LOADING

Type to search

இந்திய அரசியல்

கரூரில் வாக்களிக்காதது குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்

Share

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி போட்டியிட்டார். இந்த முறையும் கரூரிலேயே போட்டியிடலாம் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.  மேற்கு மண்டல பொறுப்பாளராக இருந்துவரும் வி.செந்தில்பாலாஜி, கரூரும், கோவையும் தனது இரண்டு கண்களை போன்றது. நான் கோவையில் போட்டியிட்டாலும் தனது உயிர் போன்றது கரூர் தொகுதி என்று தெரிவித்து இருந்தார். கடந்த 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அ.தி.மு.க.வே கைப்பற்றியது. எனவே இந்தமுறை கோவையை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றவேண்டும் என்ற இலக்குடன் வி.செந்தில பாலாஜி மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் அவருக்கு கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமேஸ்வரப்பட்டியில் வாக்குரிமை உள்ளது. அவர் அங்கு வாக்களிக்க வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் கடைசி நேரம் வரை அவர் வாக்களிக்க வராதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இது தொடர்பாக வி.செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு வாக்களிக்க வராதது குறித்து கேட்டபோது, கோவை தெற்கு தொகுதியில் காலை முதல் மாலை வரை அனைத்து வாக்குச்சாவடிக்கும் சென்று கண்காணித்து வந்ததாகவும், மேலும் தெற்கு தொகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்பட்டதாலும் அங்கேயே முகாமிட்டு இருந்ததாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக தனது வாக்கினை கரூர் தொகுதியில் செலுத்த முடியாமல் போனதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.