LOADING

Type to search

இலங்கை அரசியல்

செங்கலடியில் வண்டுகள் நிறைந்த உணவு பொருட்கள் வைத்திருந்த உணவக உரிமையாளருக்கு 70 ஆயிரம் அபராதம்: தற்காலிகமாக உணவகத்திற்கு ‘சீல்’

Share

( (கனகராசா சரவணன்)

செங்கலடி பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட உணவகம் ஒன்றின் உரிமையாளரை அபராதமாக 70 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறும் உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் கடந்த 96) திகதி வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரனின் வழிகாட்டலில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன், ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகங்களைச் சோதனையிட்டனர்.

இந்தச் சோதனையின் போது குறித்த உணவகத்தில் உணவு தயாரிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உணவு பொருட்களான கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் கடலை ஆகியவற்றில் பெருமளவிலான வண்டுகள் காணப்பட்டதுடன் உணவகத்தின் கழிவுநீர் முறையான வடிகால் வசதியின்றி திறந்த வெளியில் வெளியேற்றப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தவேந்திரராஜாவினால் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் குறித்த உரிமையாளரை தண்டப்பணமாக 70 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறும் உணவகத்தை திருத்த வேலைகளைச் செய்து முடிக்கும் வரை தற்காலிகமாக மூடுமாறும் கைப்பற்றப்பட்ட வண்டுகள் நிறைந்த பெருமளவிலான உணவுப் பொருட்களை உடனடியாக அழிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.