முன்னாள்-இன்னாள் எம்.பி.க்களுக்கு அநுரகுமார அரசு வைத்த ”ஆப்பு ”
Share
முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் என 330 பேருக்கும் 182 மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கும் என 512 பேருக்கு இவ்வாறு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இதற்கமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திற்காக அண்ணளவாக மாதமொன்றுக்கு 3.5 கோடி ரூபா வரையில் செலவிடப்படுகின்றது”—-கே.பாலா
இலங்கை சனத்தொகை 2 கோடி 17 இலட்சமாகவுள்ள நிலையில் இந்தளவு குறைந்த மக்கள் தொகையுள்ள நாட்டுக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை மிக அதிகமானது என்ற விமர்சனங்களும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகள் ,கொடுப்பனவுகள், சலுகைகள் ,ஓய்வூதியம் குறித்து கடும் குற்றச்ச்சாட்டுக்களும் முன்வைக்கப்படும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இதில் முதல் அதிரடியாக முன்னாள், இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்திற்கு ”ஆப்பு” வைத்துள்ளது.
அநுரகுமார அரசாங்கத்தினால் இலங்கையின் முன்னாள், இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில் அது 152 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 152 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை நீக்குவதற்கான பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நாணயக்கார பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக 2026.01.07 ஆம் திகதி சபைக்கு சமர்ப்பித்தார்.பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ,பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தினை நீக்குவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது. .
இந்நிலையில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தை அரசியலமைப்பின் 121 (1) உறுப்புரையின் பிரகாரம் பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினர். இதற்கமைய, உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட ‘பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)’ சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் 2026.02.06 ஆம் திகதியன்று பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.இந்த சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லையென்பதால் அதனைப் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) திருத்த சட்ட மூலம் கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தின் முடிவில் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க சட்டமூலத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பைக் கோரினார்.இதனையடுத்து இலத்திரனியல் முறையில் இடம்பெற்ற வாக்கெடுப்பிலேயே சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 152 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக அரசாங்கத்துடன் இணைந்து சுயேட்சைக் குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான அர்ச்சுனா இராமநாதன் , புதிய ஜனநாயக முன்னணி எம்.பி. ரவி கருணாநாயக்க ஆகியோர் வாக்களித்த நிலையில் எதிராக புதிய ஜனநாயக முன்னணி எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க,பொதுஜன பெரமுன எம்.பி சானக மாதுகொட ஆகியோருடன் ஐக்கியமக்கள் சக்தி எம்.பி.க்கள் சிலரும் வாக்களித்த நிலையில் இந்த வாக்களிப்பில் தமிழரசுக்கட்சி,தமிழ் தேசிய மக்கள் முன்னணி , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,ஐக்கிய தேசியக்கட்சி, தொழிலாளர் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , சர்வஜன அதிகாரம் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,பிரதி அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் ,அமைச்சர்கள்,அமைச்சரவை அமைச்சர்கள்,பிரதமர் என்றவாறாக வகைப் படுத்தப்படுகின்றன. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு மட்டுமே பாராளுமன்றத்தினால் வழங்கப்படுகின்றது. ஏனையவர்களின் கொடுப்பனவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சினாலேயே வழங்கப்படும். இதேவேளை தற்போதைய அநுரகுமார அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் ,அமைச்சரவை அமைச்சர்கள் பதவிகள் இல்லை .பாராளுமன்ற உறுப்பினர்கள்,பிரதி அமைச்சர்கள், அமைச்சர்கள் என்ற 3 வகையினர் மட்டுமே உள்ளனர்
அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான மாதகொடுப்பனவாக 54,285. ரூபா வழங்கப்படுகின்றது. அத்துடன் கேளிக்கைப் படியாக 1000 ரூபாவும் சாரதிகளுக்கான கொடுப்பனவுப்படியாக 3,500 ரூபாவும் (அரசாங்கத்தால் அவருக்கு சாரதியொருவர் வழங்கப்படாவிடின் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாரதிகள் படி செலுத்தப்படுகின்றது) பாராளுமன்ற அமர்வுக்கு சமுகமளிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாவும்,பாராளுமன்ற அமர்வு இல்லாத தினங்களில் நடைபெறும் ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக 2,500 ரூபாவும் (அமர்வு தினங்களில் நடைபெறும் குழுக் கூட்டத்திற்கு சமுகமளிப்பதற்கு கொடுப்பனவு செலுத்தப்படுவதில்லை) அலுவலகமொன்றைப் பராமரிப்பதற்கு 100,000 ரூபாவும் வழங்கப்படுகின்றது .அத்துடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதிக்கான நிதி ஒதுக்கீடாக வருடமொன்றுக்கு ஒரு கோடி ரூபா வழங்கப்படும் .
