மீண்டும் இந்தியா கூட்டணியில் தி.மு.க. இணைய வேண்டுமென ஜோதிமணி கூறியுள்ளார்
Share
இந்தியா கூட்டணியில் மீண்டும் தி.மு.க. இணைய வேண்டுமென கரூர் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். கரூர் எம்.பி. ஜோதிமணி அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த ஆட்சி 3 மாதங்கள் கூட நிலைக்காது என தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறுவது சரியல்ல. மக்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதே போல் கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க.வுக்கு பெரும்பான்மை தேவைப்பட்டபோது காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தோம். அந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தது. இதே போல் தமிழ்நாட்டின் நலன் கருதியும், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, வி.சி.க. ஆதரவோடு தமிழக வெற்றி கழக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். 6 மாதங்களுக்கு பிறகு தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனத்தை முன்வைக்கலாம். அதற்கு முன்பாக அரசு கவிழ்ந்து விடும் என ஜோதிடம் சொல்வது அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் பொருத்தமாக இருக்காது. தமிழக வெற்றி கழகவும் இந்தியா கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நாட்டின் நலன் கருதி வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும். தி.மு.க.வுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி கட்சியாக நீடித்தோம். நேற்று வரை புகழ்ந்து தள்ளி விட்டு இன்று கூட்டணி இல்லை என்பதால் விமர்சனம் செய்வது அழகல்ல. கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியையும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து போட்டியிட்டோம். ஆனால் அவர்கள் தற்போது இண்டி கூட்டணிக்கு வந்து விட்டார்கள். அதே சூழல் தமிழகத்திலும் வர வேண்டும். கூட்டணியில் இருந்து விலகியதை தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
















