LOADING

Type to search

இந்திய அரசியல்

புதுக்கோட்டையில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் ஹைக்கூ ஐந்தாவது உலக மாநாடு கவிதை விரும்பிகளுக்கும் கவிஞர்களுக்கும் பெரும் விருந்தாக அமைந்தது!

Share

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ் மற்றும் ஹைக்க்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு’ கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 17 2026 அன்று புதுக்கோட்டையிலுள்ள மகாராஜ் மகாலில் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாட்டின் தொடக்க விழாவிற்கு புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவருமான கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். செயலாள்ர் மகா.சுந்தர் அனைவரையும் வரவேற்றார்.

அழகப்பா பல்கலைக்கழகம் மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா, மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

ஓவியக் கவிஞர் அமுதபாரதி, கவிஞர் நா.முத்துநிலவன், கவிஞர் முதுவை ஹிதாயத், கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ‘கடந்து வந்த மாநாட்டுப் பாதைகள்’ எனும் தலைப்பில் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன், ‘ஹைக்கூ மாநாடுகள் எதற்காக..?’ எனும் தலைப்பில் கவிஞர் மு.முருகேஷூம் உரையாற்றினர்.

‘தூண்டில்’ மாநாட்டுச் சிறப்பு மலரைக் காவல் கண்காணிப்பாளாரும் கவிஞருமான மணி சண்முகம், ஐபிஎஸ் வெளியிட, முதல் படியை பேராசிரியர் சா.விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். ஹைக்கூ படக்கவிதைப் போட்டிக்கான படங்களைத் தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் வெளியிட, கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் நடைபெற்ற ஹைக்கூ வாசிப்பரங்கில் தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்களும், அயலகப் பகிர்வரங்கில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களும், அந்தமான், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர்களும் கலந்துகொண்டனர்.

மாலையில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில், ஹைக்கூ கவிதைகள், ஹைக்கூ மொழிபெயர்ப்புகள், ஹைக்கூ ஆய்வுகள் அடங்கிய 50 நூல்கள் வெளியிடப்பட்டன.

தமிழ்,ஆங்கிலம் என இரு மொழிகளிகும் ஹைக்கூ கவிதைகளைக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு ‘ஹைக்கூ பேரொளி’ விருதும், மலேசியாவைச் சேர்ந்த கவிஞர்கள் ந.பச்சைபாலன், மகேந்திரன் நவமணி, சிவா லெனின், சிங்கப்பூரைச் சேர்ந்த செலுகை சி.பழனிவேல், இலங்கையைச் சேர்ந்த முகம்மது இர்ஷாத், அந்தமானைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோருக்கு ‘ஹைக்கூ சுடரொளி’ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும்,
தமிழின் மூத்த ஹைக்கூ கவிஞர் அமுதபாரதியின் குடும்ப நல நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

மாநாட்டு நிறைவரங்கில் ‘உலகம் யாவையும் ஹைக்கூ…’ எனும் தலைப்பில்  கவிஞர் தங்கம் மூர்த்தி நிறைவுரையாற்றுகையில், “இன்றைக்கு ஹைக்கூ எனும் மூவரி கவிதை வடிவம் உலகெங்கும் எழுதப்படுகிற புகழ்பெற்ற கவிதை வடிவமாகும். சுருக்கமும் செறிவும் ஹைக்கூ கவிதைகளின் சிறப்பாகும். தமிழில் நமக்கு இரண்டே முக்கால் வரியில் திருக்குறள் இருக்கிறது. ஆனால், ஹைக்கூ கவிதைகளின் சிறப்பு என்னவென்றால், அது தன்னைப் படிக்கும் வாசகனையும் ஹைக்கூ கவிஞராக மாற்றி விடுகிறது. தமிழில் கவிக்கோ அப்துல் ரகுமான், அமுதபாரதி, அறிவுமதி, மித்ரா உள்ளிட்ட முன்னோடிகள் ஹைக்கூவைப் பலரிடத்தும் பரவலாகக் கொண்டு சென்றனர்.

சுருக்கமாய் இருப்பதாலேயே ஹைக்கூ எழுதுவது எளிது என்று என்ணித்தான் பலரும் ஹைக்கூ எழுத வருகிறார்கள். ஆனால், எழுத வந்த பிறகுதான் ஹைக்கூவின் ஆழமும் அகலமும் கண்டு, ஹைக்கூ குறித்த தொடர் தேடலில் இறங்கி விடுகின்றனர். நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்செல்லும் ஹைக்கூ, இந்த உலகை இரசிப்பதற்கான புதிய பார்வையை நமக்கு அளிக்கிறது. தமிழில் ஹைக்கூ எழுத முடியாது, இங்கு எழுதுவது எதுவுமே ஹைக்கூ கிடையாது என்று இன்னமும் சிலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லா இலக்கிய வடிவங்களும் புதிதாகத் தமிழுக்கு வருகையில் இப்படியான எதிர் குரல்கள் கேட்பது வழக்கம். அவரவர் புரிதலில் இன்றைக்கு ஹைக்கூ கவிதைகளை எழுதிவந்தாலும், சரியான கவிதைகளை மட்டுமே காலம் எப்போதும் கொண்டாடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்றார்.

நிறைவாக, “அடுத்த ஆண்டும் மே மாதத்தில் ‘தமிழ் ஹைக்கூ: ஆறாவது உலக மாநாடு’ மலேசியாவில் நடைபெறும்” என்று மலேசியக் கவிஞர் ந.பச்சைபாலன் அறிவித்தார். மாநாட்டில் மூத்த பேராசிரியர் பெ.நா.கமலா, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், மருத்துவர் சலீம், அறிவியல் ஆய்வாளர் ஆர்.ராஜ்குமார், கல்வியாளர் சிகரம் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டு நிகழ்வுகளைக் கவிஞர்கள் கவி.முருகபாரதி, மு.கீதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
நிறைவாக, கவிஞர் சு.பீர்முகம்மது நன்றி கூறினார்.

இணைப்பு: மாநாட்டுப் படங்கள்