தமிழகத்தை புரட்டிய ”விஜய் சுனாமி”
Share
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்திய சுனாமியில்,பா.ஜ .க. நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கின்றன . தமிழகத்தை இதுவரை ஆண்டுவந்த பிரதான திராவிடக்கட்சிகளான தி.மு.க.,அ .தி.மு.க .கட்சிகளின் கோட்டைகளிலேயே , த.வெ.க பெரிய ஓட்டையைப் போட்டுவிட்டதால் திராவிடக்கட்சிகள் குற்றுயிரும் குலையுயிருமாக உருக்குலைந்து போயுள்ளன.அதன் தலைவர்கள்,பிரபலங்கள் கட்டுப்பணத்தையே இழக்குமளவுக்கு ”விஜய் சுனாமி” தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாவற்றிலும் ஓங்கி அடித்துள்ளது .
கே.பாலா

நடந்து முடிந்த தமிழக சட்ட மன்றத்தேர்தலில் அரசியல் சுனாமியாக தமிழக தேர்தல் வரலாறுகளைப் புரட்டிப் போட்டு தமிழகத்தை இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த திராவிடக்கட்சிகளை,தலைவர்களை நிர்மூலமாக்கி விஸ்வரூப வெற்றி பெற்று 7.5 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தின் 28 ஆவது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் பிரபல நடிகருமான ”இளைய தளபதி விஜய்”என அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திரசேகர் வெற்றிவாகை சூடியுள்ளபோதும் இக்கட்டுரை எழுதப்படும் வரை அவர் முதலமைச்சராக பதவியேற்க ஆளுநரால் அழைக்கப்படவில்லை.
1920-1950 வரையான காலப்பகுதியில் தமிழகம் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டது.இக்காலப்பகுதியில் 13 முதலமைச்சர்கள் (அப்போது ‘பிரீமியர்’ என்று அழைக்கப்படுபவர்)பதவி வகித்தனர் .1950 -1969 வரையான காலப்பகுதியில் தமிழகம் சென்னை மாநிலம் என அழைக்கப்பட்டது 1969 ஆம் ஆண்டு சென்னை மாநிலம் தமிழகமாக (தமிழ்நாடு) மாற்றப்பட்டது.1950 முதல் இன்றுவரை 14 பேர் முதலமைச்சராக பதவிவகித்த நிலையில் தான் தற்போது விஜய் தமிழக சட்டமன்றத்தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளார். அவர் இந்த விஸ்வரூப வெற்றியை எப்படி சாத்தியமாக்கினார் என்பதை மட்டும் இக்கட்டுரையில் பார்ப்போம்.
நடிகராக இருந்த ஒருவரினால் எப்படி ஒரே தேர்தலில் முதலமைச்சராக வெற்றிபெற முடிந்தது என்பதுதான் இன்றுள்ள முக்கிய கேள்வி. இலங்கை அரசியலில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அநுரகுமார என்ற தனி மனிதனுக்காக அடித்த ”அநுர அலை”பிரதான கட்சிகள் ,வேட்பாளர்களையெல்லாம் மூழ்கடித்து புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியதைப்போல் தமிழக சட்டமன்றத்தேர்தலில் தனி ஒருவனுக்காக ஏற்பட்ட ”விஜய் சுனாமி”தமிழகத்தை 60வருடங்களுக்கும் மேலாக இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த திராவிடக்கட்சிகளையெல்லாம் இருந்த இடம் தெரியாது மூழ்கடித்து, இந்தியாவின் பிரபல நிறுவனங்களின் ,அமைப்புக்களின் , தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புக்கள்.எதிர்வு கூறல்களையெல்லாம் புரட்டிப் போட்டு தமிழக அரசியலில் புதிய சரித்திரம் ஒன்றை உருவாக்கி விட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்திய சுனாமியில்,பா.ஜ .க. நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கின்றன . தமிழகத்தை இதுவரை ஆண்டுவந்த பிரதான திராவிடக்கட்சிகளான தி.மு.க.,அ .தி.மு.க .கட்சிகளின் கோட்டைகளிலேயே , த.வெ.க பெரிய ஓட்டையைப் போட்டுவிட்டதால் திராவிடக்கட்சிகள் குற்றுயிரும் குலையுயிருமாக உருக்குலைந்து போயுள்ளன.அதன் தலைவர்கள்,பிரபலங்கள் கட்டுப்பணத்தையே இழக்குமளவுக்கு ”விஜய் சுனாமி” தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாவற்றிலும் ஓங்கி அடித்துள்ளது .
