LOADING

Type to search

இலங்கை அரசியல்

நல்லகண்ணு ஐயாவின் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது..!

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அவயங்களை இழந்தவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒருவருமே வெற்றி பெறவில்லை. அவர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் இயக்கத்தவர் ஒருவர் சொன்னார் கிட்டத்தட்ட 15,000 வீடுகளுக்கு ஏறி இறங்கியிருப்போம் என்று. ஆனால் அவர்கள் எந்தப் பெண்ணுக்காகப் பிரச்சாரம் செய்தார்களோ,எந்த மக்களுக்காக அந்தப் பெண் தன் ஒரு காலை இழந்தாரோ, அவருக்கு கிடைத்த வாக்குகள் மொத்தம் 2000.ஆனால் அர்ஜுனாவுக்கு கிடைத்தவை அதைவிடப் பல மடங்கு. அப்படியென்றால் தமிழ் மக்கள் யார் தங்களுக்குத் தலைவர்களாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் ?

தமிழ்நாட்டில் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவர் நல்ல கண்ணு இயற்கை எய்தி சில நாட்களில் நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகிய செய்தி வெளிவந்தது. நல்ல கண்ணுக்கு அஞ்சலிகள், வணக்கங்கள் புகழுரைகள், இரங்கள் உரைகள் போன்றன வெளிவந்து கொண்டிருந்த ஒரு பின்னணிக்குள்,விஜயினுடைய விவாகரத்து செய்தியும் வெளிவந்தது. தமிழ்கூறும் நல்லுலகில் அதிகம் வைரல் ஆகியது எதுவென்று பார்த்தால் விஜயின் விவாகரத்துச் செய்தி தான்.

நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு முன்னுதாரணம் மிக்க இலட்சியவாதி, அரசியல்வாதி, செயற்பாட்டாளர் நல்லகண்ணு எனலாம். அவருக்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை “வாழ்நாள் போராளிக்கு வீரவணக்கம்” என்று கூறி முழக்கமிட்டார்.

நல்லகண்ணுவைப் போல நல்ல மனிதர்களை அரசியலில்,அரசியல் செயற்பாட்டில் காண்பது அரிது. அவர் 101 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் அதிக காலம் சிறையில் இருந்த கொம்யூனிஸ்டுகளில் அவரும் ஒருவர். தன்னுடைய வாழ்நாளில் அவர் என்றைக்குமே தனியார் மருத்துவமனைக்குச் சென்றதில்லை. இறுதி நாள் வரையிலும் அவர் அரச மருத்துவமனைக்குத்தான் சென்றார்.தனக்கென்று பெரிய அளவில் சொத்துக்களைச் சேர்த்ததில்லை.தன் குடும்பத்துக்கும் சேர்த்ததில்லை. தனக்கு கிடைத்த பரிசுகளையும் நன்கொடைகளையும் அவர் பொது நலனுக்கே செலவழித்தார்.101 ஆண்டுகள் ஏறக்குறைய ஒரு சன்னியாசியைப் போல அவர் வாழ்ந்தார். உண்மையாகவே ஒரு வாழ்நாள் போராளியாக வாழ்ந்தார்.

ஆனால் துயரம் என்னவென்றால், அவருடைய மிக நீண்ட வாழ்நாளில் அவர் என்றைக்குமே தமிழகத்தில் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை.அவரைப் போன்ற நேர்மையான ஒரு செயற்பாட்டாளரை தமிழ்நாடு என்றைக்குமே தனது பிரதிநிதியாகத் தெரிவு செய்யவில்லை. ஏன் ?

அவரை வாழ்நாள் போராளி என்று கூறுகிறார்கள். மக்களுக்காகவே வாழ்ந்தவர் என்று கூறுகிறார்கள்.இலட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர் என்று போற்றுகிறார்கள்.ஆனால் அவரை என்றைக்குமே தேர்லில் வெற்றி பெற வைக்கவில்லை. ஏன்? நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால்தானே நாடு உருப்படும்?அரசியலில் நேர்மையானவர்கள்,கண்ணியமானவர்கள் காவி வேடம் பூணாத உண்மையான சந்நியாசிகளின் தொகை அதிகரித்தால்தான் நாடு உருப்படும்.ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் நல்லகண்ணுகளை விடவும் நடிகர்களைத்தானே எதிர்பார்ப்போடு பார்க்கிறது?

