பாடாதே?’அந்த’ப் பாட்டைப் பாடாதே!
Share
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
சில பாடல்களை பாடியதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் உண்டு.அந்தப் பாடல்களை நாதஸ்வரத்தில் இசைத்ததற்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டவர்களும் உண்டு. வடமராட்சி நாகர்கோவிலில் ஒரு திருவிழாவில் அவ்வாறு போர்க்கால பாடல்களை நாதஸ்வரத்தில் வாசித்தவர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.அதனால் நினைவு நாட்களின் போது தடைக்குள் வரக்கூடியவை என்று கருதப்பட்ட பாடல்களை தவிர்த்து ஏனைய பாடல்கள் ஆங்காங்கே இசைக்கப்பட்டன.
கடந்த வாரம் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தேனிசை செல்லப்பாவின் “பச்சை வயலே” என்ற பாடலைப் பாடிய பாடகர் பின்னர் விசாரிக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பாடலில் வரும் “தமிழீழம்” என்ற வார்த்தையை மேடையில் பகிரங்கமாக உச்சரித்தது பிரச்சினையா?
இது நடந்து கிட்டத்தட்ட ஒரு கிழமைக்குப் பின்,வவுனியாவில்,பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள நரசிம்மர் ஆலயத்தில் ஓர் இசை நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி தொடங்க முன்பு ஒரு போலீஸ்காரர் எழுதப்பட்ட ஓர் ஆவணத்தை மேடையில் ஏறி வாசித்தார். அதில் அந்த நிகழ்ச்சியில் என்னென்ன செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த அறிவுறுத்தல்களில் ஒன்று அங்கு நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாடல்களை பாடக்கூடாது என்று இருந்தது.
இது நடந்த சில நாட்களின் பின் யாழ்ப்பாணத்தில், கைதடி பகுதியில் கைதடி வடக்கு கயிற்றசிற்றி கந்தசாமி கோவில் 11ஆவது நாள் விழாவிற்காக ஓர் இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்து வருகை தந்த “சரிகம” பாடகர்களும் உள்ளூர் பாடகர்களும் இணைந்து நடாத்திய ஓர் இசை நிகழ்ச்சி அது.அந்த நிகழ்ச்சிக்காக அனுமதி கேட்டுச் சென்ற ஏற்பாட்டாளர்களிடம், அங்கு பாடப்பட இருக்கும் பாடல்கள் தொடர்பான விபரங்களைத் தருமாறு போலீசார் கேட்டிருக்கிறார்கள். என்னென்ன பாடல்கள் பாடப்படும் என்று அவர்கள் வழங்கிய பட்டியலில் இருந்து ஒரு தொகுதி பாடல்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பாடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றப்பட்ட பாடல்களில் ஒன்று “விடைகொடு எங்கள் நாடே” என்ற பாடல்.”கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் வரும் ஒரு பாடல்.அதாவது தமிழ்த் திரைப்பட பாடல்களில் சிலவற்றுக்கும் தடை என்று பொருள்.
இதன்பின் மற்றொரு சம்பவம்,அதுவும் வவுனியாவில்,கிடாச்சூரி கோவிலில் நடந்தது.அங்கே இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக ஒரு போலீஸ்காரர் மேடையில் ஏறி அறிவுறுத்தல்களை வாசித்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு போலீசார் வழங்கிய கால எல்லையை தாண்டி நிகழ்ச்சி தொடர்ந்தபோது, அதற்கு மீண்டும் போலீஸிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது,அப்பொழுது மீண்டும் ஒரு போலீஸ்காரர் மேடையில் ஏறி அறிவுறுத்தல்களை வாசிக்க முற்பட்டிருக்கிறார்.அந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்த ஊடகச் செயற்பாட்டாளரும் ஊடக ஆசிரியருமான,ராஜேஸ்வரன் அதைத் தானே அறிவிப்பதாக கூறியிருக்கிறார்.
இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும்போது அதாவது ஸ்பீக்கர் கட்டும்போது அதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.அண்மை மாதங்களாக இந்த நடைமுறை இறுக்கமானதாக மாற்றப்பட்டிருக்கிறது. போலீசாரிடம் அனுமதி கேட்டாலும் அவர்கள் கடைசி நேரத்தில்தான் அனுமதி தருகிறார்களாம். அப்படித் தந்த பின்னரும் நேரக் கட்டுப்பாடு விதிக்கிறார்கள். அண்மை வாரங்களாக மேடைகளில் ஏறி அறிவுறுத்தல்களையும் வழங்குகிறார்கள்.
ஏற்கனவே தீபச்செல்வனின் நூலுக்கு தடை.அதன் பின் உரும்பிராயில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில் சாந்தனின் மகன் ஒரு பாடலைப் பாடும் போது, அதனை போலீசார் இடையில் நிறுத்தினார்கள். அவ்வாறான பாடல்களை பாடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்கள். அதன்பின் யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் ஒரு கோவிலில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றை மகிமைப்படுத்தும் பாடல்களை பாடியதாக கூறி, கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு ராப் பாடகர் கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேற்கண்டவைகளை தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? அரசாங்கம் எழுத்துக்கும் பாடல்களுக்கும் பயப்படுகிறதா?
2009ஐ உடனெடுத்து வந்த ஆண்டுகளில் நினைவு நாட்களை பெருமெடுப்பில் திட்டமிட்டு அனுஷ்டிக்க முடியவில்லை.2015ல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர்தான் நினைவு நாட்களை ஒப்பீட்டளவில் வெளிப்படையாக அனுஷ்டிக்கக் கூடியதாக இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக வந்த நிலைமாறு கால நீதிக்கான ஐநா தீர்மானத்தின்படி தமிழ் மக்களுக்கு நினைவு கூரும் உரிமை உண்டு. எனினும் நாட்டில் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றை வெளிப்படையாகப் போற்றும் பாடல்களை பாடுவதற்கு அல்லது அதன் சின்னங்களை கொடிகளை பயன்படுத்துவதற்கு பொதுவாக தடை காணப்பட்டது. அதாவது நிலைமாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கு ஐ.நா. முயற்சித்தது என்று பொருள்.
அவ்வாறு சில பாடல்களை பாடியதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் உண்டு.அந்தப் பாடல்களை நாதஸ்வரத்தில் இசைத்ததற்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டவர்களும் உண்டு. வடமராட்சி நாகர்கோவிலில் ஒரு திருவிழாவில் அவ்வாறு போர்க்கால பாடல்களை நாதஸ்வரத்தில் வாசித்தவர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.அதனால் நினைவு நாட்களின் போது தடைக்குள் வரக்கூடியவை என்று கருதப்பட்ட பாடல்களை தவிர்த்து ஏனைய பாடல்கள் ஆங்காங்கே இசைக்கப்பட்டன.
குறிப்பாக,அதன் பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் வேட்பாளர் ஆகிய அங்கஜன் ராமநாதன் தனது பிரச்சாரத் தேவைகளுக்காக ஒரு தொகுதி பாடல்களை உருவாக்கினார். வன்னியில் போர்க்கால பாடல்களை பாடிய இசைக்கலைஞர்களை வைத்து அவர் தயாரித்த பாடல்களுக்கு அரசாங்கத்திடமும் புலனாய்வுத்துறையிடமும் அனுமதி பெறப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அந்தப் பாடல்கள் 2009க்கு முற்பட்ட காலத்தை மறைமுகமாகப் போற்றுபவை. அத்தேர்தலில் அங்கஜனுக்கு யாழ்ப்பாணத்திலேயே அதிகூடிய வாக்குகள் கிடைத்தன.
அதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் சிலர் தாங்களும் அவ்வாறான பாடல்களை தயாரித்தார்கள்.அந்தப் பாடல்களும் 2009க்கு முற்பட்ட காலத்தை ஏதோ ஒரு விதத்தில் போற்றுபவைதான். அதாவது தேர்தல் பிரச்சார தேவைகளுக்கு அவ்வாறான பாடல்களை பயன்படுத்தும் ஒரு போக்கை தொடக்கி வைத்ததே தென்னிலங்கை மைய கட்சிகள்தான்.வாக்கு வேட்டைக்கு அப்படிப்பட்ட பாடல்கள்,கருப்பொருட்கள் தேவைப்பட்டன.தமிழ்ச் சூழலில் அதுபோன்ற பாடல்களைப் பாடத் தேவையான இசைச்சூழலை ஊக்குவித்த காரணிகளில் அதுவும் ஒன்று.
2015க்குப்பின் நினைவு கூர்வதற்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகரித்தது. அதேசமயம் தமிழகத்திலிருந்து கலைஞர்கள் ஈழத்துக்கு வருவதும் இங்கு இசை நிகழ்ச்சிகளை நடத்துவதும் படிப்படியாக அதிகரித்தது.குறிப்பாக,பலாலிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான வான்வழி போக்குவரத்து பாதை திறக்கப்பட்ட பின் இந்தியாவில் இருந்து பாடகர்களையும் இசைக்குழுக்களையும் காசு கொடுத்து அழைக்கும் நிலைமை படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தது.
இது ஒரு புதிய போக்கு அல்ல.ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே இது காணப்பட்டது.காசு புரளும் பெருங்கோவில்கள் தமது திருவிழாக்களின்போது தமிழகத்தில் இருந்து இசைக் கலைஞர்களை அழைத்துக் கொண்டு வருவார்கள்.தமிழகத்திலிருந்து சின்னமேளக் கச்சேரிகளும் வந்து போவதுண்டு. கடந்த நூற்றாண்டுகளிலும் இது காணப்பட்டது.
2009க்குப் பின் மீண்டும் பாடகர்களையும் இசைக் குழுக்களையும் கலைஞர்களையும் அழைக்கும் போக்கு மெல்லமெல்லத் தலையெடுத்தது. அதிகம் காசு புரளும் கோவில்கள்,அதிகம் காசு புரளும் உபய காரர்கள்,குறிப்பாக,புலம்பெயர்ந்த தமிழ் நிதியைத் திரட்டக்கூடிய உபயகாரர்கள் பெருங்காசை கொட்டி தமிழகத்திலிருந்து பாடகர்களையும் இசைக் குழுக்களையும் ஈழத்துக்கு கொண்டு வந்தார்கள்.
அதேசமயம் “சரிகமப” போன்ற தமிழக தொலைக்காட்சி தொடர்களில் ஈழத்துப் பாடகர்கள் பாடகிகள் பாடத் தொடங்கினார்கள்;வெற்றியும் பெற்றார்கள்.இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக சரிகமப மேடைகளில் புகழ்பெற்ற பாடகர்களை இசை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும் ஒரு போக்கு மேலெழுந்தது.இந்தப் பாடகர்களுக்கும் பாடகிகளுக்கும் இசைக்குழுக்களுக்கும் கொடுக்கப்படும் காசு ஒப்பீட்டளவில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட திரைத்துறை “செலிபரேட்டிகளுக்கு” கொடுக்கும் காசை விட குறைவானது.கிட்டத்தட்ட ஒரு பாடகருக்கு இலங்கைக் காசில் 4 லட்சத்துக்கும் குறையாமல் தேவைப்படும். இந்த மேடைகளில் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஈழத்து பாடகிகளும் தமிழக பாடகர்களோடு இணைந்து பாடினார்கள்.
சரிகமப மேடைகளில் ஈழத்துப் பாடகர்கள் ஜொலிக்க தொடங்கிய அதே காலகட்டத்தில் ரப் பாடகரான வாகீசனும் தமிழக தொலைக்காட்சி தொடர் ஒன்றில் பிரபல்யமானார்.யாழ்ப்பாணத்து தமிழில் அவர் கதைத்தார். அவருடைய ரப் பாடல்களும் யாழ்ப்பாணத்து தமிழை யாழ்ப்பாணத்தின் உச்சரிப்போடு மொழிந்தன.வாகீசன் அணியின் “காக்கும் வடிவேல்” பாடல் “வைரல்” ஆகியது.அந்த பாடகர் அணிக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக கிடைத்தது. தாயகத்திலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும்அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்கு லட்சக்கணக்கில் காசு திரள்கிறது.சரிகமப பாடகர்களும் வாகீசனின் குழுவும் இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கமைப்பவர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தனர்.
