ஈரான் – இஸ்ரேல் போர் குறித்து வதந்தி – ஐக்கிய அரபு அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது
Share
மத்திய கிழக்கில் நிலவும் போர்பதற்றம் உலக நாடுகள் முழுவதும் எதிரொலிக்கும் நிலையில், இப்போர் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான தாக்குதல் வீடியோக்கள் மற்றும் ஜோடிக்கப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து, பொதுமக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு, சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 1 வருடம் சிறை மற்றும் 1,00,000 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.25.2 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. சமீபத்திய பட்டியலில் 17 இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 நபர்களின் பெயர்கள் வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இடம்பெற்றுள்ளன. முன்னதாக சனிக்கிழமை அன்று இரண்டு இந்தியர்களை கைதுசெய்ய ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டது.




