அத்துடன் பாராளுமன்றத்திலிருந்து ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் மாவட்டத்திற்கான தூரம் மற்றும் ஒவ்வொரு மாதத்தினதும் முதலாவது தினத்தில் 1 லீற்றர் டீசலின் ,பெற்றோலின் அங்கீகரிக்கப்பட்ட சந்தை விலை ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் படிகள் செலுத்தப்படுகின்றன.(உதாரணமாக கொழும்பு 283.94 லீற்றர்கள், கம்பஹா மற்றும் களுத்துறை 355.58 லீற்றர்கள்,வடக்கு மாகாணம் 500 லீற்றர்கள் ) நிலையான இணைப்பு மற்றும் கையடக்கத் தொலைபேசிக்காக மாதாந்தம் 50,000 ரூபாவும் வழங்கப்படும். (தொலைபேசி விலைப்பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளோ அல்லது மீளளிப்புகளோ இல்லை).பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தின் 4 தனிப்பட்ட பணியாட்டொகுதி உறுப்பினர்களின் போக்குவரத்து செலவுகளுக்காக மாதாந்தம் 10,000 ரூபாவழங்கப்படும் (ஒவ்வொருவருக்கும் 2,500 ரூபா வீதம்).இலவச தபாற்கட்டண வசதிகளாக 350,000 ரூபா பெறுமதியான முத்திரைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வருடாந்தம் வழங்கப்படுகின்றன. (காலாண்டிற்கு 87,500ரூபா ).
இதேவேளை பிரதி அமைச்சர்களுக்கான மாதாந்த கொடுப்பனவாக 65000 ரூபாவும் அமைச்சர்களுக்கான மாதந்தக் கொடுப்பனவாக 85000 ரூபாவும் பிரதமறுக்கன் கொடுப்பனவாக 95000 ரூபாவும் வழங்கப்படுவதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஏனைய கொடுப்பனவுகளும் இவர்களுக்கும் வழங்கப்படும். இந்தவகையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு 7 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. எனினும் ஓய்வூதியம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் .பிரதி அமைச்சர் .அமைச்சர் ,பிரதமரின் அடிபடைக் கொடுப்பனவு மட்டுமே கணக்கில் எடுக்கப்படும் .உதாரணமாக பாராளுமனர் உறுப்பினர் ஒருவரின் ஓய்வூதியத்திற்காக அவரின் மாதாந்த கொடுப்பனவான 54,285. ரூபாவே கணக்கில் எடுக்கப்பட்டு மாதாந்த ஓய்வூதியமாக 40000-45000 ரூபாவுக்கு இடைப்பட்ட தொகையே வழங்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தைப் பொறுத்த வரையில் ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த ஒருவருக்கே இந்த ஓய்வூதியம் கிடைக்கின்றது.அரசாங்க சேவையை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட வருடங்களுக்கான சேவையைப் பூர்த்திசெய்த ஒருவரேமுழுமையான ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களைப்பொறுத்த வரையில் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் முழுமையான ஓய்வூதியத்தைப்பெறுவதற்கான தகுதியைப் பெறுகின்றார். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எத்தனை தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் என்பது கணக்கில் எடுக்கப்படாது . 25 வருடங்களாக தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கும் 5 வருடங்கள் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கும் ஒரே அளவான ஓய்வூதியமே வழங்கப்படும் .