வாழ்நாள் போராளிகள், வாழும் காலத்தில் போற்றப்படாமல் இறந்தபின் ஏன் போற்றப்படுகிறார்கள்? வாழும் காலத்தில் அவர்களுடைய அருமை ஏன் தமிழ் சமூகத்துக்குத் தெரியாமல் போகிறது? வாழ்ந்து மறைந்த பின் தான் அவருக்கு சிலை வைத்துப் பட்டம் சூட்டிக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் மேற்கு வங்கத்தில்,திரிபுராவில்,கேரளத்தில் ஓரளவுக்கு நேர்மையான இடதுசாரி தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு திரிபுராவில் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சரைப் பற்றிய செய்திகளை சமூக வலைத்தளங்களில் பார்க்கமுடிந்தது. அவர் மிக எளிமையாக வாழ்ந்தார்.சொத்துச் சேர்க்கவில்லை. அரச போகங்களை அதிகம் அனுபவிக்கவில்லை.அவருடைய மனைவி ஒரு அரச ஊழியர். முச்சக்கர வண்டியில் தான் அலுவலகத்துக்கு சென்றார்.அரசு வாகனத்தில் சென்றதில்லை.அப்படிப்பட்ட எளிமையான ஒருவரை திரிபுரா மக்கள் தமது தலைவராகத் தெரிவு செய்தார்கள். ஆனால் இந்திய மாநிலங்களில் அதிகம் கல்வியறிவுடைய மாநிலங்களில் ஒன்றாகக் கணிக்கப்படும் தமிழ்நாட்டில் ஏன் நல்லகண்ணுகள் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை ?

நடிகர்களுக்காகத் தீக்குளிக்கும் ஒரு சமூகம். நடிகர்களுக்காக மீசையை வழித்துக் கொள்கிற, மொட்டை அடித்துக் கொள்கிற ஒரு சமூகம். நடிகர்களைப் பார்க்கப் போய் நசிந்து சாகும் ஒரு சமூகம். அரசியலில் நடிக்க மறுத்து நேர்மையாக வாழ்ந்த மனிதர்களை ஏன் அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றத் தவறுகிறது ?

இது சமூகத்தின் கோளாறா?அல்லது நேர்மையான அரசியல் செயற்பாட்டாளர்கள் தேர்தல் அரசியலில் வெற்றி பெறத் தேவையான தந்திரங்களையும் வியூகங்களையும் கற்றுக்கொள்ளத் தயாரில்லையா? அல்லது அவர்களால் அவற்றைக் கற்றுக் கொள்ள முடியவில்லையா?

இதில் இரண்டாவது விடயம்தான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டியது. இது தமிழ்கூறும் நல்லுலகில் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலும் அவதானிக்கப்பட்ட ஒரம்சம்.தேர்தல்மைய அரசியலில் நேர்மையானவர்கள் தங்களைப் பொருத்தி கொள்வதற்கு அல்லது சுதாகரித்துக் கொள்வதற்கு ஒன்றில் விரும்புவதில்லை.அல்லது அவர்களுக்கு முடியவில்லை.

ஆசிய,ஆப்பிரிக்க,லத்தின் அமெரிக்க தேர்தல் ஜனநாயகங்களில் மட்டுமல்ல மேற்கத்திய தேர்தல் ஜனநாயகங்களிலும் அந்த நிலைமை உண்டு.

பொதுவாக புத்திசாலித்தனத்திற்கும் ஜனரஞ்சகத்துக்கும் பொருந்தி வருவது குறைவு. இதில் புத்திசாலித்தனத்தை ஜனரஞ்சகமாக விற்கத் தெரிந்தவர்கள் அரிதாக வெற்றி பெறுகிறார்கள். பெரும்பாலான அறிஞர்களும் நேர்மையானவர்களும் தேர்தல்மைய அரசியலில் தேர்தல் போட்டிகளில் இறங்கி அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்று கருதுகிறார்கள். அதனால் பெரும்பாலும் பின்வாங்குகிறார்கள்.

