“எமது ‘அனைத்துலக தமிழர் பேரவை’ அமைப்பின் செயற்பாடுகளில் தாயகத்தில் வடக்கு. கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகளுக்கே முக்கியத்துவம்!”
Share
அமைப்பின் தலைவர் கனடா வாழ் நிமால் விநாயகமூர்த்தி தனது உரையில் தெரிவிப்பு!
“இனிமேல் எம் தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை நாம் நம்பிப் பயனில்லை!”
அவுஸ்த்திரேலியா வாழ் பல்கலைக் கழகப் பேராசிரியர் செல்வா செல்வநாதன் தெரிவிப்பு
“தற்போது அநுர அரசின் திட்டமான ‘மண்டைதீவு கிறிக்கெட் தளம் ‘எதிர்காலத்தில் மிகப்பெரிய இராணுவத் தளமாகக் கூட மாறலாம்”
ஆரம்ப ‘தமிழ் நெற்’ இணையத்தளத்தின் நிறுவனர் ஜெயசந்திரன் கோபிநாத் அவர்களின் வெளிப்படையான பார்வை!

24-01-2026 அன்று சனிக்கிழமை இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் Grantview Banquest Hall விழா மண்டபத்தில் நடைபெற்ற ‘அனைத்துல தமிழர் பேரவையின் ‘பொங்கல் விழா 2026’ இல் கலை நிகழ்ச்சிகளும் கருத்துக்களின் பகிர்வும் பார்வையாளர்களுக்கு அளித்த நம்பிக்கைகள்
கடந்த 24-01-2026 அன்று சனிக்கிழமை இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் அமைந்;துள்ள Grantview Banquest Hall என்னும் விழா மண்டபத்தில் ‘அனைத்துல தமிழர் பேரவை நடத்திய ‘பொங்கல் விழா 2026’ அமைப்பின் தலைவர் கனடா வாழ் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவின் பிரதம விருந்தினராக அவுஸ்த்திரேலியா வாழ் பல்கலைக் கழகப் பேராசிரியர் செல்வா செல்வநாதன் அழைக்கப்பெற்றிருந்தார்.
சிறப்புப் பேச்சாளர்களாக அமெரிக்கா வாழ் சட்டவல்லுனர் மார்க்கண்டு விக்னேஸ்வரன், இலண்டன் வாழ் எழுத்தாளர் திருமதி நவஜோதி யோகநாதன் (அமரர் எழுத்தாளர் அகஸ்தியர் அவர்களின் புதல்வி) மற்றும் எழுத்தாளர் குணா கவியழகன் மற்றும் கனடா உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என்.லோகேந்திரலிங்கம் உட்பட சிலர் அழைக்கப்பெற்றிருந்தனர்.
இலண்டன் மாநகரில் இயங்கிவரும் இசை நடனக் கல்லூரிகளின் மாணவ மாணவிகள் வழங்கிய கர்நாடக இசை பாடல்கள் மற்றும் அர்த்தமுள்ள பரத நாட்டிய நிகழ்வுகள் ஆகியன பொங்கல் விழாவிற்கு மெருகூட்டின. அத்துடன் இலண்டன் வாழ் மெல்லிசைப் பாடக பாடகிகள் அளித்த மெல்லிசைப் பாடல்கள் ஒவ்வொரு நிகழ்வின் இடையில் காதுக்கு இனிய கீதங்களாக ஒலித்தன.
மேலும் அங்கு உரையாற்றியவர்கள் தங்கள் உரைகளில் உள்ளடக்கிய விடயங்கள் அனைத்தும் எமது தாயக மக்களின் துயரங்களைக் களைதல் மற்றும் அங்கு ஓரு சாதகமான மாற்றம் தோன்றுவதற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்களின் செயற்பாடுகளில் வெளிப்படையாகத் தோன்ற வேண்டிய மாற்றங்கள் ஆகிய விடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பெற்றது.
அதேபோன்று அங்கு மேடையில் சமர்ப்பிக்கப்பெற்ற கலை நிகழ்ச்சிகளும் கருத்துக்களின் பகிர்வும் பார்வையாளர்களுக்கு நம்பிக்கைகள் அளித்தன என்றால் அது மிகையாகாது
அங்கு உரையாற்றிய அமைப்பின் தலைவர் கனடா வாழ் நிமால் விநாயகமூர்த்தி தனது உரையில்
“எமது ‘அனைத்துலக தமிழர் பேரவை’ அமைப்பின் நோக்கங்களை மக்களுக்கு அறிவிக்கும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் யாப்பை இன்றைய தினம் முறையாக வெளியிடுகிறோம்.
எமது அமைப்பின் இந்த யாப்பு ஒரு சட்ட ஆவணம் மட்டும் அல்ல. அது உலகத் தமிழர்களின ஒற்றுமையின் உறுதி. நீதி, ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகிய மதிப்புகளின் எழுத்துப்பூர்வ உறுதிமொழி. அத்துடன் உலகம் முழுவதும் பரந்து வாழும்
தமிழர்கள் ஒரே நோக்கில், ஒரே கட்டமைப்பில், ஒரே கனவுடன் பயணிக்க வேண்டுமென்ற அடித்தளமே இந்த யாப்பு.
மேலும் எமது கட்டுமானத்தின் வழிகாட்டி மட்டும் அல்ல; நம் தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கான,
ஈழத் தமிழர் ஒன்றிணைவதற்கான ஒரு சாசனமுமாகும்.
