LOADING

Type to search

உலக அரசியல்

நேபாள நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சி

Share

இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்நாட்டின் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் சென்றது. இதையடுத்து நேபாள பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நாட்டை நிர்வகிக்க கடந்த செப்டம்பர் மாதம் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த சில மாதங்களாக நேபாளத்தின் இடைக்கால பிரதமராக செயல்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் புதிதாக தொடங்கப்பட்ட ராஷ்டிரிய சுதந்திர கட்சி, நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராப் பாடகர் பாலேந்திர ஷா களமிறங்கினார். கே.பி.சர்மா ஒலிக்கு அரசுக்கு எதிரான இளைஞர்கள் போராட்டத்தில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி முக்கிய பங்காற்றியது. நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும், 110 பேர் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலும் தேர்வு செய்யப்படுவர். அதன்படி, 165 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்குச்சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் 165 இடங்களில் 161 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 124 இடங்களில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றிபெற்றுள்ளது. ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். நேபாள காங்கிரஸ் 17 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியடைந்தது.