மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிய இயக்குநர் பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
Share
இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா அதிகாலையில் காலமானார். கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர் பாரதிராஜா. திரையுலகில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதலில் குரல் கொடுத்தது பாரதிராஜாதான். குழந்தை போன்றவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் என் நடிப்பை பிடிக்காது என வெளிப்படையாக கூறுவார்.
அவர் மறைவு திடீரென்று நடக்கவில்லை. உயிரோடு இருக்கும் போதே அவரை பார்க்கணும்னு சொன்னேன். சரியாகிடுவாரு அப்போ வாங்கனு சொல்லிட்டே இருந்தாங்க. லாஸ்ட் டைம்ல அவர உயிரோட பார்க்க முடியாமலே போயிடுச்சு” என்று நடிகர் ரஜினிகாந்த் வருத்தத்துடன் கூறினார்.
