அதுமட்டுமல்ல, தலைமைத்துவம் எனப்படுவது தனிய அறிவு மட்டுமல்ல. தியாகம் மட்டும் அல்ல. வீரம் மட்டும் அல்ல. அது ஒரு கலப்பு ஒழுக்கம். அறிவு கூடியவர்கள் பல சமயங்களில் இதயத்தால் செழிப்பில்லாதவர்களாக இருப்பார்கள்.அறிவு கூடியவர்கள் பல சமயங்களில் தலைமைத்துவ பண்பு இல்லாதவர்களாக இருப்பார்கள். புத்திசாலிகள் பல சமயங்களில் இதயம் இல்லாதவர்களாக இருப்பார்கள். உன்னதமான தலைமை என்பது அறிவும் இதயமும் இணைந்து மேல் எழுவது. அது மிக அரிது.

நான் திரும்பத்திரும்ப கூறும் ஒரு நடைமுறை உதாரணம் உண்டு. தூய தங்கத்தை வைத்து ஆபரணம் செய்ய முடியாது. அதில் செப்பைக் கலக்க வேண்டும். அதாவது தங்கத்தை பிரயோகநிலைக்குக் கொண்டு வருவதென்றால் அங்கே கலப்பு அவசியம். தூய தங்கத்தை வேண்டுமானால் அயர்ண் சேவில் வைக்கலாம் ஆனால் ஆபரணமாக்க முடியாது.

அப்படித்தான் பொது வாழ்விலும் அரசியலிலும். தங்களைத் தூய தங்கங்களாகக் கருதுபவர்கள், செப்போடு கலக்கத் தயாராக இல்லாதவர்கள்,நடைமுறை அரசியலில் இறங்க முடியாது.

தேர்தல் மைய அரசியலுக்கு என்று தொழில் திறன்கள் வேண்டும். தந்திரங்கள் வேண்டும். உத்திகள் வேண்டும். செல்வம் வேண்டும். புகழ் வேண்டும்.தலைமைத்துவப் பண்பு வேண்டும். இவை அனைத்தும் ஒன்றாக வாய்க்கப் பெற்றவர்கள் தேர்தல் மைய அரசியலில் வெற்றி பெறுகிறார்கள். தூய இலட்சியங்கள் அல்லது தூய தங்கமாக இருப்பவர்கள் அல்லது தூய அறிஞர்களாக இருப்பவர்கள் தேர்தல் மைய அரசியலில் வெற்றி பெறாமல் போகும் இடங்கள் இவைதான்.

தமிழ்நாட்டில் நல்லகண்ணு மட்டுமல்ல,மணிப்பூரில் இரோமி சர்மிளா என்ற பெண் மக்களுக்காக நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர். தேர்தல் கேட்டபோது அவருடைய மக்கள் அவரை குரூரமாக நிராகரித்தார்கள்.

ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அவயங்களை இழந்தவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒருவருமே வெற்றி பெறவில்லை. அவர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் இயக்கத்தவர் ஒருவர் சொன்னார் கிட்டத்தட்ட 15,000 வீடுகளுக்கு ஏறி இறங்கியிருப்போம் என்று. ஆனால் அவர்கள் எந்தப் பெண்ணுக்காகப் பிரச்சாரம் செய்தார்களோ, எந்த மக்களுக்காக அந்தப் பெண் தன் ஒரு காலை இழந்தாரோ, அவருக்கு கிடைத்த வாக்குகள் மொத்தம் 2000.ஆனால் அர்ஜுனாவுக்கு கிடைத்தவை அதைவிடப் பல மடங்கு. அப்படியென்றால் தமிழ் மக்கள் யார் தங்களுக்குத் தலைவர்களாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் ?

ஆயுதப் போராட்ட அரசியலும் தேர்தல் மைய அரசியலும் ஒன்று அல்ல. இலட்சியவாத அரசியலும் தேர்தல்மைய அரசியலும் ஒன்று அல்ல என்பதைத்தான் மனித குல வரலாறு தொடர்ச்சியாக நிரூபித்து வந்திருக்கிறது.

இங்கேதான் நல்ல கண்ணுகள் தம் சொந்த மக்களாலேயே தெரிவு செய்யப்படாமல் போகிறார்கள். அல்லது இறந்த பின் அதிகம் போற்றப்படுகிறார்கள்.

