கிளிநொச்சி உள்ள செயற்கைக் கருத்தரிப்பு மையத்தை சீராக இயங்கவைக்கும் திட்டம் பற்றிய விளக்கத்தைச் செவிமடுத்தவைத்த பயனுள்ள கருத்தரங்கு!
Share
எம்பிபி லோகன் கணபதி, டாக்டர ராஜேஷ் லோகன் மற்றும் டாக்டர் மைலாசன் ஆகியோரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மருத்துவத்துறை பேராசிரியர்கள் ராஜேந்திரா சுரோந்திரகுமாரன். மற்றும் சிவலிங்கராஜா ரகுராமன். ரவிராஜ் ஆகியோர் இணையவழியாக கலந்து கொண்டு மிகுந்த சிரத்தையோடு கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

கடந்த மார்ச் 2ம் திகதி திங்கட்கிழமை அன்று கனடா மார்க்கம் நகரில் ‘வன்னி வீதி’க்கு அருகாமையில் அமைந்துள்ள ‘ஆன்லின் சனசமூக நிலைய’த்தின் கூட்ட அறையில் நடைபெற்ற மேற்படி கிளிநொச்சி செயற்கைக் கருத்தரிப்பு மையம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் விளக்கவுரைகளை சமர்ப்பித்தல் ஆகிய நிகழ்வுகளை, மார்க்கம் தொகுதி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் ஏற்பாடு செய்து அத்துடன் தலைமை தாங்கியும் அதனை நடத்தினார்.மேற்படி சந்திப்பில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் இயங்கிவரும் அச்சு ஊடகம்-வானொலி- தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நிறுவனங்களின் சார்பில் பல பிரதம ஆசிரியர்கள்- செய்தியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்கு முதலில் உரையாற்றிய எம்பிபி லோகன் கணபதி அவர்கள் தனது அறிமுக உரையில் எமது தாயகத்தில் பிறப்பு வீதம் குறைந்துள்ளமைக்கு காரணமாக உள்ள பலவற்றில் இயற்கையாக கருத்தரிக்கும் குறைபாடுகள் உள்ள கணவன் அல்லது மனைவியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் யுத்தத்திற்குப் பின்னர் அங்கு எடுக்கப்பெற்ற கணக்கெடுப்புக்களின் படி யுத்த காலத்தில் மரணித்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் நாட்டை விட்டு இன்றும் வெளியேறிக் கொண்டிருக்கும் எமது மக்கள். இவை காரணமாக தமிழர்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைவடைந்து வருவதும் அங்கு செயற்கை கருத்தரிப்பு மையங்களின் அவசியம் பற்றிய முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்றன என்று தெரிவித்தார்.
அடுத்து உரையாற்றிய குடும்ப வைத்தியர் டாக்டர் ராஜேஷ் லோகன் அவர்கள் எமது தாயகத்தில் கருத்தரிப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் முக்கியமாக எடுத்துரைத்து அத்துடன், நாம் வாழும் கனடாவிலும் எமது தமிழினம் இன்னும் மக்கள் தொகையில் அதிகரித்தவர்களாக வருவதற்கு எமது இளைய தம்பதிகள் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதை வற்புறுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் மேலும் தெரிவித்த பயனுள்ள கருத்துக்களில் இங்குள்ள இளைய தம்பதிகள் பல்வேறு காரணங்களுக்காக பிள்ளைகளைப் பெற்றெடுப்பதோ அன்றி அதிகம் பிள்ளைகளை தங்கள் குடும்பத்தில் இணைத்துக் கொள்வதற்கு ஆர்வம் கொள்ளாமல் இருப்பதற்குரிய பல காரணங்களை ஆதாரங்களை எடுத்துரைத்தார்.
அடுத்து உரையாற்றிய கனடா வாழ் குடும்ப வைத்தியர் மைலாசன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் கற்று வெளியேறியவர்களின் கனடா அமைப்பின் தான் வகிக்கும் முக்கிய பங்கு தொடர்பாகவும் இந்த வைத்தியர்களின் அமைப்பானது இதுவரை தாயகத்தின் தேவைகளாக இருந்த பல திட்டங்கள் தொடர்பாக உரையாற்றி தற்போதைய அவசரமும் அவசியமும் கொண்டதாக விளங்கும் ‘செயற்கை கருத்தரிப்பு மையத்தை கிளிநொச்சியில் சீராக இயங்கச் செய்வதில் உள்ள சவால்கள் மற்றும் தொழிற்நுட்பக் காரணிகள் மற்றும் அவற்றிக்கு தேவையான நிதியை எவ்வாறு பெற்றுக் கொள்வது போன்ற விடயங்களையும் பகிர்ந்து கொண்டார் அத்துடன் மேற்படி கருத்தரிப்பு மையங்களை மக்களின் தேவைகருதி இயக்குவதற்கு எவ்வாறு யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடமும பக்க பலமாக இருக்கும் என்ற தகவல்களையும் நம்பிக்கையளிக்கும் வகையில் தெரிவித்தார்.