உலகின் பல பகுதிகளில் இருந்து பல துறைகளில் பணியாற்றும் அறிவாளிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோரின் விரிவான கலந்தாலோசனைகளின் விளைவாக இந்த யாப்பு உருவானது.
ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் உலகளாவிய சமூகப் பொறுப்பு
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இது இன்றைய தேவைகளுக்கும் எதிர்கால தலைமுறைகளுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக எமது அனைத்துலக தமிழர் பேரவை அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
இன்றைய தினம், அனைத்துலகத் தமிழர் பேரவையின் இடைக்கால நிர்வாக சபையின் ஒப்புதலுடனும், உருவாக்கக் குழு, ஆலோசனைக் குழு, மற்றும் இந்த அமைப்பை உருவாக்க
உழைத்த முதன்மைச் செயற்பாட்டாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடனும், இந்த யாப்பு முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகத் தமிழர்களின் முன் அறிவிக்கப்படுகிறது. இது ஒரு யாப்பு மட்டும் அல்ல; ஈழத் தமிழர் ஒன்றிணைந்து தங்கள் தேசத்தை கட்டி எழுப்பும் வரலாற்றுச் சாசனம்.” இன்றிலிருந்து இந்த யாப்பு நடைமுறைக்கு வரும் நிலையில், யாப்பின் பிரகாரம் உறுப்பினர்களை இணைத்து, தேர்தல் ஆணையத்தை உருவாக்கி, இடைக்கால நிர்வாக சபை காலம் முடிவடையும் வேளையில் யாப்பின் படி புதிய சபைகள் தெரிவு செய்யப்படும். அத்துடன்,
அடுத்த சில மாதங்களுக்குள் தேசத்தை வலிமை பெறச் செய்யும் செயல் திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.இன்னும் நான் தெளிவாகக் கூறவிரும்புவது எமது அமைப்பின் செயற்பாடுகளில் தாயகத்தில் வடக்கு. கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகளுக்கே முக்கியத்துவம்!” என்றார்
அங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவுஸ்த்திரேலியா வாழ் பல்கலைக் கழகப் பேராசிரியர் செல்வா செல்வநாதன் தனது உரையில்
” எமது தாயக மக்கள் கடந்த ஏழு தசாப்பதங்களாக தாங்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பிய அனுப்பிய அரசியல்வாதிகளால் தொடர்ச்சியா ஏமாற்றப்பட்டுள்ளார்கள். எனவே. இனிமேல் எம் தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை நாம் நம்பிப் பயனில்லை! எனினும் எமது தலைவர் குறிப்பிட்டுள்ளது போன்று வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர்களது கல்வித் தரத்தை அதிகரிக்கவும் செய்யும் வகையில் எமது திட்டங்கள் அமையவுள்ளன” என்றார்
தொடர்ந்து சிறப்புறையாற்றிய பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களுக்காக ஆரம்பிக்கப்பெற்ற ‘தமிழ் நெற்’ இணையத்தளத்தின் நிறுவனர் ஜெயசந்திரன் கோபிநாத் அவர்களின் பல தரவுகள் மற்றும் சான்றுகள் ஆகியவற்றுடன் தனது உரையை ஆற்றினார்
அவர் தனது உரையில் ” எமது தாயகத்தின் இருப்பைக் காப்பதற்கு நாம் தவறிவிடக் கூடாது. அதற்காக மக்கள் போராட்டங்கள் அங்கு தொடர்ச்சியாக நடத்தப்பெற வேண்டும். குறிப்பாக. தற்போது அநுர அரசின் திட்டமான ‘மண்டைதீவு கிறிக்கெட் தளம் ‘எதிர்காலத்தில் மிகப்பெரிய இராணுவத் தளமாகக் கூட மாறலாம் என்ற ஐயப்பாடு எம்மில் பலருக்கு உண்டு. ஆனால் அதை விளங்கிக் கொள்ளாமலோ அன்றி விளங்கியவர்களாகவோ எமது தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பிய உறுப்பினர் அந்தத் திட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கி “ஆம்’ போடுகின்றார்கள்.
எமது வடக்கின் பல பகுதிகளை நகரமயமாக்குதல் எமது மண்ணின் தனித்துவத்தை இழந்தவர்களாக ஆக்கிவிடும். அத்துடன் எமது இறைமை. தன்னாட்சி போன்றவற்றின் அடித்தளத்தையெ அழிக்கும் அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எமக்கு தேவையில்லை என்பதை நாம் அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். எனவே இவ்வாறான அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.அத்துடன் எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விடயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்” என்றார்
தொடர்ந்து அமெரிக்கா வாழ் சட்டவல்லுனர் மார்க்கண்டு விக்னேஸ்வரன், அவர்கள் சிறிய நூல்வடிவில் அச்சடிக்கப்பெற்ற ‘அனைத்துலக தமிழர் பேரவையின் யாப்பு தொகுப்பை வெளியிட்டு வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து யாப்பின் பிரதிகள் அங்கு அழைக்கப்பெற்றிருந்த சிறப்புவிருந்தினர்கள் மற்றும் பேச்சாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு கையளிக்கப்பெற்றன.
இங்கே காணப்பெறும் படங்கள் விழாவில் எடுக்கப்பெற்றவையாகும். ”
































