமிப்பு குறைவு. இந்த காரணங்களால் கிணற்றில் நீர் இருந்தாலும் அதை குடிப்பது பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. அதனால் மக்கள் தற்போது விற்பனை செய்யப்படுகின்ற தண்ணீரினை வாங்கி குடிக்கின்றார்கள்.
விளக்கமாக கூற வேண்டும் என்றால் முன்பொரு காலத்தில் நம் மூதாதையர்கள், நம் வம்சவழியினர் அப்பு ஆச்சிகள் இக் கிணற்று நீரினையே அருந்தி அதிக வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். என்பதை நாம் மறத்தல் கூடாது. ஆனால் தற்போது அவ்வாறில்லை, சிறு சிறு வயதிலேயே அதிக நோய்கள் ஏற்படுகிறது.
நீர் மாசுபாடு காரணமாக குறிப்பாக தற்போது அதிகமானோருக்கு சிறுநீரக செயலிழப்புக்கள், உயர் இரத்த அழுத்தம், சிறுநீர் தொற்று, வயிற்று நோய்கள், சரும நோய்கள் அதிகமாக உருவாகின்றன. அதிகமான மரணங்களும் பதிவாகின்றன. இவை மிக வருத்தத்திற்கு உரியதாகவே உள்ளது.
இரணைமடு நீரை கேட்பதற்கும், குடிநீரினை போத்தல்களில் வாங்கிக் குடிப்பதற்கும் முன்,மக்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள கிணற்று நீரை சரியாகப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். கிணற்று நீரை முறையாக சோதித்து, கொதிக்க வைத்து அல்லது வடிகட்டிகள் மூலம் சுத்திகரித்தால், அதையே பாதுகாப்பான குடிநீராக மாற்ற முடியும். தங்கள் வீட்டில் உள்ள கிணற்று நீரையே இவ்வாறு வடிகட்டி குடிநீராக பயன்படுத்தலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அருகில் அதே பிரதேசத்தில் சதி முடக்கில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள கிணற்றில் வடிகட்டி விற்கப்படும் நீரினை வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிகமான வடிகட்டி நிலையங்களும் உருவாகியுள்ளது. அது அவர்களின் கிணற்று நீர் போன்ற இன்னொரு கிணற்றின் நீரையே வடிகட்டுகிறார்கள்.
மேலும் மழை நீரை சேகரித்து கிணற்றில் சேர்ப்பதன் மூலம் நிலத்தடி நீர் மீண்டும் நிரம்பி, உப்பு கலப்பு குறையும். ஆனால் இன்றைய நிலைமையில் கிணறுகள் பராமரிப்பின்றி விடப்பட்டு, மழைநீர் சேமிக்கப்படாமல், இருக்கின்ற நீரையே பயன்படுத்தாமல், குடிநீரை வாங்கி குடிக்க எதிர்பார்க்கும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலை மாற்றப்படாவிட்டால், நீர் பற்றாக்குறை இயற்கையால் அல்ல, மனித அலட்சியத்தால் தொடர்ந்தும் உருவாகும்.
தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகமாக படித்த சமூகம் இருந்தும், பல தொழிநுட்பங்கள் வளர்ந்தும் இயற்கை தருகின்ற மழை வீழ்ச்சியை சேகரிப்பதற்கு முடியாமல் இருக்கிறோம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல புத்திஜீவிகள் உலகத்தில் வெவ்வேறு பிரதேசத்தில் பல நீர்ப்பாசன பொறியியளாளர் திட்டங்களையும், அணை கட்டுமானங்கள் போன்ற அதற்குரிய திட்டங்களையும், கட்டுமானங்கள் சம்பந்தமாகவும் வேலை செய்கின்றனர். பல நீர் மேலாண்மைத்துவம் கற்ற புத்திஜீவிகள் காணப்படுகின்றர். ஆனால் யாழ்ப்பாணத்தில் எவ்வித நீர் மேலாண்மைத்துவ திட்டங்களும் இல்லை. ஆனால் தற்போது இரணைமடு குளம் நீர் தேவைபடுகிறது. பலருடைய கோரிக்கையாக மாறிவருகிறது.