அடுத்து இணையவழி ஊடாக பயனுள்ள கருத்துக்ளைப் பகிர்வதற்காகவும் இந்த கிளிநொச்சி கருத்தரிப்பு மையத்தின் அவசியம் பற்றிய உண்மையானதும் அர்ப்பணிப்புள்ளதுமான எண்ணங்களைச் சுமந்த வண்ணம் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் பேராசிரியருமான சிவலிங்கராஜா ரகுராமன் அவர்கள் முன்வந்தார்.
அவரது கருத்துக்களின் மூலம் அவர்கள் எவ்வளவு சிரத்தையுடன் இந்த திட்டத்தை சீராக இயங்கவைப்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் பிறப்பு விகிதம் குறைவடைவதற்கு கருத்தரிக்கும் உடல் ரீதியான சாதகமான உறுப்புக்களின் திறன் அற்றவர்கள் இவ்வாறான செயற்கை கருத்தரிப்பு நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் மிக அவசியமான என்பதை உணர்கின்றார்கள் என்றும் அனால் மிகுந்த பொருட்செலவுடையதும் கட்டணங்கள் அதிகமாகவும் அத்துடன் சிகிச்சை மேற்கொள்ளப்படும் காலப்பகுதியில் அந்த தாய்க்கு தேவைப்படும் மருந்துகளுக்கான செலவுகள் என்பவும் யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்க குடும்பங்களிற்கு ஏற்புடையதாக இல்லை என்றும் இதனால் இந்த திட்டத்தை சீராக இயங்கச் செய்வதற்கு தொடர்ச்சியான நிதியின் தேவையும் உள்ளதால் நன்கொடையாளர்களின் தேவையோ அன்றி அரசாங்கத்தின் நிதி பங்களிப்போ அன்றி வெளிநாட்டு நிறுவனங்களில் ஆதரவோ நிச்சயம் தேவை என்பதை வலியுறுத்தினார். அவரது உரையிலிருந்து ஒரு தேசமாகவோ அல்லது இனமாகவோ அல்லது சமூகமாக நாமனைவரும் இணைந்து கருத்தரிக்கும் சந்தர்ப்பங்களோ அல்லத சாதகமான உடல்நிலையோ அற்றவர்கள் ஒரு குழந்தையையாவது பெற்றுக் கொள்ளும் நிலையை நாம் ஏற்படுத்தினால் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் அதேவேளை எமது பிரதேசத்திற்கு ஒரு பிரஜையும் கிட்டியுள்ளார் என்ற நிலையை நாம் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும அத்துடன் தனது பங்களிப்பு எல்லையற்று இருக்கும் என்ற தூய எண்ணத்தையும் எடுத்துச் சொன்னார்.
அடுத்து உரையாற்றிய யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியும் பேராசிரியருமான ராஜேந்திரா சுரேந்திரகுமாரன் அவர் அனைவருக்குமான உரையை ஆற்றினார். அன்னார் ஏற்கெனவே சில தடவைகள் கனடாவிற்கு வருகை தந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கும் அத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் தேவையான சில மருத்துவ உபகரணங்கள் மற்றும் உதவிகள்ஆகியவை தொடர்பாக பலரை சந்தித்து உரையாடிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அனுபவத்தோடு இணைத்து அன்றை தலைப்பான ‘செயற்கை கருத்தரிப்பு மையம்’ கிளிநொச்சியில் சீராக இயங்கும் நிலையை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையோடு எவ்வாறு தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் என்பதைக் குறிப்பிட்டு. தொடர்ந்து எமது தாயக மண்ணில் குறிப்பாக வடக்கு கிழக்கில் நிலவும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான சவால்கள் மற்றும் அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் வெளிநாடுகளில் உள்ள சில நிறுவனங்கள் செய்ய முன்வந்துள்ள உதவிகள் தொடர்பாகவும் எடுத்துச் சொல்லி., முக்கியமாக அன்று நாம் கூடியுள்ள நோக்கங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
அத்தடன் நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒரு உதவித் திட்டத்தின் படி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற ‘செய்ற்கை கருத்தரிப்பு மையத்தில் உள்ள முக்கியமான உபகரணம் நவீனப்படுத்தப்பெற்று அங்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பெற்றால் அதனால் பயன்பெறப்போகின்றவர்கள் முதலில் வடக்கு கிழக்கில் வாழும் எமது உறவுகளே என்றும் பின்னர் இந்த திட்டங்கள் விரிவு படுத்தப்பெற்றால் வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளும் அங்கு வந்து ஒரு தாய் மண்ணில் பெற்ற அனுபவமாக தங்கள் கருத்தரிப்பு என்னும் உன்னத பலனைப் பெறலாம் என்று கூறி தற்போதைய நிலையில் யாழ்ப்பாணத்தில் பல மருத்துவர்களும் தாதி நிலை உத்தியோகத்தர்களும் ஏனையவர்களும் இந்த உன்னத பணியில் இணைந்து கொள்ள ஆர்வமாக இருக்கையில் வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள் இந்த திட்டங்களுக்கு உதவிட முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.
தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் பேராசிரியருமான ரவிராஜ் அவர்களும் இந்த திட்டத்தின் அவசியம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் தங்கள் கேள்விகளையும் சொந்தக் கருத்துக்களையும் ஆரோக்கியமான முறையில் அங்கு பதிவு செய்தார்கள்.























