LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாட்டில் 717 மதுபானக் கடைகளில் 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது

Share

மீதமுள்ள கடைகளை எப்போது முடஉள்ளதென வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபான கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்து 15 நாட்கள் கடந்தும், இதுவரை 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளை அரசு எப்போது மூட உள்ளது என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கேள்வி எழுப்புகிறேன். தமிழ்நாடு முழுவதும் சுமார் 4,765 மதுப்பானக் கடைகள் இயங்கி வருகின்றன. வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து, சென்னை மண்டலத்தில் 99 கடைகள், கோயம்புத்தூர் மண்டலத்தில் 173 கடைகள், மதுரை மண்டலத்தில் 281 கடைகள், சேலம் மண்டலத்தில் 80 கடைகள், திருச்சி மண்டலத்தில் 84 கடைகள் என மொத்தம் 717 அரசு மதுபானக்கடைகளை 15 நாட்களுக்குள் மூடப்படும் என தமிழக அரசு கடந்த 12-ம் தேதி அறிவித்தது. மதுப்பானக் கடைகளுக்கு எதிராக பெண்களின் போராட்டம் இவ்வளவு தீவிரமானதற்கு, குடிநோயாளியான கணவருக்காக மட்டுமல்ல, தன் மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது என்ற அச்சமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். பெண்களின் எழுச்சியை அலட்சியப்படுத்தாமல் கள்ளச்சாராய வணிகத்தை முழுமையாகத் தடுக்க வேண்டும். மேலும், படிப்படியாக அரசு மதுபானக் கடைகளை குறைத்து, கள்ள வணிகத்தைத் தடுத்தால்தான், அமைய உள்ள புதிய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என கடந்த ஏப்ரல் 28-ம் தேதி அறிக்கை மூலம் வலியுறுத்தியிருந்தேன். அரசு உத்தரவிட்டு 15 நாட்கள் கடந்த நிலையில், தற்போது வரை 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, நாள்தோறும் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக விற்பனையாகும் கடைகளையும், அருகாமையில் மற்றொரு கடை உள்ளதா என ஆய்வு செய்தும் அப்படிப்பட்ட கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. அதாவது 60.81 சதவீத கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 39.19 சதவீத கடைகளை மூட வாய்ப்பில்லை என்றே டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்தகால ஆட்சியாளர்கள் மது வணிகம் மூலம் கிடைக்கும் வருவாயை முக்கியமாகக் கருதினர். இந்த ஆட்சி மது வணிக வருவாய்க்கு பதிலாக வேறு வழிகளில் வருவாயைப் பெருக்கிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக வருவாய் பெறும் வழிவகைகளை ஆய்வு செய்ய அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை பெறலாம். எனவே, மீதமுள்ள 281 மதுபானக்கடைகளை அரசு எப்போது மூட உள்ளது என கேள்வி எழுப்புகிறேன்.