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் எழுதப்பட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுகால திராவிட அரசியலின் இரு துருவப் போட்டியைத் தகர்த்தெறிந்து, `தமிழக வெற்றிக் கழகம்’ எனும் புதிய சக்தி வரலாறு படைத்திருக்கிறது. பண பலம், ஆள் பலம், பாரம்பரியக் கட்டமைப்பு என்று எதைக்கொண்டும் அளவிட முடியாத வெற்றியைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் த.வெ.க தலைவர் விஜய். எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றியடைந்திருக்கும் த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. களமிறங்கிய முதல் தேர்தலிலேயே, 1.5 கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது அந்தக் கட்சி.
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் படைத்திருக்கும் சாதனை, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது. தன்னுடைய ஆதர்ச நாயகனான எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்து, நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றவர் என்ற வரலாற்றுச் சாதனையையும் விஜய் தன் வசப்படுத்தியுள்ளார்.நடிகர்களாக இருந்து புதிய கட்சியைத் தொடங்கி, தங்கள் முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட தலைவர்களின் வாக்கு சதவீதங்களை ஒப்பிடுகையில் விஜய்யின் எழுச்சி அதிசயத்தக்கது .வியப்புக்குரியது.விஜய்யின் இந்தப் பிரமாண்ட வெற்றிக்கு அவரது சினிமா பிம்பம் மிக நேர்த்தியாகவும், திட்டமிடப்பட்ட வகையிலும் உதவியது.
எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வைத் தொடங்குவதற்கு முன், அவர் பல ஆண்டுகள் தி.மு.க.வின் பொருளாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அண்ணாதுரையால் நேரடியாக வளர்க்கப்பட்டவர். அவருக்கு என்று ஒரு அரசியல் வாக்கு வங்கி தி.மு.க.விற்குள்ளேயே இருந்தது. ஆனால் விஜய், எந்தவொரு அரசியல் கட்சியின் பின்புலமும் இல்லாமல், சுயமாகத் தனது ரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றி இந்த சாதனை வெற்றியை தனதாக்கியுள்ளார். கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன ஒரு புதிய கட்சியான த.வெ.க., இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதற்கான காரணங்கள் என்ன?
த.வெ.க-வின் இந்த இமாலய வெற்றிக்கு, விஜய்யின் முகமே பிரதானம். முன்பின் அறிமுகமில்லாத வேட்பாளர்கள், கட்டமைப்பு இல்லாத கட்சி, தொய்வான பிரசாரம் என்று பல நூறு விமர்சனங்களைப் புறந்தள்ளி, தன்னுடைய முகத்தை மட்டுமே பிரசாரத்தில் முன்னிறுத்தி வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார் விஜய். மதுரையில் நடந்த மாநாட்டில் பேசும் போது, “திருப்பரங்குன்றத்தில் விஜய், திருமங்கலத்தில் விஜய், மதுரை மத்தியில் விஜய் என ஒவ்வொரு தொகுதியிலும் இந்த விஜய்தான் நிற்கிறேன். அதை மனதில்வைத்து வாக்களியுங்கள்…” என்று கேட்டுக்கொண்டார் விஜய். அவர் பேச்சு மக்களிடம் எடுபட்டிருப்பதைத்தான் தேர்தல் முடிவுகளும் பிரதிபலிக்கின்றன.
அதுமட்டுமல்ல தீய சக்தி தி.மு.க’, தூயசக்தி த .வெ .க .‘இரண்டே பேருக்கு நடுவில்தான் போட்டியே… ஒன்று TVK இன்னொன்று DMK’ என உணர்ச்சிபூர்வமாக விஜய் முழங்கிய முழக்கமும் தமிழ்நாடு எங்கும் எதிரொலித்துள்ளது. ”தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் நான் மகனாக,அண்ணனாக, தம்பியாக .மாமாவாக .சித்தப்பாவாக இருக்கின்றேன் ‘வீட்டில் இருக்கும் குழந்தைகளெல்லாம் அவரவர் பெற்றோர், தாத்தா, பாட்டிகளிடம் உங்கள் விஜய்க்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்யுங்கள்” என்ற விஜயின் பிரசார யுக்தி சகல குடும்பங்களிலும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் ,இளைஞர்கள் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதும் இந்த விஸ்வரூப வெற்றிக்கு காரணம். வேட்பாளர் பெயரே தெரியவில்லை என்றாலும்கூட, ஒவ்வொரு தொகுதியிலும் த.வெ.க-வுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள்.
