LOADING

Type to search

இந்திய அரசியல்

காவேரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் – இந்திய கம்யூ. வேண்டுகோள்

Share

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காவேரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சினைகள் இன்றி பகிர்ந்து கொள்வதற்காக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில்,  காவேரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி ஒழுங்காற்று குழு கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டன. அப்போது முதல் இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதி நீர் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றன. இந்த வகையில் காவேரி நதி நீர் மேலாண்மை ஆணையம் 49 முறை கூட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 50-வது கூட்டம் வருகிற 29-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டில்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23-ம் தேதி முடிவடைந்துள்ளது. அதே போன்று இப்பிரச்சினையில் தொடர்புடைய புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 அன்று நடைபெற உள்ளது. அதன் பிறகே இம்மாநிலங்களில் புது அரசுகள் பதவி ஏற்க உள்ளன. தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. காபந்து அரசுகளே பதவியில் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பதவி ஏற்க உள்ள நிலையில், மாநில அதிகாரிகளை வைத்து இக்கூட்டத்தை நடத்துவது பொருத்தமற்றது. எனவே, இக்கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புது அரசுகள் பதவி ஏற்றவுடன் இக்கூட்டத்தை நடத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு காவேரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.