லெபனானில் ஐ.நா. அமைதிப்படையினர் மீது தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது
Share
லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலத்தில் உள்ள மர்ஜியுன் பகுதியில் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையை சேர்ந்த அமைதிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அங்கு பணியில் இருந்த அமைதிப்படையினர் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் செர்பியா நாட்டை சேர்ந்த அமைதிப்படை வீரர் சார்ஜென்ட் மிலோவன் ஜோவனோவிக் உயிரிழந்தார். மேலும் ஸ்பெயின் மற்றும் எல் சால்வடாரைச் சேர்ந்த 2 அமைதிப்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் தெற்கு லெபனானில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ஹரிஷ் பார்வதனேனி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதிப்படையினர் மீதான தாக்குதல் கண்டிக்கத்தது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட செர்பிய புளூ வீரரின் குடும்பத்திற்கும், செர்பியாவிற்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்த அமைதிப்படை வீரர்கள் விரைவில் குணமடைய விழைகிறோம். ஐ.நா. சபை ஆணைகளின் கீழ் செயல்படும் ஐ.நா. அமைதிப்படை வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
