1967இல் இருந்து, கடந்த 60 ஆண்டுகளாக, அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளைத்தான் தமிழக மக்கள் தொடர்ந்து பார்த்துவருகிறார்கள். மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என களத்தில் நீண்டகாலமாக பார்த்த பழைய முகங்களையே பார்த்துவருகிறார்கள். இவர்களின் அரசியல் பாணியும் ஒரே மாதிரியாக இருந்துவருகிறது. இதனால், மக்களிடம் ஒருவித வெறுப்பு,அயர்ச்சி ஏற்பட்டிருந்தது இந்தச் சூழலில், புதிதாக ஒருவர் வரும்போது, அவரை மக்கள் வரவேற்றார்கள்.
பொதுவாக, திரைத் துறையிலிருந்து வருபவர்களை தமிழக மக்கள் வித்தியாசமாகப் பார்ப்பவர்கள். சரியானவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களை மீட்பர்களாக ஏற்றுக்கொள்வதற்கு தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மீட்பர்களாகப் பார்த்தவர்கள் தமிழக மக்கள், அதே நேரம், திரைத்துறையிலிருந்து வந்த எல்லோரையும் அவர்கள் அப்படிப் பார்க்கவில்லை. சிவாஜி கணேசன், கே.பாக்யராஜ், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சரத்குமார் என யாரையும் மக்கள் அப்படிப் பார்க்கவில்லை.ஆனால் இப்போது விஜயை மீட்பராகப் பார்த்துள்ளார்கள் . விஜய் தனது பிரசாரத்தில் ஸ்டாலினைத் தவிர வேறு யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஆனால்ஏனைய கட்சியினர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தது இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவும் விஜய்க்கு ஆதரவான வாக்குகளாக கட்சி வேறுபாடின்று மாறின
த.வெ.க-வின் இந்த இமாலய வெற்றிக்கு, விஜய்யின் முகமே பிரதானம். முன்பின் அறிமுகமில்லாத வேட்பாளர்கள், கட்டமைப்பு இல்லாத கட்சி, தொய்வான பிரசாரம் என்று பல நூறு விமர்சனங்களைப் புறந்தள்ளி, தன்னுடைய முகத்தை மட்டுமே பிரசாரத்தில் முன்னிறுத்தி வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார் விஜய். தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் சாதியரீதியாக வாக்கு பலம் பொருந்திய கட்சிகளைத் தங்களுடன் இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தன.ஆனால் விஜய் சாதி, மதங்களைக் கடந்தவராக இருந்தார். அதனால் சாதி, மதங்களைக் கடந்து அவருக்கு வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
த.வெ .க. தலைவர் என்ற பிம்பத்தை விட, `தளபதி’, `அண்ணா’ என்ற பிம்பமே விஜயை இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் நெருக்கமாக்கியது. பெண்கள் மத்தியில் ஒரு நிலையான வாக்கு வங்கியை உருவாக்க உதவியது. சினிமா புகழைத் தாண்டி, தனது ரசிகர் மன்றங்களை ‘விஜய் மக்கள் இயக்கம்’ என மாற்றி, பல ஆண்டுகளாக விலையில்லா உணவகங்கள், ரத்த தான முகாம்கள், கண் தான முகாம்கள் எனத் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுத்தியது அவரது திரைப் பிம்பத்தை நிஜ வாழ்க்கையின் நம்பிக்கையாக மாற்றியது.எம்.ஜி.ஆர் தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பத்திரிகைகளையும், திரைப்படங்களையும், நேரடிப் பிரசாரங்களையுமே நம்பியிருந்தார். அதேபோல் விஜய்க்கு திரைப்படங்களுடன் சமூக வலைத்தளங்கள் என்ற பிரமாண்டமான ஆயுதமும் கிடைத்தது வெற்றியை சாத்தியமாக்கியது.
தமிழக மக்கள் மிகத் தெளிவான பார்வையை உடையவர்கள். அவர்களின் முடிவுகள் எப்போதும் தவறாகப் போனதில்லை. குடும்ப ஆட்சி, மாவட்டம் வரை மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை குடும்ப ஆட்சி, நிர்வாகச் சீர்கேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்ச லாவண்யம் என்ற சூழலை ஓர் அளவுக்கு மேல் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதை இந்தத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திவிட்டார்கள். பணம் கொடுத்தாலும் வாக்கு விழாது என்பதும், மக்கள் செல்வாக்கு இருந்தால் பணமில்லாமலேயே வெற்றிபெறலாம் என்பதும் இந்தத் தேர்தல் மூலமாக நிரூபணம் ஆகியிருக்கிறது. உண்மையிலேயே, இது பெரும் விஜய் புரட்சிதான்.விஜய் சுனாமிதான்.















