LOADING

Type to search

இலங்கை அரசியல்

இந்திய செயற்கை நுண்ணறிவு( AI )மாநாட்டில் எமது அநுர குமார தமிழ் தேசிய அரசியல் நிலைமை மற்றும் பிராந்திய ராஜதந்திர மாற்றங்கள் – ஒரு ஆய்வுப் பார்வை

Share

இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தற்போது இந்தியாவில் நடைபெறுகின்ற செயற்கை நுண்ணறிவு (AI)Impact 2026 சர்வதேச மாநாட்டில் பங்கேற்று வருகிறார்.

இந்த மாநாடு ‘AI Impact 2026 Summit’ என்ற தலைப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பெப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறுகிறது. மாநாட்டின் இறுதி நிகழ்வுகள் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற உள்ளன. இந்த மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன; மேலும் 40க்கும் அதிகமான உலகத் தலைவர்கள், அரசியல் மற்றும் பிராந்திய ராஜதந்திரிகள், உத்தியோகபூர்வ தூதுவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு உலகத்தின் எதிர்கால வளர்ச்சியில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? இந்தியாவின் பங்களிப்பு என்ன? பொருளாதாரம், கல்வி, மருத்துவம்,பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அதன் பயன்பாடு எப்படி அமையும் என்பதனை குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விசேட அழைப்பை ஏற்று இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக் அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்திருக்கிறார். அங்கு அவருக்கு உத்தியோகபூர்வ மரியாதைகளுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னரும் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் மோடி அவர்களை சந்தித்திருந்தார்; அந்த சந்திப்பும் ராஜ மரியாதையுடன் நடைபெற்றது.

இதேவேளை, தற்போதைய உலக அரசியல் சூழலில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையுடன் நெருங்கிய ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றன.

சீனா அடிக்கடி இலங்கை தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதோடு, இந்தியாவும் போட்டி நிலைமையில் தனது ராஜதந்திர முயற்சிகளை அதிகரித்து வருகிறது.

இதற்கு முன்னர், பெப்ரவரி மாத ஆரம்பத்தில் ரில்வின் சில்வா அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலத் தலைவர்களை சந்தித்திருந்தார். அதன் பின்னர், அண்டை நாடு என்ற ரீதியில் பிரதமர் மோடி அவர்கள் அனுரகுமார திசாநாயக்க அவர்களை இந்த AI Summit நிகழ்விற்கு விசேடமாக அழைத்துள்ளார். மாநாட்டின் போதே பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விஜயத்தின் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மேலும்,இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுடனும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, ஆசியா-பசிபிக் பிராந்திய தலைவர்களுடனும் ஜனாதிபதி பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்த சந்திப்புகளில் அரசியல், பொருளாதாரம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

முக்கியமாக, தென் ஆசியா மற்றும் மத்திய ஆசியா தொடர்பான விவகாரங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களால் நியமிக்கப்பட்ட விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தைகள் பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மேம்பாடு,முதலீட்டு வாய்ப்புகள் போன்ற துறைகளை மையமாகக் கொண்டு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த சந்திப்பில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைகள் அல்லது எட்டப்பட்ட உடன்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பொருளாதார எழுச்சி, கையிருப்பு வளங்கள் அதிகரிப்பு, முதலீடுகளை ஊக்குவித்தல்,வரிவிதிப்புகளை குறைப்பது, ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான விவாதங்கள் போன்றவை கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட பல்வேறு நாடுகளின் தூதுவர்களையும் ஜனாதிபதி சந்தித்து நாட்டுக்கு தேவையான நன்மைகளை ஈர்க்கும் நோக்கில் பலதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

2026 பிப்ரவரி 18ஆம் தேதி பிற்பகலில் நடைபெற்ற அரச விருந்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டதுடன், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் அங்கு கருத்துப்பகிர்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் AI Summit நிகழ்வில் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ உரை இடம்பெறவுள்ளது.

