யாழ்ப்பாண மருத்துவ பீட மாணவி விதுனி பஸ்நாயக்கவின் சிங்கள மொழி கட்டுரை நூல் வெளியீட்டு விழாவை ஏற்று நடத்திய பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம்
Share
யாழ்ப்பாண பல்கலைக் கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவி விதுனி பஸ்நாயக்க எழுதிய “உத்துரு கோண அருமசிய” (வடக்கு மூலையின் அதிசயம்) என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடு கடந்த 25.01.2026 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர் ஒன்றியம், சமுதாய மருத்துவத்துறை, மற்றும் மாணவர் வளநிலையம் இணைத்து நடாத்திய குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் கலந்து கொண்டார்.
அன்றைய வெளியீட்டு விழாவில் குழந்தைநல மருத்துவ நிபுணர் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ், உளநல வைத்தியநிபுணர் சி.சிவதாஸ், உளநல வைத்திய நிபுணர் ரி.கடம்பநாதன் (மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) போன்றோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர். வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள், ஊடவியலாளர்கள், நூலாசிரியருடைய உறவினர்கள் நண்பர்கள் என்று பலரும் விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டின் தென் பகுதியில் இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி வடக்கு நோக்கி நம்பிக்கைகளைச் சுமந்து வந்த மருத்துவ மாணவி ஒருவர், இனம், மதம், மொழி என்று வேறுபட்ட முற்றிலும் புதிய ஒரு மண்ணில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளுவதற்காக சந்தித்த சவால்களை சாதனைகளாக்கி வடமாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பயணித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த கட்டுரை நூல் வெளிவந்துள்ளது.
நூலை வெளியிட்டு உரையாற்றிய யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரன் “தெற்கிலிருந்து வந்த மாணவி ஒருவர் இந்த நிலத்தையும், அதன் வரலாற்று, கலாச்சார அம்சங்களையும் உள்வாங்கி வடக்குமூலையின் அதிசயம் என்கிற இந்த நூலை எழுதியிருப்பதை இட்டு தாம் பெருமை அடைவதாகவும், இத்தகைய மாற்றங்கள் வரவேற்கத்தக்கது என்றும் யாழ் மருத்துவ பீடம் அதன் மருத்துவ மாணவர்களின் இத்தகைய வளர்ச்சிப்பாதைகளுக்கு உறுதுணையாக நிற்கும்” என்றும் குறிப்பிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நிகழ்வில் நூல் தொடர்பான உரை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றன. சிங்கள மொழிமூல உரையினை கல்வியியலாளர் சாமிநாதன் விமலும், தமிழ் மொழிமூல உரையினை சர்மிலா வினோதினி அவர்களும் ஆங்கில மொழிமூல உரையினை மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியர் ரம்யா குமார் ஆகியோரும் நிகழ்த்தினர்.
வடக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், இடங்கள், சமூக வாழ்வியல் கோலங்களை நேர் சிந்தனையோடு பதிவு செய்திருக்கின்ற தன்னுடைய புத்தகத்தை பற்றி நூலாசிரியர் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
“இந்த நூல் என்னுடைய முதலாவது படைப்பு.
இலங்கையின் வட பிராந்தியத்தில் ஆறு மறக்கமுடியாத ஆண்டுகளை கடந்து வந்த அனுபவங்களை மனதார பதிவு செய்திருக்கின்ற ஒரு உணர்வுப்பூர்வமான வரலாற்று நூலாகும்.
இந்த தனித்துவமான பிராந்தியத்தை வரையறுக்கின்ற நிலப்பரப்புகள், மக்கள், நினைவுகள் மற்றும் படிப்படியான மாற்றங்களை இது பதிவு செய்கிறது. பரபரப்பான நகரங்களிலிருந்து தொலைதூரத்தில் அமைதியை சூடி இருக்கின்ற கடற்கரை பாதைகள் வரை ஒவ்வொரு பயணமும் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப்போன பண்பாடு, வரலாறு மற்றும் நம்பிக்கைகளை பிரதிபலிக்கிறது.
இது ஒரு பயணக் கதை மட்டுமல்ல, மாறாக என்னுடைய பார்வைகளை மாற்றிய சந்திப்புகள், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சமூகங்கள், மற்றும் வடக்கின் ஆன்மாவை வெளிப்படுத்தும் தருணங்களைப் பிரதிபலிக்கும் தனிப்பட்ட சிந்தனைகளின் தொகுப்பாகும். ஆறு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட அனுபவங்கள், பார்வைகள் மற்றும் உணர்வுகள் மூலம் வாசகர்கள் எழுத்தாளருடன் இணைந்து பயணம் செய்து வடக்கு தீபகற்பத்தை மறுபடியும் கண்டறிய அழைக்கப்படுகிறார்கள்.
இது ஒரு நிலத்திற்கும் அதன் மக்களுக்கும் செலுத்தப்படுகின்ற மரியாதை மிக்க நெருக்கமான பதிவாகும்”.
நன்றி :சர்மிலா வினோதினி- தங்கள் முகநூற் பதிவிற்கு




















