LOADING

Type to search

இந்திய அரசியல்

வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதி தேர்தல் அலுவலர்கள் தினமும் 2 முறை சென்று ஆய்வு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

Share

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்தது. மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.88 கோடி பேர் வாக்களித்தனர். அதாவது, 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. இது 75 ஆண்டுகால தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம். தமிழகத்தில் கடந்த 1952-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 56.41 சதவீத வாக்குகள் பதிவாகியது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 78.12 சதவீத வாக்குகள் பதிவாகியது. இதுவே தமிழகத்தின் உச்சபட்ச வாக்குப்பதிவாக இருந்தது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்த லில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகியது. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள், பெண்கள் காலையிலே திரண்டு வந்து வாக்களித் தனர். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் வேலைபார்ப்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் திரண்டு வந்து வாக்களித்ததால் நேற்று முன்தினம் வாக்குச்சாவடிகள் அனைத்தும் திருவிழாகோலமாக காட்சியளித்தன. தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் அரசியலில் புதிய வரவான த.வெ.க.வும் தேர்தல் களத்தில் பயணித்ததால் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு உயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. பல்வேறு கணக்குகள் கூறப்பட்டாலும், வாக்காளர்களின் எழுச்சி வாக்கு சதவீதம் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, 21.67 லட்சம் பேர் கூடுதலாக இந்த முறை வாக்களித்து இருக்கிறார்கள். இதற்கிடையே, இந்த உச்சப்பட்ச, வரலாறு காணாத வாக்கு சதவீதம் யாருக்கு சாதகம்? என்ற கேள்வி அரசியல் அரங்கில் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், யாருக்கு வெற்றி என்பது தொடர்பாக வலைத்தளங்களிலும், டீக்கடைகளிலும், ரெயில் நிலையங்களிலிலும், முடி திருத்தம் கடைகளிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு நவீன கேமராக்கள் மூலம் இரவு, பகலாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இடங்களுக்கு தகுந்தபடி 3, 4,5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு அரணின் முதல் அடுக்கில் எந்திர துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணுமை மைய பாதுகாப்பு பணிக்காக சுமார் 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு, பகலாக கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தினமான வருகிற மே 4-ந்தேதி வரை 62 மையங்களும் தீவிர கண்காணிப்பின் கீழ் இருக்கும். வாக்கு எண்ணும் மையங்களுக்குள். செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் தினத்தில் அந்த மையங்களின் வளாகத்திற்குள் பட்டாசு வெடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தினமும் 2 முறை ஆய்வு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.