AI Summit நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் பங்கேற்பது தொடர்பாக, அவர் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவரா என்பது இப்பொழுது பொருட்டல்ல. இருப்பினும், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களை உடன் கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் அவர் வழங்கும் உரை இலங்கையின் AI சார்ந்த நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இந்த விஜயத்தின் பின்னணியில் சமாந்தரமாக இந்தியாவுடன் நடைபெறக்கூடிய திரைமறைவு இலங்கை-இந்திய அரசியல் பேச்சுவார்த்தைகள் பற்றியும் அரசியல் ஆய்வாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதற்கு முன் ரில்வின் சில்வா அவர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்து பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்திருந்தார். அப்போது மாகாண சபை அமைப்பு தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டது.

தற்போது, மாநாட்டின் பெயரில் நடைபெற்றாலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்புகளில் மாகாண சபை தேர்தல் நடத்துதல் தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் திரைமறைவில் பேசப்படக்கூடும் என்ற மதிப்பீடுகள் உள்ளன. மேலும், அதிகாரப் பரவலாக்கம் (Devolution Of Power) தொடர்பான விவாதங்களும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், இந்திய அரசாங்கம் முன்வைத்த தமிழர் பிரச்சினைக்கான ஆரம்ப தீர்வாக கருதப்படும் 13ஆம் திருத்தச் சட்டம் மீண்டும் அரசியல் விவாதங்களில் முக்கிய இடத்தைப் பெறக்கூடும். குறிப்பாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களுடன் வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தொடர்பான விவகாரங்கள் மீண்டும் முன்வைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

முன்னதாக இந்தியா கொண்டுவந்த 13ஆம் திருத்தத்திற்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததும் அதிலுள்ள “வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்”(Tamils Home Land) என்பதை எதிர்த்து போராட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் வடக்கு கிழக்கை பிரித்த தரப்பாக JVPஇருந்தது. மற்றும் பல்வேறு படி நிலைகளில் சுனாமி இடைகால வரைபு, விடுதலைப் புலிகள்- இலங்கை அரசுடனான சமாதான உடன்படிக்கைகள் என்பவற்றுக்கு எதிராகவும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என பல்வேறு அரசியல் முயற்சிகளில் ஈடுபட்டு தமிழ் விரோத இந்திய விரோத நிலைபாடுடையதாக பார்க்கப்பட்ட JVP கட்சியினரே தற்போது இந்தியாவுடன் ராஜதந்திர உறவுகளில் கலந்துரையாடலில் ஈடுபடுவது அரசியல் அரங்கில் நிகழ்ந்தவோர் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் இந்தியாவை விமர்சித்த மற்றும் இந்தியா முன்னெடுத்த தமிழர் தீர்வு நலத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக முன்பு அதிதீவிரமாக செயல்பட்டிருந்த ஜேவிபி (JVP) அணிகள், தற்போது இந்தியாவுடன் நேரடி ராஜதந்திர உறவுகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படுகிறது.இதுதான் “அரசியல் அதிசயம்” என்பது.

முன்னர் இலங்கையில் குறைந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட சிறிய அரசியல் இயக்கமாக இருந்த ஜேவிபி, இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னணியில் மக்கள் ஆதரவின் மூலம் விரைவான அரசியல் வளர்ச்சியை அடைந்ந்திருக்கிறது. அந்நேரத்தில் பிராந்திய வல்லரசுகளின் தாக்கத்தை விட மக்கள் ஆணை முக்கியமானதாகவே இருந்தது என கருதலாம். மக்கள் ஆணை வழி வந்த அரசை அரவணைத்து போவதும் இந்தியாவிற்கு தேவையாக இருந்தது.
குறிப்பாக ரில்வின் சில்வா மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தற்போது இந்தியாவில் அரசியல் மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது புதிய பரிமாணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலைமையில் தமிழ் அரசியல் தரப்பின் அரடியல் இராஜதந்திர வளர்ச்சி குறைவு குறித்து நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். தமிழர் அரசியல் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் மாகாண சபை தேர்தல் நடத்துவது, அதிகாரப் பரவலாக்கம்,மற்றும் வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற விடயங்கள் அனுர-மோடி- ஜெய்சங்கர் திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு-கிழக்கு இணைப்பை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமெனக் கோரப்பட்டாலும் முன்னர் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொண்ட அரசியல் அணிகள் இப்போது அதனை எவ்வாறு அணுகும் என்பது தெளிவாக இல்லை என அப்பட்டமாக தெரிகிறது.

