மலையக இளைஞர்களின் மேம்பாட்டிற்காக சேவையாற்றும் ‘மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின்’ 20 வது ஆண்டு விழாவில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா
Share
மலையக கல்வி அபிவிருத்தி மன்ற (Up-Country Education Development Society – UEDS) 20ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக கடந்த இருபது ஆண்டுகளாகச் செய்துவரும் அர்ப்பணிப்பான சேவைக்காக மனறத்தினருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
மன்றத்தின் நிறுவுநர்கள், நிர்வாகிகள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் இருபது ஆண்டுகளாக மேற்கொண்ட அர்ப்பணிப்பான பணியால் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்களுக்கு கல்வி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், மலையக சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மலையகக் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் பயணம், சமூக அடிப்படையிலான ஒரு முயற்சி கல்வியின் மூலம் எவ்வாறு மனிதர்களின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளித் தமிழர் சமூகம், இந்தியா மற்றும் இலங்கை இடையேயான வரலாற்று மற்றும் நாகரிக உறவுகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதாகவும், பல தலைமுறைகளாக இலங்கையின் பன்முக கலாசார வளர்ச்சிக்கு பங்களித்ததுடன், இரு நாடுகளுக்குமிடையிலான உயிர்ப்பாலமாகவும் விளங்கிவருவதாகவும் அவர் கூறினார்.
கல்வியே சமூக மாற்றத்திற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் மிகச் சிறந்த கருவி என இந்தியா நம்புவதாகவும், அதனடிப்படையில் இலங்கையின் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ச்சியாக ஆதரவு வழங்கிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
CEWET கல்வி உதவித்தொகை விரிவாக்கம்
1946 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET) ஊடாக பல தலைமுறைகளாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவித்தொகைகளால் பல மாணவர்கள் தங்கள் கல்விக் கனவுகளை நனவாக்கியுள்ளனர்.
இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது CEWET உதவித்தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டதாகவும், பயனாளிகளின் எண்ணிக்கை 350 இலிருந்து 700 ஆக இரட்டிப்பாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உயர்தர மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 ஆகவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.7,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள்
இந்திய கலாசார உறவுகள் பேரவை (ICCR) மற்றும் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கல்வி உதவித்தொகைகள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் தொழில்முறை பரிமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் மூன்று மாத ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட தோட்டப் பாடசாலை ஆசிரியர்கள் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறைகளில் பயிற்சி பெற்றனர்.
ரூ.75 கோடி இந்திய நிதி உதவி
இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200ஆம் ஆண்டு நினைவாக இந்திய அரசு ரூ.75 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிதி உதவித் தொகுப்பை அறிவித்துள்ளது.
இதன் கீழ் புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியின் நவீனமயமாக்கலுக்காக சுமார் 101 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், பெருந்தோட்டப் பகுதிகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்காக சுமார் 600 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வீடமைப்புத் திட்டங்கள்
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காக 4,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சமீபத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது நான்காம் கட்டத்தின் கீழ் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் 1,300 வீடுகளின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதுடன், மேலும் 2,000 வீடுகளுக்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
OCI அட்டை சலுகை விரிவாக்கம்
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்னனின் விஜயத்தின் போது, வெளிநாட்டுவாழ் இந்திய குடியுரிமை (OCI) அட்டைக்கான தகுதித் திட்டமும் விரிவுபடுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இலங்கை அரசு வழங்கிய பிரஜா உரிமை சான்றிதழ் உள்ளிட்ட புதிய ஆவணங்களை சேர்த்துக் கொள்ளல்.
முன்னர் நான்காம் தலைமுறை வரையிலேயே வழங்கப்பட்ட இந்தச் சலுகை, இலங்கையைப் பொறுத்தவரை தற்போது ஐந்தாம் மற்றும் ஆறாம் தலைமுறையினருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் இந்தியாவுடனான உறவுகள் மேலும் வலுப்பெறும் என அவர் தெரிவித்தார்.
கல்வி மூலம் மலையகத்தின் ஒளிமயமான எதிர்காலம்
இந்தியா – இலங்கை உறவு பகிரப்பட்ட மதிப்பீடுகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், கல்வி இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய கருவியாகத் தொடரும் என்றும் அவர் கூறினார்.
மலையகக் கல்வி அபிவிருத்திச் சங்கம் போன்ற அமைப்புகள், இந்த இலக்குகளை அடிமட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும், எதிர்காலத்திலும் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக முன்னேற்ற அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் சக்தியாகத் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இறுதியாக, அடுத்த இருபது ஆண்டுகளும் மலையகக் கல்வி அபிவிருத்திச் சங்கம் கல்வி, நம்பிக்கை மற்றும் அதிகாரமளிப்பின் மூலம் எதிர்கால தலைமுறைகளுக்கு மேலும் பல நன்மைகளை வழங்க வேண்டும் என வாழ்த்திய அவர், சங்கத்தின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துத் தெரிவித்தார்.
தொகுப்பு எச்.எச். விக்கிரமசிங்க- கொழும்பிலிருந்து
















