LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஆசிரியர் இடமாற்ற சர்ச்சை: மேன்முறையீட்டு முடிவு வரும் வரை பழைய இடங்களிலேயே பணியாற்ற அனுமதி கோரி போராட்டம்

Share

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலை 26ம் திகதி அன்று ( 26,)வியாழக்கிழமை) மேலும் தீவிரமடைந்துள்ளது.

தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மேன்முறையீடு செய்துள்ள ஆசிரியர்கள், அன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாகத் திரண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

2026 ஜனவரி 1 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வருடாந்த இடமாற்றப் பட்டியல் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டது.

இந்தப் பட்டியலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கருதிய ஒரு தொகுதி ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். இதன் காரணமாக தற்போது இடமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வெளிமாவட்டங்களில் 8 வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றும் ஆசிரியர்கள், இடமாற்றத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி ஆளுநர் அலுவலகம் முன் போராடினர்.

மேன்முறையீடு செய்துள்ள ஆசிரியர்கள், அந்த விண்ணப்பங்களுக்கான இறுதிப் பதில் கிடைக்கும் வரை தங்களைப் பழைய பாடசாலைகளிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும், அதுவரை புதிய இடமாற்றங்களை அமுல்படுத்தக் கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானம் வெளிவரும் வரை அவசரப்பட்டு இடமாற்றங்களைச் செய்ய வேண்டாம் எனவும், ஒரு சிலரது அழுத்தங்களுக்காகத் தமக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.