இந்த சமாந்தர நிலையில் இங்கோ தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளுக்குள்ளே பல்வேறுபட்ட பிரிவுகள் மற்றும் முரண்பாடுகளால் பலவீனமடைந்து, பரிதாப நிலையில் உள்ள சேடமிழுக்கும் நிலையிலேயே இருக்கிறது. அதனால் தமிழர் அரசியல் முன்னேற்றத்தில் சவால்கள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழர் அரசிசியல் படுத்து போனதால் வடக்கு-கிழக்கு பிராந்தியங்களில் பல்வேறு அரச அரசியல் கட்சிகள் ஊடுருவி செயற்பட்டு வரும் நிலமை அதிகரித்துள்ளது.

ஜேவிபி கட்சியின் அரசியல் தலைவர்கள்,தற்போது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அவர்களின் ராஜதந்திர அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தையும் அரசியல் வெற்றியாகவும் கருதலாம்.

தமிழ் அரசியல் வட்டாரங்களில் ‘ஒற்றுமை’ என்ற கோஷம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும் கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகள், உள்நாட்டு போட்டிகள் மற்றும் பரஸ்பர அரசியல் விமர்சனங்கள், குழிபறிப்புக்கள் காரணமாக தமிழ் தேசிய அரசியல் மிக மோசமாக பலவீனமடைந்துள்ளது.

குறிப்பாக,கட்சிகளுக்குள் ஏற்பட்ட இழுபறி நிலைகள் மற்றும் பிற தமிழ் தேசிய அணிகளுடன் அணிசேரா தீண்டத்தகாத அரசியல் நிலைப்பாடுகள் மேலோங்கியதன் விளைவாக தமிழ் தேசிய அரசியல் இப்போது மக்கள் மயப்பட்ட அரசியல் அல்லாமல் தனிநபர் மைய அரசியலாக மாறியுள்ளதன் விளைவுகளே இந்த வீழ்ச்சிக்கு காரணம்.

இந்த சூழலில், வடக்கு-கிழக்கு இணைப்பு 13ஆம் திருத்தச் சட்டத்தை காணி பொலிஸ் அதிகாரங்களோடு முழுமையாக அமுல்படுத்துதல், அரசியல் அமைப்பினூடான அதிகார பரவலாக்கம் போன்ற கோரிக்கைகளை இந்தியா இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என தமிழர் தரப்பில் இருந்து இராஜதந்திரத்தோடு மக்கள் பலத்தொடு வலிமையாக வலியுறுத்துவதற்கான தமிழரின் அரசியல் வலிமை தற்போது குறைந்ததாகவே காணப்படுகிறது. தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் புதிய தலைமுறை தலைவர்களை உருவாக்காத நிலையிலும் புளிச்சுப்போன அரசியல் நகர்வுகளும், இராஜதந்திரமற்ற வெற்று வாய்சவாடல் அரசியலும், குழிபறிப்பு அரசியலுமாக தமிழர அரசியல் மிகச் சுருங்கி போய் உள்ளது.

