LOADING

Type to search

இந்திய அரசியல்

சான்றாண்மைமிக்க மாமனிதரை இழந்துவிட்டோம்!

Share

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. நல்லகண்ணு அவர்களின்
மறைவு குறித்து பழ. நெடுமாறனின் இரங்கல் அறிக்கை!

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. நல்லகண்ணு அவர்கள் தனது 101ஆவது வயதில் காலமான செய்தி அனைவரையும் அளவற்றத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பள்ளிப் பருவத்திலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் அவர். விடுதலைப் பெற்ற இந்தியாவில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக அரும்பாடுபட்டார். கம்யூனிஸ்டுக் கட்சி தடைசெய்யப்பட்ட போது, தலைமறைவாக இருந்த அவரை காவலர்கள் கைது செய்து சித்திரவதைகள் செய்தனர். அவர்மீது நெல்லை சதி வழக்குத் தொடுக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றது. 7ஆண்டு காலம் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலையானார். தமிழக கம்யூனிஸ்டுகளில் அதிக காலம் சிறையிலிருந்தவர் அவரே.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றிய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. சாதி, சமய வேறுபாடுகளுக்கப்பால் அனைவரையும் இணைக்கும் சமுதாய ஒற்றுமை தூதராகத் திகழ்ந்தார். அவரது 80ஆவது பிறந்த நாளில் கட்சி அவருக்கு அளித்த 1கோடி ரூபாய்களையும் கட்சிக்கே திரும்பக் கொடுத்தார்.

ஈழத் தமிழர் பி்ரச்சனைக்கு ஆதரவாக அகில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஐதராபாத் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தவர் அவரே. பொதுவாழ்வில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை என்பவைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த பெருமை அவருக்கு உண்டு. சான்றாண்மை நிறைந்த ஒரு மாமனிதரை தமிழ்கூறும் நல்லுலகம் இழந்திருக்கிறது. உலகத் தமிழர் பேரமைப்பு அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறது.

அன்புள்ள,

(பழ. நெடுமாறன்)
தலைவர்.