LOADING

Type to search

இலங்கை அரசியல் உலக அரசியல்

அமெரிக்கா 1953 ஆம் ஆண்டிலேயே ஈரானில் ஆட்சிமாற்றத்தை தொடங்கியது

Share

12 மார்ச் 2026

 

1953 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் CIA மற்றும் பிரிட்டனின் MI6 இணைந்து “ஆபரேஷன் அஜாக்ஸ்” (Operation Ajax) என்ற பெயரில் ஒரு புரட்சி நடவடிக்கையை ஏற்படுத்தின. இதன் மூலம் 1951 ஆம் ஆண்டு ஈரானின் எண்ணெய் தொழில்துறையை தேசியமயமாக்கிய சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முகமது மொசாதெக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

இந்த நடவடிக்கை ஷா முகமது ரேசா பஹ்லவியின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது. பஹ்லவி வம்சம் 1925 முதல் ஈரானை ஆட்சி செய்தாலும், அப்போது உண்மையான அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இருந்தது. அதுவே மொசாதெக்கிற்கு ஈரானின் எண்ணெய் தொழில்த்துறையை தேசியமயமாக்க அனுமதி வழங்கியது.

இந்த புரட்சியை CIA முகவர் கெர்மிட் ரூஸ்வெல்ட் திட்டமிட்டு நடத்தினார். முக்கியமான சிலரை இலஞ்சம் கொடுத்து, மொசாதெக்கிற்கு எதிராகப் பழிவாங்கும் பரப்புரையைத் தொடங்கினார். உண்மையில் மொசாதெக் தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர்- இருந்தாலும், அவரை கம்யூனிஸ்டாக சித்தரித்தனர்.

இந்தப் புரட்சிக்குப் பிறகு அரசியல் அதிகாரம் மீண்டும் ஷாவிடம் சென்றது. ஆனால் ஈரானின் எண்ணெய் மீது முழு அதிகாரம் அவருக்குக் கிடைக்கவில்லை. அதற்கு முன்பு பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனம் BP ஈரானின் எண்ணெய் செயல்பாடுகளை கட்டுப்படுத்தியது. புரட்சிக்குப் பிறகு “செவன் சிஸ்டர்ஸ்” (Seven Sisters) என அழைக்கப்பட்ட ஏழு அமெரிக்க நிறுவனங்கள் (எக்சான், மோபில் உள்ளிட்டவை) எண்ணெய் துறையை கைப்பற்றின. ஷாவுக்குக் கிடைத்த லாபம் பாதிக்கும் குறைவாகவே இருந்தது.

ஆனால் ஷாவின் ஆட்சி அமெரிக்காவுக்கு மிகவும் ஆதரவானதாக இருந்தது. ஈரான் அமெரிக்க ஆயுதங்களையும்

விமானங்களையும் அதிகமாக வாங்கும் நாடாக மாறியது.

ஈரானில் வலுவான இடதுசாரிக் கட்சிகள் ஷாவுக்கு எதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்தன. அந்தக் கிளர்ச்சியின் முக்கியத் தலைவராக மசூத் ரஜாவி இருந்தார். அவர் முஜாஹிதீன்-எ-கல்க் (MEK) என்ற மதச்சார்பற்ற அமைப்பின் தலைவராக இருந்தார். இதனை ஆப்கானிஸ்தானின் முஜாஹிதீன்களுடன் குழப்பப்படக்கூடாது.

இந்த இயக்கம் பாரிசில் அகதியாக இருந்த ஆயத்துல்லா கோமேனி தலைமையிலான இஸ்லாமியர்களுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்தக் கூட்டணி பின்னர் இரஜாவிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பேரழிவாக முடிந்தது. ஷா வெளியேற்றப்பட்டு ஒரு ஆண்டு கூட ஆகாமல், இஸ்லாமியர்கள் முஜாஹிதீன் இயக்க உறுப்பினர்களை பெருமளவில் கொன்றனர்.

இரஜாவி பிரான்சுக்கு தப்பிச் சென்றார்; பின்னர் ஈராக் சென்றார். பிடிபட்ட பெண்கள் புரட்சிகர காவல்படையினரால் சிறைகளில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பிறகு மதகுருக்களுக்கு எதிராக ஈரானில் ஒழுங்குபடுத்தப்பட்ட எதிர்ப்பு இயக்கம் இல்லை.

இது தான் நவீன ஈரானின் சுருக்கமான வரலாறு. இன்று நடக்கும் நிகழ்வுகளை புரிந்துகொள்ள இந்தப் பின்னணி அவசியம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டெஹ்ரானில் ஆட்சிமாற்றத்தை விரும்புகிறார். 1953 இல் மொசாதெக் பதவி நீக்கப்பட்ட காரணம் என்னவோ அதே காரணம் இன்றும் உள்ளது — அது எண்ணெய்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்க் ரூபியோ சமீபத்தில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதில் ட்ரம்ப் தலைமையிலான புதிய உலக ஒழுங்கின் தன்மை வெளிப்படுகிறது. பிப்ரவரி 26 அன்று இஸ்ரேல் ஈரானை தாக்கியது பற்றி தமக்கு முன்கூட்டியே தெரியாது என்று அவர் கூறினார். வாஷிங்டனில் யாருக்கும் தெரியவில்லை என்றும் சொன்னார்.

ஆனால் அதனால் வாஷிங்டனில் யாரும் அதிருப்தியடையவில்லை. இது ரூபியோ கூறிய மறைமுகக் கதையா என்பது தெளிவில்லை. இருப்பினும் ட்ரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு சொல்வதைப் போலவே செய்கிறார் என்பது தெளிவாக உள்ளது.