யுத்த காலங்களில் கூட இரணைமடு குளம் வட பகுதி மக்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கியது. அதாவது யுத்த காலங்களில் யுத்தம் முடிவடைந்து முள்ளிவாய்க்கால் ஊடாக வரும் போது இராணுவம் 50,000தொடக்கம் 75,000 வரை மக்கள் தொகை வருவார்கள் என நினைத்து அரசாங்கம் முகாம்கள், உலர் உணவுப் பொருட்கள், மருத்துவம் உட்பட அவர்களுக்கு தேவையானவை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அங்கோ லட்சக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வருகை தந்தவண்ணம் இருந்தார்கள். அவர்களையே ஆச்சரியத்தில் தள்ளியது. எப்படி இவர்கள் அங்கிருந்து வாழ்ந்தார்கள் என்று. இதற்கு காரணம் இரணைமடு குளம் ஆகும். வன்னி பெருநிலப்பரப்பு மூடப்பட்டு பொருளாதார இறுக்கங்கள் வந்த்த நிலையிலும் அங்கில்கு அரிசி உற்பத்தியிலும் விவசாய உற்பத்தியிலும் தன்னிறைவடையச்செய்தது இந்த இரணைமடு மாதா! இரணைமடு என்ற உயிர் ஆயிதமே மக்களை பசியிலிருந்தும் போராளிகளை பசியிலிருந்தும் விடுபட செய்து போராட்டம் வீரியம் கொள்ள காரணமாக இருந்தது.
ஆம் யுத்தம் தீவிரமடைந்த காலங்களில், வன்னி பகுதி மக்கள், போராளிகள் பெரும் குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டனர். அந்த நேரத்தில் இரணைமடு குளம் வன்னி பகுதியின் முக்கியமான நீராதாரமாக இருந்தது.
யுத்தம் தீவிரமடைந்த காலங்களில் வன்னி மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், போராளிகள் உணவு, குடிநீர் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கே பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்கள். அந்த கடினமான சூழலில் பசியை அடக்க கஞ்சி காய்ச்சி வழங்குவது முக்கிய மனிதாபிமான உதவியாக இருந்தது.
இறுதி போர்முனைகளில் உணவற்ற மக்களுக்கு ஒரு நேர கஞ்சியை காய்ய்ச்சி குடிக்க கூடியதாக இருந்ததென்றால் அது இரணைமடுவாள் விளைந்த அரிசியினால் ஆகும்.
யுத்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்திற்கே அரிசி தட்டுப்பாடு நிலவியது அக் காலப்பகுதில், அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு ஓர் மூடிய இறுக்கமான வலயமாக கிளிநொச்சி, வன்னி நிலப்பரப்பு இருந்த போது இரணைமடு குளமே ஒர் நீர் ஆதாரமாக விளங்கியது. இவ்வாறு விவசாய உற்பத்தியிலும் தன்னிறைவு அடைந்தமைக்கான பிரதான காரணமும் யுத்த சூழலில் புதிய நீர்த்திட்டங்கள் அமைக்க முடியாத நிலை இருந்தபோதும், பழைய நீர்ப்பாசன அமைப்புக்களான இரணைமடுகுளமும் முள்ளிவாய்க்காலும் மக்களின் உயிர்வாழ்வை பாதுகாக்க முக்கிய பங்காற்றின.
தற்போது எந்தவித நீர் மேலாண்மைத்துவத்தையும் செய்யாமல், மழை நீரினை சேமிக்காமல், குளங்களை பராமரிக்காமல், நீர் வளங்களை பாதுகாப்பு செய்யாமல், எவ்வித திட்டங்களையும் செயற்படுத்தாமல் இருது விட்டு இரணைமடு குழத்தை யாழ்பாணத்துக்கு கேட்பது முறையா என மனச்சாட்சியுடன் சொல்லுங்கள்!
