LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பில் நீதிகோரி போராட்டத்தில் குற்றவாளிகளைக் கைது செய்த பொலிஸாரைப் பாராட்டி மாலை அணிவித்து கௌரவித்த மக்கள்!

Share

((கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் கொத்தியாபுலையில் தாயொருவர் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கக் கோரி இளைஞர் யுவதிகள் கறுப்பு ஆடையணிந்து 1ம் திகதி அன்று புதன்கிழமை (01) காந்திபூங்காவில் கவனயீர்ப்பு அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிசாரை பாராட்டி கௌரவித்தனர்.

மண்முனை வடக்கு இளைஞர் சம்மேளனம் இந்த கவனயீர்பு அமைதிவழி போராட்டத்துக்க ஏற்பாடு செய்ததையடுத்து அன்று புதன்கிழமை காந்தி பூங்காவின் முன்னால் இளைஞர்கள் யுவதிகள் கறுப்பு ஆடைகள் அணிந்தவாறு நுற்றுக்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டனர்.

இதன்போது சமூகத்தை விற்காதே, நீதியை சாகடிக்காதே, எந்த சட்டத்தரணியும் குற்றவாளியை தொடராதே, கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும், என சுலோகங்கள் ஏந்தியவாறு அங்கிருந்து ஊர்வலமாக மட்டு பொலிஸ் நிலைய தலைமையக வீதி சுற்றுவட்டம் சென்று அங்கிருந்து மீண்டும் காந்தி பூங்காவை சென்றடைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து மீண்டும் வாவிகரை வீதி ஊடாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் சென்று அங்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவை சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து பாரட்டுத் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவுக்கு பாராட்டு தெரிவித்து மலர் மாலை அணிவித்து கௌரவித்த பின்னர் ஆர்பாட்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, கடத்திச் சென்று, நகைக்காகக் கொலை செய்து கிணற்றில் வீசிய இத்தகைய கொடூரமான கும்பலுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது எனவும்.

இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாதிருக்கக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் அதேவேளை 24 மணி நேரத்திற்குள் துரிதமாகச் செயற்பட்டு குற்றவாளிகளை கைது செய்த குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் குழுவினருக்கு பாரட்டுக்கள் அதேவேளை இந்த அதிரடி நடவடிக்கை பொது மக்களிடையே பொலிஸார் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.