இதில் ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் எதுவென்றால், 2009க்குப் பின்னரான ஈழத் தமிழ் மிதவாத அரசியலானது இன்னமும் சரியான ஒரு தடத்தில் ஏறவில்லை. ஒரு பகுதியினர் அதனை ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக,இலட்சிய வாதமாகப் பார்க்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பது குறைவு.

இதன் பொருள் தமிழ் மக்கள் இலட்சிய வாதத்திற்கு எதிரானவர்கள் என்பதல்ல. இங்கே தவறு தமிழ் மக்களில் இல்லை.மாறாக இலட்சியவாதிகளால் தங்களுடைய அரசியலை தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியவில்லை என்பதுதான். தமது இலட்சியங்களை நிறுவனமயப்படுத்த முடியவில்லை என்பதுதான். அதற்கு தேவையான கட்டமைப்புகளையும் அவர்கள் கட்டி எழுப்பத் தவறுகிறார்கள்.

அண்மையில் தமிழகத்தில் மேற்படிப்புக்காகச் சென்ற ஒரு கிறிஸ்தவ மதகுரு விடுமுறையில் வந்தபோது சொன்னார் “அங்கே கிராம மட்டத்தில் வட்டச் செயலர் என்ற பொறுப்பு எவ்வளவு முக்கியமானது,வினைத்திறன் மிக்கது?” என்று. கீழிருந்து மேலோக்கி வாக்காளர்களை கட்சி மயப்படுத்துகின்ற வேலையை வட்டச் செயலர்கள் செய்கிறார்கள்.

தமிழ்த் தேசிய கட்சிகளில் எத்தனை அவ்வாறான கீழ்மட்டக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்றன? தமிழரசுக் கட்சியிடம் ஓரளவுக்கு உண்டு. அதனால்தான்.அந்தக் கட்சி வடக்கு கிழக்கு தழுவிய ஒப்பீட்டளவில் அதிக வெற்றிகளைப் பெறுகின்றது.

எனவே தமிழ்த் தேசிய அரசியலில் தூய்மைவாதம் இலட்சியவாதம் பேசுகின்ற கட்சிகள் முதலில் செய்ய வேண்டியது தங்களுக்குள்ள மக்கள் ஆதரவை நிறுவனமயப்படுத்துவது கட்சி மயப்படுத்துவது அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்குவது. இதற்குத் தமிழக உதாரணங்கள் கூடத் தேவையில்லை. தாயகத்திலேயே ஒரு காலம் ஆயுதப் போராட்டம் அவ்வாறான கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது.

கிராம மட்டத்தில் கிராமியப் பொறுப்பாளர்கள் அல்லது வட்டாரப் பொறுப்பாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு பொறுப்பாக ஏரியா பொறுப்பாளர் இருப்பார். அவருக்கு மேல், மாவட்டப் பொறுப்பாளர் இருப்பார். அவருக்கு மேல் அரசியல் துறைப் பொறுப்பாளர் இருப்பார். இது அரசியல் துறைக்கு மட்டுமல்ல, நிதித்துறை, படைத்துறை, புலனாய்வுத் துறை முதலாக எல்லாத் துறைகளுக்கும் இருந்தது. இந்த கட்டமைப்புகளுக்கு ஊடாகத்தான் எண்பதுகளில் எல்லா இயக்கங்களும் வளர்ச்சி பெற்றன.

எனவே தமிழ்த் தேசிய அரசியலை பாரம்பரிய தொழில்சார் அரசியலாகக் கருதாமல், புரட்சிகரமான மிதவாத அரசியலாகக் கருதுபவர்கள்,பயில்பவர்கள் முதலில் செய்யவேண்டியது கட்டமைப்புச் சார்ந்த சிந்திப்பதுதான். கட்டமைப்புச் சார்ந்த சிந்தித்தால்தான், எதையும் கட்டமைப்புக்குள்ளால் சிந்தித்தால்தான் நல்லகண்ணுகளை தலைவர்கள் ஆக்கலாம்.கெட்ட கண்ணுகளை பொதுவாழ்வில் இருந்து தோற்கடிக்கலாம்.