அவ்வாறு இரணைமடு குள நீரிணை ஒருவேளௌ யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கினால் என்ன நடக்கும்?
வருடா வருடம் பெய்கின்ற மழை குறைவாக இருந்தால் கூட இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து குறைகின்ற நிலையில் நீர் சேமிப்பு குறையும். அந்நிலையில் யாழ்பாணத்தார் குடிக்க நீர் வழங்கினால் கிளிநொச்சி வன்னியின் விவசாயத்திற்கு நீரின்றி படுக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். உணவு உற்பத்தியில் குறைவு ஏற்படும். மீண்டும் குடி நீர் பிரச்சனைகள் எழலாம்.
ஏனெனில் இப்போது இரணைமடு குள தண்ணிய யாழ்பாணத்து தா என வாதிடுவோரின் சில்லறைத்தனமான வாதம் என்னவென்றால் ” மனிதன் உணவில்லாமல் கூட சில நாட்கள் உயிர்வாழலாம் ஆனால் நீரின்றி உயிர்வாழமுடியாது” ஆகவே நீர் தான் முதன்மை எனவே அரிசி உறொஅத்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை இரணைமடு தண்ணியை யாழ்பாணத்திற்கு குடிக்க தா! என்கிறது எப்பேற்ப்பட்ட வாதம்!
யாழில் விழும் மழைநீரை தேக்க தெரியாமல், இருக்கும் குளம், கேணி,குட்டைகளை தூர்வாரி பேண தெரியாமலும், புதிய குளங்களை அமைக்க தெரியாமலும், நிலத்தடி நீரை பாதுகாக்க தெரியாமலும் இருக்கின்ற ஓர் சமூகத்தின் வாதம் எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா!
பல நூற்றாண்டுகளுக்கு முன் பராக்கிரமபாகு மன்னன் கூறினான் “ஆகாயத்திலிருந்து விழும் ஒரு துளி நீர் கூட கடலுக்குச் செல்லக் கூடாது” என்று பெரும் சமுத்திரம் போன்ற நீர்தேக்கத்தை அன்றே கட்டி வைத்தான்.
அனால் வடக்கிலோ யாழ்பாணத்தில் மழை நீர் மூலம் கிடைக்கும் நீரை சேமிக்கும் ஏதுக்கள் இல்லை, இருக்கும் நிலத்தடி நீரை பாதுகாக்க்ஜ்ம் திட்டம் இல்லை, புதிய நீர்பாசண குளங்களை உருவாக்கும் தூர நோக்கு இல்லை , ஆனால் எங்களுக்கு இரணைமடு நீர் வேண்டும்.
ஒன்றை பளார் என்று ஆணித்தனமாக கூற வேண்டுமென்றால் வருடம் தோறும் மழைபெய்து இரணைமடு நிரம்பி வான் திறந்து கடலோடு கலந்தாலும் பறவாயில்லை ஒரு சொட்டு நீரும் நீர் மேலாண்மை இல்லா யாழ்பாணத்திற்கு கொடுக்க கூடாது.
எனவே ஒழுங்கான நீர் மேலாண்மைத்திட்டம் அமைத்து, மழைநீர் சேகரிப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பழைய குளங்கள், கால்வாய்கள், ஓடைகள் போன்ற பல நீர் வளங்களை சீரமைத்து நீர் பாதுகாப்பு குறித்த விடயங்களில் அரசியல் மற்றும் சமூகம் பாரிய கவனம் செலுத்தி “இருக்கும் நீரை முதலில் சேமிப்பதே முதல் தீர்வு” ஆகும். இது மக்கள் வாழ்வாதாரத்தையும் எதிர்கால நீர் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும். இதுவே எதிர் கால தலைமுறைக்கு நாம் செய்யும் உதவியும் காலத்தின் அவசியமும் ஆகும் .
கு.மதுசுதன்
B.Sc(Hons),M.Sc




















