திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு காத்திருக்கும் பதவி!
Share
அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத வகையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது மற்றொரு எம்.எல்.ஏ.வான அய்யப்பனுடன் ஐக்கியமாகி இருக்கிறார். இதுவரை, எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மாற்றுக்கட்சியில் இணைவதை தமிழக அரசியல் களம் கண்டிருக்கிறது. ஆனால், முன்னாள் முதல்-அமைச்சர் ஒருவரே, இதுவரை எதிரியாக பார்க்கப்பட்ட கட்சியில் போய், அதாவது எதிர் முகாமில் போய் இணைந்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. திமுகவில் தனது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ஓ.ரவீந்திரநாத்துடன் இணைந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதாவது, திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், சட்டசபை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு தேர்தலில் அவர் வெற்றி பெற்று, திமுகவும் ஆட்சியமைக்கும் பட்சத்தில், சபாநாயகர் பொறுப்பும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.




















