LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ரஷியா உதவுகிறது – உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

Share

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படைகள் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானும் ஏவுகணைகள் மூலமும், டிரோன்கள் மூலம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில், வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ரேடார்கள், வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன.

இதை சுட்டிக்காட்டி, அமெரிக்க ரேடார்கள், வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து செயற்கைக்கோள் மூலம் திரட்டப்படும் தகவலை ஈரானுக்கு அளித்து ரஷியா உதவி வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. போரில் ரஷியா தலையிடாமல் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அமெரிக்க ராணுவ தளங்களை தாக்க ஈரானுக்கு டிரோன்களை ரஷியா வழங்கி வருவது 100 சதவீதம் உண்மை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். மேலும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களை துல்லியமாக கண்டறிந்து தாக்க ஈரானுக்கு ரஷியா உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.