இந்த இசை நிகழ்ச்சிகளில் தாயக பாடகர்கள் போர்க்காலப் பாடல்கள் சிலவற்றையும் பாடத் தொடங்கினார்கள்.மேற்படி நிகழ்ச்சிகளும் மேடைகளும் பெருமளவுக்கு வணிக மேடைகள்தான்.லாப நோக்கமுடையவைதான்.அவை வெளிப்படையான அரசியல் மேடைகள் அல்ல அரசியல் நிகழ்ச்சிகளும் அல்ல. வணிக மேடைகள்.ஆலய மேடைகள்.எனவே அந்த வணிக மறைப்புக்குள் தாயக பாடல்கள் மெல்ல மெல்ல தலை நீட்டின.பின்னர் வணிக மேடைகள் அல்லாத மேடைகளிலும் குறிப்பாக போராளிகள் நலன்புரி அமைப்பின் மேடைகள்,வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 ஆவது நினைவு நாள்…போன்ற மேடைகளிலும் போர்க் காலப் பாடல்கள் பாடப்படும் நிலைமை படிப்படியாக அதிகரித்து வந்த ஒரு சூழலில்,அரசாங்கம் பாடல்களைக் கண்டு விழிப்படைந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைவு நாட்களை அனேகமாகத் தடுக்கவில்லை.சில உதிரியான சம்பவங்களைத்தவிர பெரும் போக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைவு கூர்தலை கண்டும் காணாமல் விட்டது எனலாம்.இப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள்,முன்பு நினைவு நாட்களின் போது பகிரங்கமாக ஸ்பீக்கரில் ஒலி பெருக்குவதற்கு பயந்த பாடல்கள் சிலவற்றை ஆங்காங்கே கேட்கக்கூடியதாக இருந்தது.எனினும் இப்பொழுது அரசாங்கம் இந்த விடயத்தை கண்டும் காணாமல் விடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறதா?
இந்த அரசாங்கம் தென்னிலங்கையில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவு. தென்னிலங்கையில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் விசேஷமான, ரசனைக்குரிய பகுதி அங்கே காணப்பட்ட கலைஞர்களின் கலை வெளிப்பாடுகள்தான். அது கலைப்பெறுமதிமிக்க ஒரு போராட்டம். ஒரே சமயத்தில் ஜனரஞ்சகமானவைகளாகவும் படைப்புத்திறன் மிக்கவைகளாகவும் அக்கலைஞர்களின் வெளிப்பாடுகள் காணப்பட்டன.தென்னிலங்கையில் நடந்த மக்கள் எழுச்சிகளின் பிரதானமான ஒருபகுதி அதன் கலையாக்கம்.அங்கே ஆடலும் பாடலும் போராட்டத்தின் பகுதிகளாக காணப்பட்டன.மக்களைக் கவர்ந்திழுக்கும் பகுதிகளாகக் காணப்பட்டன.
அந்தப் போராட்டத்தின் கனிகளை “ஹைஜாக்” பண்ணிய ஜேவிபிக்கு இது நன்கு தெரியும்.ஒரு போராட்ட இயக்கமாக ஜேவிபிக்கு தனிப்பட்ட முறையில் இசையின் பெறுமதி விளங்கும்.இசை எப்படி மக்களை ஒன்றுதிரட்டும் என்பது ஜேவிபிக்கு நன்கு விளங்கும்.இந்த விளக்கம்தான் இப்பொழுது பாடல்களுக்குப் போடப்படும் தடையா?















