ரூ. 5 ஆயிரம் மகளிர் உரிமை தொகை: தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
Share
2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. இதே நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை மற்றும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வருகிற 20-ந் தேதி அவைக்கு அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் கண்ணியமாக வாழ்ந்திடும் வகையில், உயர்த்தப்பட்ட உதவித்தொகை, உணவுப் பொருட்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, திறன் பயிற்சி. சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் என அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கென இதுவரை 456 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை மக்களுக்கு 197 கோடி ரூபாய் மதிப்பிலான 40,601 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டன. அதே போன்று, கடந்த ஆண்டு டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கருணை, கடல் கடந்தும் தாய்த்தமிழ் உறவுகளின் இன்னல்களைக் களைந்திட உதவியது. மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய நிரந்தர வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக மொத்தம் 10,469 வீடுகள் கட்டுவதற்கு 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 6,010 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மற்ற வீடுகளின் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” மகாகவி பாரதியின் பெருங்கனவை நனவாக்கி, மகளிரின் வாழ்வை மேம்படுத்திட, அவர்தம் மாண்பைப் போற்றிட, அவர்களின் நலன் காத்திட, மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திட பல முன்னோடித் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டங்களில் முதன்மையானது ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’. இல்லங்களில் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாயை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்திடும் இத்திட்டம் இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமாகத் திகழ்கிறது. ஏறத்தாழ ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் பயன்பெறும் இந்த மகத்தான திட்டத்தைப் பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன என்பதே இத்திட்டத்தின் வெற்றி என நாம் பெருமிதம் கொள்ளலாம். நாடே போற்றும் இந்த மகத்தான திட்டத்தின் பலன்கள் எதிர்வரும் மாதங்களிலும் தடை இன்றி ஒரு கோடியே 31 இலட்சம் பயனாளிகளுக்கும் கிடைத்திடும் வகையில், அண்மையில், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை 3,000 ரூபாயும், கூடவே கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2,000 ரூபாயும் சேர்த்து, மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது. கடந்த வெள்ளிக் கிழமையன்று, வைகறைப்பொழுதில், கதிரவன் உதித்துத் தன் பயணத்தைத் தொடங்கிய அதே வேளையில் ஆரம்பித்து, மூன்று மணி நேரத்திற்குள் ஒரு கோடியே 31 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் உரிமைத் தொகை வரவு வைத்த போது இந்த நாடே திரும்பிப் பார்த்தது. மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். எதிர்காலத்தில் வரக்கூடிய தடைகளையும் நிகழ் நேரத்தில் கணித்து அவற்றையெல்லாம் தகர்த்து தன் குடிமக்களை காத்திடும் ஓர் உன்னத தலைவரைப் பெற்றது தமிழ்நாட்டு மக்களின் நல்வாய்ப்பு. மகளிர் மனம் குளிர, இல்லத்தரசிகளின் இதயங்கள் நெகிழ்ச்சியில் நிறைந்திடும் வண்ணம், ஒரே நாளில் ஏறத்தாழ 6,500 கோடி ரூபாய் நிதியினை தமிழ்நாடு எங்கும், ஏழை. எளியவரின் கரங்களில் தவழச் செய்த, எங்களின் முறை செய்து காப்பாற்றும் மன்னவனாகிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடானு கோடி மங்கையரின் சார்பாகவும், இம்மாமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். மகளிரின் பயணச் செலவிற்கான சுமையைக் குறைத்திடவும், அவர்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கவும், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் செல்ல வழி வகுக்கும் ‘விடியல் பயணம்’ திட்டத்தின் மூலம், இதுவரை 881 கோடி முறை பாதுகாப்பான பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். இதனால், சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிப்பை நமது மகளிர் பெறுகிறார்கள்.
மகளிர் கல்வியைப் போற்றிப் பாதுகாத்திட, பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தொடர்ந்திட, இவ்வரசு செயல்படுத்தியதே உயர்கல்விக்கு உதவிடும் புதுமைப்பெண் திட்டம். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர், அவர்தம் உயர்கல்வி கற்றலை மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 6,95,296 மாணவியர் பயன்பெற்றுள்ளனர். மகளிரின் தற்சார்பு வாழ்வுக்கு வழிகோல, 1989 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கம் கண்டார் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் நடைபோடும் இவ்வரசு, அவ்வியக்கம் தழைத்தோங்கிச் செழித்திடும் வகையில், இதுவரை 6,23,529 சுயஉதவிக் குழுக்கள் 1,41,718 கோடி ரூபாயை வங்கிக் கடனுதவியாக பெற்றுப் பயனடைந்திட வழிவகை செய்துள்ளது. சுய உதவிக் குழு மகளிரின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையைப் பெருக்கிட, ‘வாழ்ந்து காட்டுவோம்’ முதலான சீர்மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறப் பகுதிகளில் பயின்று கல்வி பெற்று, பணிவாய்ப்பின் பொருட்டு நகரங்களுக்கு வரும் மங்கையர், பாதுகாப்பாக தங்கிட நவீன வசதிகளுடன் கூடிய 19 தோழி விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கைம்பெண்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்திட, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் நலன் காக்கும் இத்தகைய திட்டங்கள் நாடெங்கும் பெரும் பாராட்டினைப் பெற்றதுடன், பல்வேறு மாநிலங்கள் இவற்றை பின்பற்றத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.




















