LOADING

Type to search

உலக அரசியல்

லெபனானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர்உயிரிழப்பு

Share

மத்திய கிழக்கு நாடான லெபனானில் உள்ள திரிபோலி நகரில் ஒரு பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 2 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் ஒவ்வொன்றும் 6 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டிருந்தது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை மற்றும் ஒரு வயதான பெண் உட்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 8 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மீட்பு உபகரணங்கள் பெரிய அளவில் இல்லாததால் மீட்புப் படையினர் அடிப்படை உபகரணங்கள் மற்றும் வெறும் கைகளால் கட்டிட இடிபாடுகளை பொதுமக்கள் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.

பொதுமக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்பு பணிகளுக்கு உதவவும், இடிந்த கட்டிடத்தில் வசிப்பவர்களை, பக்கத்து வீடுகளில் தங்க இடம் வழங்கி உதவுமாறும் அதிபர் ஜோசப் அவுன் கேட்டுக்கொண்டார். லெபனானில் பாழடைந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன. மக்கள் வசிக்கும் பல கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இங்குள்ள கட்டிடங்கள் பல சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளன. குறிப்பாக 1975-1990-ம் ஆண்டுகளில் உள்நாட்டுப் போரின் போது, வீட்டு உரிமையாளர்கள் ஏற்கனவே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அனுமதியின்றி புதிய தளங்களைச் சேர்த்துள்ளனர். கடந்த மாத இறுதியில் இதேபோல் திரிபோலியில் மற்றொரு கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. லெபனானின் பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வீடுகள் பழுது பார்ப்பு அல்லது மாற்று வீடுகளை வாங்குவதற்கான வழிகளை அரசு செயல்படுத்த தவறிவிட்டது. தற்போது நாடு முழுவதும் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பை உடனடியாக மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.