அந்தவகையில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் பற்றிய விபரங்களை எடுத்துப் பார்த்தால் 2025ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான தகவல்களுக்கு அமைய ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் என 330 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் 182 மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. ஏறத்தாழ 512 பேருக்கு இவ்வாறு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இதற்கமைய ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதாந்தம் ஏறத்தாழ 23 மில்லியன் ரூபாவும் மறைந்த பாராளுமன்றஉறுப்பினர்களின் துணைகளுக்காக மாதாந்தம் 11 மில்லியனுக்கு அதிகமான ரூபாவும்,தங்கி வாழ்பவர்களுக்காக 4இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திற்காக அண்ணளவாக மாதமொன்றுக்கு 3.5 கோடி ரூபாவரையில் ஒதுக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது நாட்டுக்குப்பெரும் சுமையான விடயமாக இருந்து வருகின்றது. இதனால் பொதுமக்களின் பணம் வீண் விரயமாவதால் பாராளுமன்றஉறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்வோம் என தேசிய மக்கள் சக்தியினால் தேர்தல் நேரத்தில் மக்களுக்குவழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 17 ஆம் திகதி விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய அரசுப் பேரவையின் 1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தினைநீக்குவதற்கான சட்டமூலம் கடந்த ஜனவரி மாதம் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டிருந்த நிலையில் இச்சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதாக இல்லையென்பதால் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதற்கு அமைய குறித்த சட்டமூலம் ஆளுகை நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார்மேற்பார்வைக் குழுவில் கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரத்தையடுத்தே கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதேதினம் சபாநாயகரினால் சான்றுரைக்கப்பட்டதிலிருந்து பாராளுமன்றஉறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படும் விடயத்தில் மாற்றுக் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருக்கின்றனர் என்றும் பலர் இந்த ஓய்வூதியத்தை நம்பி தமது வாழ்க்கையைக் கொண்டு செல்வதாகவும்சிலர் வாதங்களை முன்வைக்கின்றனர். எனினும் அரசியல் என்பது மக்களுக்காக அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படும் சேவை . அவர்கள் உறுப்பினர்களாக இருக்கும்போது அதற்கான செலவீனங்கள் செய்யப்பட்டாலும் ஓய்வுபெற்ற பின்னர் அவர்களிடமிருந்து மக்களுக்கு எவ்வித சேவையும் கிடைப்பதில்லை.அது மாத்திரமன்றி அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களின் துணைகளுக்கும் ஓய்வூதியம் வழங்குவது தேவையற்ற செலவீனம். பொருளாதார ரீதியில் நாடு பின்தள்ளப்படுவதற்குக் காரணமான வீண்விரயங்கள் நிறுத்தப்பட்டு சரியான பாதையில் நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும்.அதற்காக இத்தகைய நடவடிக்கைகள் தேவை என அரசாங்கத்தினால் நியாயம் கற்பிக்கப்படுகின்றது.
எனினும் தற்போதைய அரசாங்கமான ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்திக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் சொற்ப அளவில் தான் இருக்கின்றது.சந்திரிகா அரசில் மட்டுமே ஜே .வி.பி.யை சேர்ந்த 36 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் அதற்கு பின்னரான பாராளுமன்றத்தில் இவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஐ தாண்டவில்லை. தற்போதைய பாராளுமன்றத்தில்தான் இவர்கள் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி என்றவகையில் 159 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். அத்துடன் தற்போதைய பாராளுமன்றத்தில்லுள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 168 பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய முகங்கள் என்பதால் இவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தத்தினால் எந்தவித பாதிப்புகளும் இல்லை. எனவே இந்த ஓய்வூதிய நிறுத்தத்தினால் ஏனைய அரசியல் கட்சிகளின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களே பாரியளவில் பாதிக்கப்படவுள்ளதால் இது அநுரகுமார அரசாங்கத்தின் ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்து விட முடியாது.




















