LOADING

Type to search

இந்திய அரசியல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அவமதிக்கும், வட இந்திய ஊடகங்களின் வன்மத்தைக் கண்டிக்கிறோமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்

Share

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில்  நடைபெற்ற இனப்படுகொலையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் இன்று வரை உலகத் தமிழர்களின் இதயத்தில் ஆறாத காயமாகவே உள்ளதென்று கூறிய வேல்முருகன், முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது தமிழர் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்று வேதனையென்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, “அந்தத் துயர நினைவுகளை மனதில் ஏந்தி தமிழ்நாடு முதலமைச்சர் திரு . விஜய் அவர்கள் வெளியிட்ட “முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்” என்ற பதிவு மனிதாபிமானத்தின் அடிப்படையிலான உணர்வுப்பூர்வமான வெளிப்பாடே அன்றி, எந்தவிதத் தீவிரவாத ஆதரவும் அல்ல என்பதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதியாகப் பதிவு செய்கிறது என்றும் திரு வேல்முருகன் கூறியுள்ளார். ஆனால், சில வடஇந்திய ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் அந்தப் பதிவைத் திரித்து, தமிழர்களின் இன உணர்வையும் மனிதநேயக் குரலையும் தீவிரவாத அரசியல் என்பது போன்று விவாதிப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியதென்றும் வேல்முருகன் வட இந்திய ஊடகங்களை கண்டித்துள்ளார். இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. தமிழர்களின் வரலாற்று வலியையே அவமதிக்கும் செயலாகுமென்றும் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு என்பது இன்று தோன்றிய ஒன்று அல்ல. பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் அரசியல், மாணவர், சமூக, மனித உரிமை இயக்கங்கள் அனைத்தும் ஈழத் தமிழர்களின் உயிர் பாதுகாப்பு, அரசியல் உரிமை மற்றும் நீதி வேண்டி குரல் கொடுத்து வருகின்றன. அது தமிழின உணர்வு. அது தாய்மொழி சார்ந்த உறவு. அது தொப்புள் கொடி இரத்த சொந்தம் என்றும் வேல்முருகன் பதிவு செய்துள்ளார். அத்துடன் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில் கூட தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என எங்கிருந்தாலும், தமிழ் என்ற தேசிய பண்பாட்டு அடையாளத்தின் கீழ் இணைந்த மக்களாகவே எங்களை உணர்கிறோம். அந்த உணர்வை அவமதிப்பதோ, எங்களின் கண்ணீரை அரசியல் கேலியாக மாற்றுவதற்கோ, எந்த ஊடகத்திற்கும் உரிமையில்லை.என்றும் வட இந்திய ஊடகங்களை சாடியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். எனவே,

முள்ளிவாய்க்கால் நினைவுகளை அவமதிக்கும் வகையில் தமிழர்களைக் குற்றம்சாட்டும் வடஇந்திய ஊடக அரசியலைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழர்களின் இன உணர்வையும் மனிதாபிமானக் குரலையும், விடுதலைப் போராட்ட வரலாற்றையும், தீவிரவாதச் செயல்களைப் போன்று ஒப்பிடும் முயற்சிகளை, வட இந்திய ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.