பல தசாப்தங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மத்திய கிழக்கு கொள்கைகள் ஒன்றுக்கொன்று ஒத்ததாக இருந்தன. இன்று அது ஒரே பார்வையாக மாறிவிட்டது. ட்ரம்ப் மற்றும் அவரது கடுமையான ஆதரவாளர்கள், ஈரானில் ஆட்சிமாற்றம் நடந்தால் அமெரிக்கா இன்னும் சக்திவாய்ந்ததாக மாறும் என்று நம்புகிறார்கள். மேலும் ஈரானின் எண்ணெய் மீது முழு கட்டுப்பாடு கிடைக்கும். இதனால் ஈரானிலிருந்து 90% எரிபொருள் பெறும் சீனாவும் பலவீனமாகும்.

ஈரானுக்கு ஆட்சிமாற்றம் தேவை — கொடூரமான ஆட்சியிலிருந்து விடுபட. ஆனால் அந்த மாற்றம் நாட்டுக்குள் இருந்தே வர வேண்டும். உதாரணமாக 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) நடந்த விடுதலைப் போராட்டத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இன்று ஈரானைப் பெண்களை வெறுக்கும் தீவிரவாதிகள் ஆட்சி செய்கிறார்கள் என்றால், அமெரிக்காவும் (இஸ்ரேலுடன் சேர்ந்து) அதேபோன்ற நிலையை நோக்கிச் செல்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். இரு நாடுகளிலும் பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் செய்ய குண்டுவீச வேண்டும் என்று யாரும் கூறவில்லை.

தீவிர இஸ்லாம் ஈரான் உலகம் முழுவதும் தீவிர இஸ்லாமை ஊக்குவிக்கிறது என்ற கதை நம்பகமாகத் தெரியவில்லை. தீவிரவாதிகள் ஈரானுக்குள் சுதந்திரமாகச் சிந்திக்கும் மக்களையே அதிகமாக தாக்குகிறார்கள்; வெளிநாடுகளில் அல்ல.

இன்று தீவிர இஸ்லாமின் முக்கிய மையங்கள் சிரியா மற்றும் பாகிஸ்தான் ஆகும். தீவிர இஸ்லாமை அழிக்க ஈரானை குண்டுவீசுவது, அமெரிக்காவுக்கு போதைப்பொருள் செல்லுவதைத் தடுக்க வெனிசுலாவை தாக்குவது போன்றதாகும். அந்த போதைப்பொருள் பெரும்பாலும் மெக்சிகோவிலிருந்து வருகிறது.

வரலாற்றில் பல வலுவான தலைவர்கள் தங்கள் எதிரிகளைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர். ஹிட்லர் ரஷ்யாவைத் தாக்கியபோது மிகப்பெரிய தவறு செய்தார். “அந்த சிதைந்த கதவை ஒரு கால் அடி போட்டால் போதும்; முழு கட்டமைப்பும் இடிந்து விழும்” என்று அவர் தனது ஜெனரல்களிடம் சொன்னார். ஒரு கோடைக்காலத்தில் முடியும் என்று நினைத்த போர் நான்கு ஆண்டுகள் நீண்டது.
ட்ரம்ப் மற்றும் நெத்தன்யாகுவின் “விரைவு போர்” கூட நீண்ட சிக்கலான போராட்டமாக மாறக்கூடும்.

ஈரானை நிலத் தாக்குதல் மூலம் கைப்பற்றுவது தற்கொலை முயற்சியாக இருக்கும். அது 1.65 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய நாடு. மலைகள், பாலைவனங்கள், காடுகள் ஆகியவை உள்ளன. அதன் படைகள் உறுதியானவை.

எனவே தற்போதைய சிறந்த தீர்வு — நடுவர் ஒருவரைக் கண்டுபிடித்துப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இது அவசியமாகலாம்.

இந்தப் போர் நீடித்தால் உலகப் பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக இந்தியா கவலைப்படுகின்றது. வளைகுடா நாடுகளில் 4.6 மில்லியன் இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். துபாய் போன்ற பெரிய பொருளாதார மையங்கள் முடங்கிவிட்டன.

இந்தியா நாளும் பாரசீக வளைகுடா வழியாக 2.6 மில்லியன் பீப்பா கச்சா எண்ணெய் பெறுகிறது. எண்ணெய் விலை விரைவில் $100 ஆக உயரலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க பொருளாதாரமும் இதனால் பாதிக்கப்படும். வரலாற்றில் பல பேரரசுகள் இராணுவ சாகசங்களால் வீழ்ந்துள்ளன — ஜெர்மனி, ஜப்பான், சோவியத் இரஷ்யா. இப்போது அமெரிக்காவுக்கும் அதே அபாயம் இருப்பதாக தோன்றுகிறது.

புத்திசாலித்தனம் மேலோங்கினால், அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தியாவை நடுவராக ஏற்று சமாதானத்தை உருவாக்க வேண்டும்.

மிக மோசமான சூழ்நிலையில், அமெரிக்கா போரிலிருந்து விலகினால் இஸ்ரேல் தந்திர அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம். ஆனால் அது இரஷ்யாவும் சீனாவும் தலையிடும் நிலையை உருவாக்கி, நினைக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்.

(கொழும்பில் இருந்து வெளியாகும் Daily Mirror நாளேட்டில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். நக்கீரன்)