இதனுடன் ஒப்பிடும்போது, முன்னர் இந்தியாவை விமர்சித்ததாக கருதப்பட்ட ஜேவிபி தற்போது இந்தியாவுடன் நெருங்கிய ராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகின்றன என்பது இராஜதந்திர அரசியல் வளர்ச்சியின் மைல் கல் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜேவிபி (JVP) மற்றும் அதனுடன் தொடர்புடைய தலைவர்கள் — அனுரகுமார திசாநாயக்க மற்றும் ரில்வின் சில்வா உள்ளிட்டோர் — இந்தியாவையும் சீனாவையும் ஒரே நேரத்தில் இராஜதந்திரமாக மிக நேர்த்தியாக கையாள்கிறார்கள். இது அவர்களின் வெளிநாட்டு அரசியல் அணுகுமுறையில் ஏற்பட்ட பெரு மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இரு நாடுகளுடனும் தொடர்புகளை பராமரித்து தங்களது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப பூகோள அரசியலை கையாளும் கலையை சாதுர்யமாக செய்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் எதிர்மறையான உறவுகளைக் கொண்டிருந்தது, பெரும் பகை நாடுகளாக பார்க்கப்பட்டது. அந்த பின்னணியில் குறிப்பாக விளையாட்டு துறையில் கூட நேரடி போட்டிகளில் ஈடுபடத் தயங்கிய சூழ்நிலைகள் காணப்பட்டன.

இத்தகைய பின்னணியில், இலங்கை அரசின் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தரப்பு பாகிஸ்தான் மற்றும் இந்திய அரசியல் தலைவர்களுடனும், விளையாட்டு நிர்வாகத்தினருடனும் மிக இராஜதந்திரனாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். இவ்வாறான ராஜதந்திர முயற்சிகளின் மூலம் இரு நாடுகளின் அணிகளும் போட்டியிடும் சூழ்நிலையை உருவாக்கியது. இரு நாட்டின் அணிகளையும் இலங்ககியில் மோத செய்து பல கோடி கண்களை பார்க்க வைத்தது. இதற்காக பாகிஸ்தான் தலைவர்கள் இலங்கை அரசுக்கு அவர்களது பாராளுமன்றத்தில் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

பாருங்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆகாது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஆகாது, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாது ஆனால் அத்தனை வல்லாதிக்கங்களையும் சிறிய நாடான இலங்கை அரசு எப்படி மிக இராஜதந்திரமாக கையாள்கின்றது. இது தான் அச்சு அசலான இராஜதந்திரம்.

சிங்கள அரசியல் தலைமையின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள ராஜதந்திர வலையமைப்பு மற்றும் அதனை நுணுக்கமாக இராஜதந்திரிகள் சிங்கள இனத்தில் இருந்து வளர்ச்சி பெற்றதே இதற்கான காரணங்கள்.

இதற்கு மாறாக, தமிழ் அரசியல் வரலாற்றின் பின்னணியில் 30 வருட ஆயுதப் போராட்ட வரலாறு மற்றும் அரசியல் விடுதலைக்கான முயற்சிகளை முன்வைத்ததாக கருதப்படும் இனம் , உலகை ஆண்ட தமிழ் இனம் என மார்தட்டும் ஈழ தமிழர் அரசியலோ ஒரு இராஜதந்திரமும் அற்று, இன விடுதலைக்காக நவீன உலக அரசியலில் புதுமையானபரசியல் யலைமைகள் உருவாகமல், கைதேர்ந்த இராஜதந்திர விற்பனனர்கள் உருவாகாமல் தனி மனிதவரசியல் செய்யும் வெறு நாறிப்போன, ஒன்றுக்கும் உதவாத அரசியலையே கட்டமைத்திருக்கிறார்கள்.

தற்போதைய காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் தமிழர்கள் பல அரசியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். உள்நாட்டு முரண்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறைவு காரணமாக தமிழ் தேசிய அரசியல் பலவீனமடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் உலக நவீன அரசியல் போக்குக்கு ஏற்றால் போன்ற புதிய அரசியல் தலைமுறை உருவாக வேண்டிய அவசியம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இல்லையெனில் தமிழ் தேசிய அரசியல் என்பது அடுத்த தசாப்தத்திற்குள் வழக்கொழிந்து போய்விடும்.

கு.மதுசுதன்
B.Sc(Hons), M.Sc
அரசியல் ஆத்வாளர்