‘ஆக்கிரமிப்பு தாவர இனங்கள்’ குறித்து நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்
Share
உலக சூழல்தின நிகழ்ச்சியில் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது பெரும் பிரச்சினையாக உயிரினங்களின் பேரழிவு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 150 தொடங்கி 200 உயிரினங்கள் வரை உலகை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன. உயிர்ப் பல்வகைமையின் பேரழிவுக்கு அவற்றின் வாழிடச் சிதைவுக்கு அடுத்தபடியாக, நாம் தெரிந்தோ தெரியாமலோ அறிமுகப்படுத்தும் அந்நிய இனங்களே காரணமாக உள்ளன. இந்த இனங்கள் குறித்து எச்சரிக்கை எப்போதும் அவசியம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக் காட்டியுள்ளார்.
கோண்டாவில் ஸ்ரீஇராமகிருஸ்ணா மகா வித்தியாலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (26.05.2026) அதிபர் கு. திலீபன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையில் வடக்குக் கிழக்கில் பல்கிப் பெருகியிருக்கும் பார்த்தீனியம் செடிகள் 1987 ஆம் ஆண்டு வரையில் இங்கு எங்குமே இருக்கவில்லை. இந்தப் பார்த்தீனியச் செடிகளின் மூல விதைகள் இந்திய இராணுவத்துடன் சேர்ந்தே இங்கு நுழைந்தன. இராணுவத் தளபாடங்களுடனும், உணவுக்காகக் கொண்டுவரப்பட்ட செம்மறி ஆடுகளுடனும், கடுகு விதைகளுடனும் சேர்ந்து ஊடுருவிய இந்த அந்நிய தாவர இனம் குறித்துப் போதிய விழிப்புணர்வு எங்களிடம் இருக்கவில்லை. இதனாலேயே இன்று எமது விவசாய நிலங்களையும் இயற்கைச் சூழலையும் ஒரு ‘பச்சை இராணுவமாகப்’ பார்த்தீனியம் முற்றுகையிட்டுள்ளது.
சீமைக் கருவேலம் பிரித்தானியர்களால் இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட ஒரு வறள் நில மரம். 1950 களில் இதன் விளைவுகளைப் பற்றிப் புரியாமல் அம்பாந்தோட்டையில் உப்புத்தன்மை வாய்ந்த மண்ணைச் சீரமைக்கவும், விறகுக்காகவுமென இவை அதிகளவில் நடுகை செய்யப்பட்டன. இப்போது, அம்பாந்தோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் சீமைக் கருவேலம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவி வெளிகளை ஆக்கிரமித்துள்ளது. இதன் ஆழஊடுருவும் வேர் நிலத்தடிநீரை அதிகளவுக்கு உறிஞ்சி வறண்ட எம்நிலத்தை மேலும் மேலும் பாலையாக்கிக் கொண்டிருக்கிறது.
இப்போது வாஸ்துவின் பெயரால் ‘ஆகாயத் தாமரை’யைப் பலரும் வீடுகளில் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். பூச்செடிகள் விற்பனை நிலையங்களில் ஆகாயத் தாமரை 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது. நாமும் விளைவு தெரியாது ஆபத்தை விலைக்கு வாங்கி வருகிறோம். இவை தவறிக் குளங்களைப் போய்ச் சேருமாயின் விரைவிலேயே குளத்தை மூடி வளர்ந்து நுளம்பின் பெருக்கத்துக்குக் காரணமாவதோடு, நீர்ப்பாசனத்துக்கும் பெருந்தடையாக அமைந்து விடும். எனவே, அந்நிய உயிரினங்களை அறிமுகப்படுத்தும்போது அதன் ஆக்கிரமிப்புத்தன்மை பற்றி முதலில் அறிந்துகொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
















